For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 மாநில முதல்வர்கள் பங்கேற்புடன் களைகட்டும் கருணாநிதி வைர விழா!

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாளுடன் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் வைரவிழாவும் பிரம்மாண்டமாக கொண்டப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

பா. கிருஷ்ணன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இன்றளவும் இருக்கிற கலைஞர் மு. கருணாநிதி சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆனதை ஒட்டி விழா கொண்டாடப் போகிறார்கள் அக்கட்சியினர். அந்த விழாவும் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படும் அவரது 94ஆவது பிறந்த நாளும் இணைந்து பிரம்மாண்டமான வகையில் நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசியலில் 90 ஆண்டுகளைக் கடந்த பிறகும் அரசியலில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் சிலர்தான். 80 வயதில் பிரதமரான மொரார்ஜி தேசாய் பதவியிலிருந்து இறங்கிய பின் அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றார். ஜோதி பாசு 90 ஆம் வயது வரையில் தீவிர அரசியலில் இருந்தார். வி.ஆர். கிருஷ்ணய்யர் தனது 100வது வயதில் கூட சமூகப் போராட்டத்தில் பங்கேற்றார். திரிபுராவின் நிருபேந்த் சக்கரவர்த்தி 90வயதில் கூட மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையுடனும் போராடினார். 90 வயது எல்.கே.

 Karunanidhi's Diamond Jubilee Function

அத்வானி பிரதமர் வாய்ப்பை ஏற்கெனவே நழுவவிட்டு, இப்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கினால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வாய்ப்பையும் இழந்துவிட்டார். அவ்வப்போது கருத்தைக் கூறுவதுடன் நிறுத்திக் கொள்கிறார். இவர்களைப் போல விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் தீவிர அரசியலில் இருந்தனர். இருக்கின்றனர்.

ஆனால், வியப்புக்குரிய விஷயம் 1957ம் ஆண்டு குளித்தலை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்த கருணாநிதி அதையடுத்து 1984ம் ஆண்டு நீங்கலாக நடந்த எல்லா சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றிருக்கிறார். சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984ம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

திமுக பல தேர்தல்களில் படுதோல்வியைத் தழுவியது. ஆனால், கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்று பேரவைக்குச் சென்றிருக்கிறார். 1991ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளர்களில் கருணாநிதி மட்டுமே வென்றார். இடையில் நடந்த தேர்தலில் பரிதி இளம்வழுதி வென்றார். துறைமுகம் தொகுதியில் வென்ற கருணாநிதி சில காலத்தில் விலகியதால், அத்தொகுதியில் செல்வராஜன் என்பவர் போட்டியிட்டு அவைக்குச் சென்றார்.

சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெரும்பாலும் எல்லா முன்னணித் தலைவர்களும் தோல்வியடைந்தனர். 1967ம் ஆண்டு தேர்தலில் காமராஜர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். பக்தவத்சலம் தோல்வியடைந்திருக்கிறார். ஏன் திமுக நிறுவனரான அறிஞர் அண்ணா கூட காஞ்சியில் பஸ் முதலாளியிடம் தோற்றுப் போயிருக்கிறார். 1996ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் சாதாரண திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்திருக்கிறார்.

எம்ஜிஆர் கூட எந்தத் தேர்தலிலும் தோல்வியடைந்ததில்லை. 1967, 1971 (பரங்கிமலை), 1977 (அருப்புக்கோட்டை), 1980 (மதுரை கிழக்கு), 1984 (ஆண்டிப்பட்டி) என வெற்றி பெற்றிருக்கிறார். தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனால், 67ல் சட்டப் பேரவைக்குள் நுழைந்த அவர் 1987ம் ஆண்டு டிசம்பரில் மறைந்ததால், 20 ஆண்டுகள் மட்டுமே உறுப்பினராக இருக்க முடிந்தது. அதற்கு முன் எம்எல்சி ஆகி இருந்து விலகிவிட்டார்.

ஒரு வகையில் சட்டப் பேரவைத் தேர்கல்களில் தோல்வியே காணாதவர்களில் கருணாநிதி குறிப்பிடத் தக்கவர் என்பதுடன் 60 ஆண்டுகாலம் சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பது பாராட்டத் தக்க சாதனை என்பதில் ஐயமில்லை.

ஆனால், சட்டப் பேரவை மரபுகள் இன்று சீர்குலைந்ததற்கும், நிர்வாகத்தில் முறைகேடுகள் தலைவிரித்து ஆடுவதற்கும் ஊழல் மலிந்ததற்கும் விதை இட்டவர் கருணாநிதி என்பதையும் மறுக்க முடியாது.

1972ம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பிறகு, அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் மதியழகன் எம்ஜிஆருக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று கூறி, போட்டியாக ஒரு பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்து சட்டப் பேரவையை நடத்த முயன்றதில் கருணாநிதியின் பங்கை அரசியல் வரலாற்றில் ஒதுக்கிவிட முடியாது. ஒரே நேரத்தில் இரு பேரவைத் தலைவர்கள் இருந்த விநோதமான நிகழ்வும் அப்போதுதான் அரங்கேறியது.

