For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் விலை குறையும்- ஸ்டாலின்

பெட்ரோல், டீசலை தினசரி விலை நிர்ணயம் செய்யும் கொள்கை முடிவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைத்தாலோ அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவந்தாலோ, மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முடியும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தினமும் உயர்த்துவதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

MK Stalin condemns hike in petrol, diesel price

நடைமுறைக்குச் சிறிதும் ஒவ்வாத தினசரி விலை நிர்ணயக் கொள்கையால், பெட்ரோல், டீசல் விலை, வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டு வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதித்து, மிகுந்த வேதனைக்குள்ளாக்கி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது, பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்தியிருப்பது குறித்து, மத்திய பாஜக அரசும் கண்டுகொள்ளவில்லை, இங்குள்ள அதிமுக அரசும் வரிக்குறைப்பின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 12 காசுக்கும், டீசல் விலை 66 ரூபாய் 84 காசுக்கும் விற்கப்படுவதால் இருசக்கர வாகனம் வைத்திருப்போர், சிறு,குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாரிகளின் சரக்குக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டு, மக்களுக்குக் கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை சகட்டுமேனிக்கு, எட்டாத உயரத்திற்கு ஏறும் அபாயகரமான நிலை உருவாகி விட்டது.

மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பா.ஜ.க. அரசு 9 முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைவால் கிடைத்த பயன் எதுவும், மக்களுக்குத் துளியும் சென்றுவிடாமல் தடுத்தது. இப்போதும் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. அரசோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றியே கவலைப்படாமல், பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தி விட்டு, போராடும் மக்கள் மீதும் தடியடி நடத்தும் கொடுமையான நிர்வாகத்தைச் சர்வாதிகார மனப்பான்மையோடு கொடுத்து வருகிறது.

மத்திய அரசு இதுவரை உயர்த்தியுள்ள கலால் வரியை குறைத்தாலோ அல்லது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின்கீழ் கொண்டுவந்தாலோ, மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையை நிச்சயமாக உறுதி செய்ய முடியும். ஆனால், அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது.

மட்டுமின்றி, தனியார் எண்ணெய் நிறுவனங்களின் முதலாளித்துவ விளையாட்டுகளுக்கு ஏழை எளிய மக்கள் அநியாயமாக இரையாவதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 108.65 டாலரில் இருந்து 64.42 டாலருக்கு குறைந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசு தினசரி விலை நிர்ணயம் செய்யும் கொள்கை முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும். மத்திய நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் உயர்வைக் கட்டுப்படுத்திடவும், நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் மக்களுக்குக் கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும்.

இதுவரை உயர்த்தியுள்ள கலால் வரியை வெகுவாகக் குறைப்பதற்கு மத்திய நிதியமைச்சகம் முன்வர வேண்டும் என்றும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் விற்பனை வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Stalin accused the Tamil Nadu Government of not reducing the sales tax imposed on sale of petroleum products and note that prices of petrol and diesel have been revised nine times after the NDA came to power in 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X