கூரியர் நிறுவனம் தொடங்குவதாக நூதன பண மோசடி: மதுரை நபர் கைது
திண்டுக்கல்: கூரியர் நிறுவனம் தொடங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் பல லட்சம் மோசடி செய்த மதுரை நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் மதுரை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிதாக ஒரு கூரியர் நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் பரப்பி அதற்கு முகவர் தேவை என்று மதுரையை சேர்ந்த அன்வர் என்பவர் விளம்பரம் செய்துள்ளார்.
முகவராக முன்பணம்
இந்த விளம்பரத்தை நம்பிய பலரும் கூரியர் நிறுவன முகவராக ஆசைப்பட்டு அன்வரை தொடர்பு கொண்டுள்ளனர். முகவராக வேண்டுமானால் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று அன்வர் தெரிவித்துள்ளார்.
தலைமறைவு
இதை நம்பி குறிப்பிட்ட பணத்தை முன்பணமாக அவர்கள் கொடுத்துள்ளனர். இவ்வாறு பல லட்சம் ரூபாயை வசூலித்த அன்வர், அதன்பிறகு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் போலீசார் கைது
பணம் கொடுத்தவர்கள் பல முறை தொடர்புகொண்டும் அன்வர் சிக்கவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அன்வரை கைது செய்துள்ளனர்.
மோசடி பல வகை
தமிழகத்தில், ஈமு கோழி, நிதி நிறுவனம் உள்ளிட்ட பல மோசடிகளில் அப்பாவி மக்களின் பல கோடி பணம் ஸ்வாகா செய்யப்பட்ட நிலையில், இப்போது, கூரியர் மோசடி புதிதாக முளைத்துள்ளது.