For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்கொலையைக் கைவிடுங்கள்: மாணவர்களுக்கு கருணாநிதி அறிவுரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கொலை நடக்காத, கொள்ளைகள் நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது. குறிப்பாக இந்த ஆட்சியில் தற்கொலைச் செய்திகள் என்பது வந்து கொண்டே இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு - மொத்த தற்கொலை என்ற கணக்கைப் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் இருந்திருக்கிறது. தமிழகத்திலே இனிமேல் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள் என்றும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Karunanidhi advises students not to attempt suicide

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்து விட்டதாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாக நடை போடுகிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறிய போதிலும், கொலை நடக்காத, கொள்ளைகள் நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது. குறிப்பாக இந்த ஆட்சியில் தற்கொலைச் செய்திகள் என்பது வந்து கொண்டே இருக்கிறது. அண்மைக் காலத்தில் வந்த செய்தியைப் பார்த்தால்,

  • ஜனவரி மாதம் 22ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி பிரியங்கா தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை;
  • ஜனவரி மாதம் 23ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, எஸ்.வி.எஸ். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள் கிணற்றிலே மர்மமாக இறந்து கிடந்திருக்கிறார்கள். இது கொலையா, தற்கொலையா என்பது தெரியவில்லை. நீதி விசாரணை நடத்தப்படவேண்டுமென்று கேட்டிருக்கிறோம்.
  • ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த மாணவி சண்முக ப்ரீதா, விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கிறார். இவரும் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப் பட்டாரா என்பது தெரியவில்லை.
  • ஜனவரி மாதம் 25ஆம் தேதி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நர்சிங் மாணவி அமுதா விடுதி அறையில் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
  • ஜனவரி 26ஆம் தேதியன்று தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், காதர் மொய்தீன் கலைக் கல்லூரியில் பி.ஏ. முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவி சுலோச்சனா, பேராசிரியர்களின் உணவு அறையில் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பட்டியல் இது!

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளில் கலந்து கொள்வதற்காகவும், தொகுதியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், திருவாரூர் சென்றிருந்தேன்.மாவட்டக் கழகத்தின் சார்பில், திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி -விழுப்புரம் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டு மறைந்த அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு, அந்த மாவட்டக் கழகத்தின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியினை நான் அந்தப் பெண்ணின் தாயாரிடம் வழங்கிய போது, அந்தப் பெண்மணி என் கையைப் பிடித்துக் கொண்டு, "அய்யா எனக்கு என் பெண் வேண்டும், எனக்கு நீதி வேண்டும்" என்று கூறி கதறிய அந்தக் காட்சி தான் இன்னமும் என் நினைவில் ஓடுகிறது.

அந்தப் பெண்மணிக்கு என்னால் அங்கே பதில் கூற முடியவில்லை. தன் மகள், படித்து விட்டு, வேலை பார்த்து தன் குடும்பத்தைக் கரையேற்றுவாள் என்று நம்பிக் கிடந்த அந்தத் தாய், தன் மகளைப் பறி கொடுத்து விட்டு அங்கே கதறினார். அந்தப் பிரியங்காவைப் போலவே தற்கொலை செய்து கொண்டு மாண்ட மாணவிகளின் குடும்பத்தினரும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மாண்டு போன மாணவிகளின் குடும்பத்தைப் பற்றி இந்த அரசிலே உள்ளவர்கள் கவலைப்பட்டார்களா? ஏன் அவர்கள் மாண்டு போனார்கள்? தற்கொலை தான் செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றிலே வீசப்பட்டார்களா? அதைக் கண்டு பிடிக்கக் கூட முறையான சட்டப்படியான ஒரு நீதி விசாரணையை நடத்த இந்த அரசு முன் வராததற்கு என்ன காரணம்?

கடந்த ஆண்டு எத்தனை தற்கொலைகள்? மாணவிகள் மட்டுமல்ல; அரசில் பணியாற்றிய முத்துக்குமாரசாமி என்ற மூத்த அதிகாரி, ரயில் முன் விழுந்து மாண்டு போனாரே? கண்துடைப்புக்காக அதிமுக அரசு ஒரு அமைச்சரைக் கைது செய்து வழக்குப் போட்டதே தவிர, அந்த வழக்கு எந்தக் குப்பைக் கூடையிலே கிடக்கிறது? விஷ்ணுப்பிரியா என்ற காவல் துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனாரே, என்ன ஆயிற்று அந்த வழக்கு? எங்கே தூங்குகிறது? இந்த இலட்சணத்தில் தான் முதலமைச்சர் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று சட்டப் பேரவையில் பேசுகிறார்.

நாடெங்கிலும் கடந்த ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்கள் தற்கொலை பட்டியலில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளன என்று மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்து உள்ளார். மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், ''கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் என மொத்தம் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 1,191 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 பேரும், மேற்கு வங்கத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்து உள்ளார்.

2014ஆம் ஆண்டு - மொத்த தற்கொலை என்ற கணக்கைப் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் இருந்திருக்கிறது.

என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களே, உங்களை நம்பி இந்த நாடு மட்டுமல்ல; உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பத்தினர், உங்கள் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். நீங்கள் படித்து முடித்து, அவர்களை யெல்லாம் வாழ வைப்பீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை தயவு செய்து நீங்கள் தகர்த்து விடாதீர்கள். மாணவப் பருவம் உணர்ச்சிகள் நிறைந்தது தான். ஆனாலும் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை மறந்து விடாதீர்கள்.

திருவாரூரில் பிரியங்காவின் தாய், தன் மகள் திரும்பவும் வேண்டு மென்று என்னிடம் கதறிய போது, என்னால் துடிக்கத் தான் முடிந்ததே, எத்தனையோ பேருடைய எவ்வளவோ கோரிக்கையை நிறைவேற்றிய என்னால், அந்தத் தாயின் கோரிக்கைக்கு பதில் சொல்ல முடியவில்லை. எனவே, தமிழகத்திலே உள்ள மாணவச் செல்வங்களை யெல்லாம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கோரிக்கைகளை எல்லாம் என்னிடம் கூறிவிட்டு, நீங்கள் உங்களது படிப்பைத் தொடருங்கள்.

தமிழகத்திலே இனிமேல் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களைப் போலவே தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குடும்பத்தினரின் வருங்காலத்தை எண்ணிப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கை விட வேண்டும். இந்த நேரத்தில் இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்!'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
DMK president Karunanidhi has asked the student community not to take serious desions like sucide for any issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X