For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சோனியா சொன்னதால் ராஜினாமா செய்ய உத்தரவிட்ட மன்மோகன்சிங்"- ஜெயந்தி கடிதத்தால் புதுசர்ச்சை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவால் மத்திய அமைச்சராக இருந்த தம்மை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டதாக ஜெயந்தி நடராஜன் எழுதியிருக்கும் கடிதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் திடீரென அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார் ஜெயந்தி நடராஜன்.

Jayanthi Natarajan accuses Rahul Gandhi of interference in environmental clearances

அண்மையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் தாம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது, ராகுலால் தமக்கு ஏற்பட்ட சிக்கல்கள் எனப் பலவற்றை விவரித்துள்ளார்.

அதில் ஒரு பகுதி:

மிகவும் தாங்க முடியாத மனவேதனையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் விசுவாசமாக கட்சிக்காக உழைத்திருக்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்காக 4 தலைமுறைகளாக பாடுபட்டு வருகிறோம். நான் 4வது தலைமுறையைச் சேர்ந்தவர். 3 தலைமுறைகளுக்கு முன்பு எனது குடும்பத்தினர் நாட்டு விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர்கள்.. நாடு விடுதலை அடைந்த பின்னர் காங்கிரஸ் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எங்களை அர்ப்பணித்துக் கொண்டோம்.

என்னுடைய தாத்தா தமிழக முதல்வராக இருந்தவர். என்னுடைய அத்தை ஓய்வில்லாத சமூக சேவகர். 1984 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். 4 முறை எம்.பி.யாக, இணை அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன். நான் நாட்டுக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகாலத்தில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதியன்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அவரது அலுவலகத்துக்கு சென்ற போது அவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று இதைத் தான் என்னிடம் சொன்னார்.. "ஜெயந்தி, உங்களது சேவை கட்சிக்கு தேவை என்று காங்கிரஸ் தலைவர் (சோனியா) என்னிடம் கூறியுள்ளார்" என்றார். எனக்கு இது புதிராக இருந்தது.

"ஓகே சார்.. நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டேன்.

"அவர் (சோனியா) நீங்கள் ராஜினாமா செய்ய விரும்புகிறார் என்றார்..

அதிர்ச்சியடைந்த நான் " ராஜினாமாவா சார்?" என்றேன். மேலும் "எப்போது" என்றும் கேட்டேன்..

அதற்கு அவர் " இன்று" என்று கூறினார். நான் மீண்டும் 'இது காங்கிரஸ் தலைவர் (சோனியா) விருப்பமா? என்று கேட்டேன். நான் மறுபேச்சு பேசவில்லை. உங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தேன்.

கட்சிப் பணிக்காக என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பின்னர் உங்களை சந்திக்க நேரம் கேட்டேன். இருப்பினும் உங்களிடம் தொலைபேசியில் பேச முடிந்தது. அப்போது, பிரதமர் மன்மோகன்சிங் கூறியதை மீண்டும் உங்களிடம் கூறினேன். நீங்கள் கட்சிப் பணிக்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினீர்கள்.

அதன் பின்னர் அரை மணிநேரத்தில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து என்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். அதை பிரதமர் மன்மோகன்சிங் உடனே ஏற்றும் கொண்டார்.

நான் ராஜினாமா செய்த மறுநாள் ஊடகங்களில் அது தலைப்புச் செய்தியாக வெளியானது. நான் கட்சிப் பணிகளுக்காகத்தான் ராஜினாமா செய்திருக்கிறேன் என்று முதலில் அனைத்து ஊடகங்களுமே செய்திகள் வெளியிட்டன.

ஆனால் பிற்பகலில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.. ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து நான் கட்சிப் பணிக்காக ராஜினாமா செய்யவில்லை என்கிற மாதிரியான செய்திகளை வெளியிடுமாறு கூறப்பட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்தன.

அதன் பிறகு ஊடகங்கள் எனக்கு எதிரான செய்திகளை வெளியிட்டன. நான் ராஜினாமா செய்த அதே நாள் டெல்லியில் நடைபெற்ற ஃபிக்கி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சுற்றுச் சூழல் அனுமதியின் பெயரால் தொழில்திட்டங்கள் தாமதமாவதாகவும் இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பேச்சை யூ டியூப்பில் முழுமையாக கேட்டேன். அதன் பிறகு ஃபிக்கி கூட்டத்தில் தொழிலதிபர்களிடம் பேசுவதற்கு ஏதுவாகத்தான் உங்களை ராஜினாமா செய்ய சொன்னார்களா? என்றும் கூட சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டனர்.