1989ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுடன் நேரடி காரசார விவாதம் நடத்தியதை அடுத்து பேரவையில் கலவரம் ஏற்படவும் அதன் காரணமாக ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்படவும் மறைமுகமாக தூண்டுகோலாக இருந்தார் என்ற விமர்சனம் எழுந்ததை ஒதுக்க முடியாது.
சட்டப் பேரவையில் கருணாநிதியின் வியக்கத் தக்க ஆற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நகைச்சுவையைகப் பேசும் திறன், புள்ளி விவரங்கள், ஒவ்வொரு துறை தொடர்பான தகவல்களைக் கைவசம் வைத்திருத்தல், தொகுதிகளில் அவ்வப்போது நேரும் சம்பவங்கள் குறித்த தகவல்களை அறிந்து வைத்திருத்தல் போன்றவற்றில் கலைஞர் கருணாநிதியின் ஆற்றலுக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது.

அவர் எதிர்க்கட்சி வரிசையில் பணியாற்றிய காலமும் அதிகம். 1957, 1962, 1977, 1980, 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில்தான் அவர் சட்டப் பேரவைக்கு வந்து கையெழுத்திட்டுச் சென்றிருக்கிறார். அவையின் உள்ளே தனது பணிகளை ஆற்றியது மிகவும் குறைவு.

உண்மையில் சட்டப் பேரவையில் கருணாநிதி ஆற்றிய பணிக் காலம் என்று கணக்கிட்டால், 1957 முதல் 1976 வரையிலான காலம். 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஓராண்டில் அவர் சட்டப் பேரவை உறுப்பினர் இல்லை. மீண்டும் 1977ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரையில் எம்எல்ஏ ஆக இருந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது, அவரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். ஆனால், கருணாநிதி சட்டப் பேரவைக்கு மாறாக, சட்டமன்ற மேலவையில் உறுப்பினரானார். பிறகு, 1989 முதல் 1991ம் ஆண்டு வரை முதல்வராகவே இருந்தார். 1991ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் குறுகிய காலமே நீடித்துவிட்டு, எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகினார். பின்னர் 1996ம் ஆண்டு முதலமைச்சரானார். 2001ம் ஆண்டு எம்எல்ஏ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஜெயலலிதா ஆட்சியின்போது, அவை விவாதங்களில் அவர் பங்கேற்றதில்லை. இதே நிலை 2011ம் ஆண்டு முதல் இன்று வரையிலும் நீடிக்கிறது.

மொத்தமாக் கணக்கெடுத்துப் பார்த்தால், இடையில் கிட்டத் தட்ட 17 ஆண்டுகள் சட்டப்பேரவைக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. எனவே, மொத்த பணி சுமார் 43 ஆண்டுகள்தான். இருந்தாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்று கணக்கில் கொண்டால் சாதனைதான்!

கடந்த முறை அவர் ஆட்சியில் இருந்தபோது, சட்டப் பேரவைப் பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக சட்டப் பேரவையிலேயே பாராட்டு விழா நடத்தவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

கலாம் பல மாநிலங்களில் உரையாற்றியிருக்கிறார். ஆனால், அங்கெல்லாம் அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையான திட்டங்களை வகுத்துத் தந்து,அந்தந்த அரசுகள் அவற்றை நிறைவேற்ற யோசனைகளை அளித்தார். அதைப் போல் தமிழகத்திலும் திட்டங்களை அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டியபோது அப்துல் கலாமை திமுக அரசு பேச அழைக்கவில்லை. அதை மறந்துவிட்டு, கருணாநிதி 50 ஆண்டுகள் எம்எல்ஏ ஆக இருந்ததைப் பாராட்டிப் பேச அழைத்தனர்.

இதனால், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வரவில்லை என்று கூறப்பட்டது. இறுதியில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மட்டும் வந்து பாராட்டிப் பேசினார்.

எது எப்படி இருந்தாலும் கடின உழைப்பில் கருணாநிதியைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது.

இன்று தமிழகமே தள்ளாடுவதற்குக் காரணம் மதுப்பழக்கம். இப்போதைய அரசுகள் அதைுப் பணம்காய்ச்சும் மரங்களாகப் பாதுக்காக்கின்றன என்றால், அதற்கு விதையாக இருந்தது 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி மதுக்கடைகளைத் திறந்தததற்காக சட்டப் பேரவையில் கருணாநிதி மதுவிலக்கைத் தளர்த்துவதற்கான சட்டத்தைக் கொண்டுவந்ததுதான். அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரது தலைமையிலான கட்சி உறுதியாகச் செயல்பட்டால் கருணாநிதியின் வைரவிழாவுக்கு அர்த்தம் இருக்கும். அப்படி செய்தால், அவரது சட்டமன்றப் பணி அர்த்தமுள்ள பணியாக மதிக்கப்படும்!

English summary
Columnist Paa Krishnan, lauds the undefeated elections of DMK chief M Karunanidhi for the TamilNadu Assembly since 1957. Also with some critical note, the author recalls the DMK regime caused the deterioration of decorum in the house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X