For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோவை எதிர்த்து கடம்பூர் ராஜூவை களமிறக்கிய ஜெ... மும்முனைப் போட்டியில் கோவில்பட்டி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். வைகோவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஏற்கானவே அளிவிக்கப்பட்ட ராமனுஜன் கணேஷுக்கு பதில் சிட்டிங் எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூவை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க. தொடங்கியதற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ரவிசங்கரிடம் 634 ஓட்டுகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி அடைந்தார். அதன்பிறகு இப்போது தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் வைகோ.

கோவில்பட்டி தொகுதியில் அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையை சேர்ந்தவர். இவர் கழுகுமலை டவுன் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார். இவர் தேவர் சமுதாயத்சை சேர்ந்தவர். 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

Kovilpatti ADMK candidate changed

அதே நேரத்தில் வைகோவும், முன்பு அ.தி.மு.க. வேட்பாளராக இருந்த ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தொகுதியில் தேவர் சமூகத்தை சேர்ந்த 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் 52 ஆயிரம் பேரே உள்ளனர்.

வைகோவும், ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த ஓட்டு 2 ஆக பிரிந்து விடும். எனவே திமுக வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ராமானுஜம் கணேசை மாற்றிவிட்டு வைகோவிற்கு எதிராக கோவில்பட்டி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூவை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

கடம்பூர் ராஜு, கோவில்பட்டி தொகுதியில் அதிகம் வசிக்கும் கம்மாவர் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். எனவே தொகுதி மக்களிடம் அதிகம் அறிமுகமான சிட்டிங் எம்.எல்.ஏவான ராஜுவை ஜெயலலிதா நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

கோவில்பட்டி தொகுதி கடந்த 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வென்றுள்ளன.

1967 - எஸ்.அழகர்சாமி -சிபிஐ (வெற்றி) 33311 - வ.உ.சி.அருணாச்சலம் பிள்ளை (காங்) 22885

1971 - எஸ்.அழகர்சாமி -சிபிஐ (வெற்றி) 38844 - சுப்பா நாயக்கர் தேசிய.(காங்) - 23646

1977 - எஸ்.அழகர்சாமி -சிபிஐ (வெற்றி) - 21985 - பி.சீனிராஜ் (அதிமுக) 21588

1980 - எஸ்.அழகர்சாமி -சிபிஐ (வெற்றி) 39442 - வி.ஜெயலட்சுமி (காங்) 30792

1984 -ஆர்.ரங்கசாமி - காங் (வெற்றி) 45623 - எஸ்.அழகர்சாமி (சிபிஐ) 28327

1989 - எஸ்.அழகர்சாமி -சிபிஐ (வெற்றி) 35008 - கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (திமுக) 31724

1991 - ஷியாமளா - அதிமுக(வெற்றி) 58535 - அய்யலுசாமி (சிபிஐ) 30284

1996 - எல்.அய்யலுசாமி - சிபிஐ (வெற்றி) 39315 - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்(மதிமுக) 31828

2001- எஸ்.ராஜேந்திரன் -சிபிஐ (வெற்றி) 45796 - கே.ராஜாராம்(திமுக) 36757

2006 - எல்.ராதாகிருஷ்ணன்-அதிமுக(வெற்றி) 53354 - எஸ்.ராஜேந்திரன்(சிபிஐ) 41015

கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் செ. ராஜூ 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு 73,007 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜி. ராமச்சந்திரன் 46,527 வாக்குகளை பெற்றார்.

கோவில்பட்டி வேட்பாளராக முன்பு அறிவிக்கப்பட்ட ராமானுஜம் கணேஷ் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராக இருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்றுதான் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர், நான் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறி பிரச்சாரம் செய்தார்.

இதனிடையே கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சரியான போட்டியாக இருக்க வேண்டும் என்று சிட்டிங் எம்.எல்ஏவான கடம்பூர் ராஜூவை களமிறக்கியுள்ளார் ஜெயலலிதா.

கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், கம்மாவர் நாயக்கர், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களுக்குப் பின்னர் நாடார், பள்ளர், கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
மக்கள் நலக்கூட்டணியில் உள்ள வைகோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவுடனும், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளையும் நம்பி களமிறங்குகிறார்.

திமுக, அதிமுக, மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வைகோ போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகவும் மாறியுள்ளது. சமுதாய மக்கள் கை கொடுப்பார்களா? சட்டசபைக்குள் எம்.எல்.ஏவாக வைகோ நுழைவாரா? கோவில்பட்டி கடலைமிட்டாய் யாருக்கு இனிக்கப் போகிறதோ? வைகோவிற்கு கிடைக்குமா? அல்லது கடம்பூர் ராஜூவே தக்க வைப்பாரா என்பது மே 19ம் தேதி தெரியவரும்.

English summary
ADMK general secretary Jayalalitha annuounced Kovilpatti candidate Kadambur Raju insted of Ramanujam Ganesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X