என்னைப் பொறுத்தவரையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் கடைபிடித்த அணுகுமுறையைத்தான் பின்பற்றினேன். எந்த ஒரு திட்டத்தையும் தாமதப்படுத்தும் நோக்கம் எனக்கு இருந்தது இல்லை. இதை என்னால் எப்போதும் நிரூபிக்கவும் முடியும்.

இது தொடர்பாக ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பினேன். நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டது, அவரது ஃபிக்கி பேச்சு குறித்து குறிப்பிட்டுவிட்டு நான் செய்த தவறு என்ன என்றும் கேட்டிருந்தேன். அவரை சந்திக்கவும் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டேன். ஆனால் அதற்கு பதில் 'லிட்டில் பிசி" என்பதாகத்தான் இருந்தது. தற்போது வரை ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை.

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உங்களைச் சந்திக்க எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அப்போது, என் மீதான அவதூறுகள் குறித்து உங்களிடம் விவரித்தேன். அதற்கு, தேர்தல் வருகிறது.. அதனால் உங்களது பணி கட்சிக்கு தேவை என்று கூறினீர்கள். என்னுடைய ராஜினாமா குறித்து பத்திரிகைகள் பல்வேறு யூகங்களுடன் எழுதுவதாக கூறினேன். அப்போது, பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என்று நீங்கள் கூறினீர்கள். இன்றுவரை அதை நான் மதித்து கடைபிடித்து வருகிறேன்.

ஆனால் இந்த நாள் வரை எனக்கு எந்த ஒரு கட்சிப் பணியும் ஒதுக்கப்படவும் இல்லை.. உங்களை சந்திக்க பல முறை அனுமதி கேட்டும் நேரமும் ஒதுக்கப்படவும் இல்லை.

அதன் பிறகு ஜனவரி மாதம் காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் அஜய் மக்க்கானிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் பட்டியலில் இருந்து உங்களது பெயரை நீக்கிவிட்டோம் என்ற அதிர்ச்சி தகவலை என்னிடம் கூறினார். அத்துடன் இது மேலிட முடிவு என்றும் வேறு பணிகள் உங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

10 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கடினமான சூழல்களில் கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்து இருக்கிறேன். அதுவும் என்னுடைய தாயார் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட டெல்லிக்கு சென்று ஒரு எம்.பியாக கூட இல்லாமல் கட்சியின் செய்தித் தொடர்பாளரகா பணியாற்றி இருக்கிறேன்.

என்னுடைய குடும்பம், என்னுடைய பெற்றோர், என்னுடைய கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சிக்காக தியாகம் செய்திருக்கிறோம். அமைச்சர் பொறுப்பில் 2 ஆண்டுகாலம்தான் இருந்திருக்கிறேன்.. ஆனால் இரவு பகல் பாராமல் 30 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்திருக்கிறேன்.

மன்மோகன்சிங்கும் நீங்களும் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நான் ஆற்றிய பணிகளை பாராட்டியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகால செய்தித் தொடர்பாளர் பணியில் ஒரு தவறு கூட இழைத்ததும் இல்லை. இதுவரை என்னை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை.

20013ஆம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதியன்று அஜய் மக்கான் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது நான் வெளியூர் பயணத்தில் இருந்தேன். உடனடியாக டெல்லி வந்து இளம்பெண்ணை மோடி உளவு பார்த்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்குமாறு கூறினார். அப்போது நான் அமைச்சராகவும் இருந்தேன். ஆனால் நான் இதை ஏற்க மறுத்தேன். இருப்பினும் மேலிட முடிவு என்று மக்கான் கூறினார்.

இவ்வளவுக்குப் பிறகும் உங்களது அறிவுறுத்தலை ஏற்று நான் அமைதியாகவே இருந்தேன். ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு விலகி தனிக் கட்சி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மோதிலால் வோரா என்னை தொலைபேசியில் அழைத்தார். வாசன் விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டார்.

ஜி.கே.வாசன் விலகும் வரை என்னிடம் யாரும் எதுவும் பேசவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார பிரச்சனைகளுக்கு நான் பலிகடாவாக்கப்பட்டேன். இத்தனைக்குப் பிறகுதான் உங்களுக்கு கடிதம் எழுத முடிவு செய்தேன்.

இவ்வாறு ஜெயந்தி நடராஜன் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே மத்திய அமைச்சரை நியமிப்பதும் நீக்குவதும் பிரதமருக்கு உள்ள அதிகாரம்; அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா எப்படியெல்லாம் தலையிட்டார் என்பதை ஜெயந்தி நடராஜனின் கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது.. என்று புதிய சர்ச்சையை கிளம்பியும் உள்ளது.

English summary
Jayanthi Natarajan is likely to quit the Congress on Friday, after a letter written by her to party president Sonia Gandhi was published in the media. Jayanthi, in the letter, accused Rahul Gandhi of interference while she was environment minister in the Manmohan Singh government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X