For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொல்லியல் துறை சட்டத்தை திரும்பப் பெறுக: டிச.23ல் மதிமுக ஆர்ப்பாட்டம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் 2010ஆம் ஆண்டு மக்கள் விரோத சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 23ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''1250 ஆண்டுகளுக்கு முன்பு சோழ வம்சத்தை சேர்ந்த பராந்தக சோழன் உத்திரமேரூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்திய காலத்தில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ஊரின் மையப் பகுதியில் ஊர் சபை மண்டபம் கருங்கல்லால் அடிப்பகுதியும் செங்கற்கலால் மேற்பகுதியும் மரம் மற்றும் ஓடுகலால் மேற்கூரையும் அமைத்து கட்டப்பட்டது.

vaiko

இந்த ஊர்ச்சபை மண்டபத்தின் கருங்கல்லினால் ஆன அடிப்பகுதியில் தான் முதலாம் பராந்தகன் காலத்தில் குடவோலை தேர்தல் முறையை விளக்கும் புகழ் பெற்ற கல்வெட்டு செதுக்கப்பட்டது. கால ஓட்டத்தில் செங்கல் சுவரும் மரத்தாலான கூரையும் சிதிலமடைந்து கருங்கல்லால் ஆன அடிப்பகுதி மட்டும் எஞ்சியிருந்ததின் மேல் முதலாம் குலோந்துங்க சோழனால் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. அக்கோயில் வைகுந்த பெருமாள் கோவில் என்றழைக்கப்படுகிறது. குடியாட்சியின் தாயகம் தமிழ்நாடு என்பது சிறப்புகுரியது இதை ஐ.நா. மன்றத்தின் பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

நாடு சுதந்திரம் அடையும் முன்பு வரை தங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற இந்த அரிய கலை பொக்கிஷத்தை கண்ணை இமை காப்பது போன்று பாதுகாத்து, இன்று வரை இதன் பாதுகாப்பு அரணாக ஊதியம் வாங்காத மெய்க்காப்பாளர்களாக இம்மண்ணின் மைந்தர்களே பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை 1958 ஆம் ஆண்டு பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாக்க ஒரு துறையை உருவாக்கி சம்மந்தப்பட்ட இடங்களை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு சுற்றுச்சுவர் எழுப்பி முள்கம்பி வேலி அமைத்து எல்லையை வரையறை செய்து கொண்டனர்.

நமது பாரம்பரிய பண்பாட்டு சின்னங்களை பாதுகாப்பது மிக முக்கியம், அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மத்திய தொல்லியல் துறை 2010 ஆம் ஆண்டு மக்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கோவில்களுக்கும், நினைவிடங்கள், கல்லறைகளுக்கும் உள்ள வேறுபாடு அறியாமல் ஒரே சட்டம் இயற்றி மக்களின் கருத்து அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி சந்தடி சாக்கில் மக்கள் விரோத மத்திய தொல்லியல் சட்டம் 2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின் கீழ் புராதன சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளார்கள், காரணம் புராதன சின்னங்கள் இருக்கும் இடத்திலிருந்து 300 மீட்டர் 1000 ஆயிரம் அடி வரை தங்களின் பூர்வீக இடத்தில் புதிய வீடுகள் கட்டவோ, புதிய மின் இணைப்பு பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் மூதாதையர்கள் கட்டிய பழைய வீட்டை புதுப்பிக்கவோ, விரிவாக்கம் செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு சட்டத்தை மீறுவோர் இரண்டாண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். நீதிமன்றத்தின் மூலமாக மேல் முறையீடு செய்து நிவாரணம் தேட முடியாது, போன்ற கடுமையான சர்வாதிகார சட்டத்தை இயற்றியுள்ளனர். இதனால் தங்கள் சொந்த இடத்தை விட்டு விரட்டப்பட்டு உள்நாட்டு அகதிகளாக மாற்றிட மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டமே காரணம்.

இச்சட்டத்தைக் கண்டித்து பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டும், எனது தலைமையில் மாமல்லபுரத்திலும், திருப்போரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களும், பல்வேறு பொதுநல அமைப்புகளும் இணைந்து போராடியதாலும் மத்திய தொல்லியல்துறை மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலை கையகப்படுத்துவதை கைவிட்டது.

அதே போன்று திருப்போரூரில் புதிய மின் இணைப்பு பெற இருந்த தடையை விலக்கிக் கொண்டுள்ளது. இருப்பினும் மக்கள்விரோத 2010 ஆம் ஆண்டு சட்டத்தை திரும்பப்பெறுவது மட்டுமே நிரந்தர தீர்வாகும்.

மத்திய தொல்லியல் துறை 2010 ஆம் ஆண்டு மக்கள் விரோத சட்டத்தை செயலிழக்க செய்து திரும்பப் பெற வலியுறுத்தி மக்களின் வாழ்வுரிமைக்காக உத்திரமேரூரில் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா, காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் பாலவாக்கம் க.சோமு ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் கழக தோழர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

English summary
MDMK will protest again ASI act 2010 in Uthiramerur on Dec 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X