அன்னையர் தினத்தில் இறந்த தாய்.. மாரடைப்பில் மகனும் உயிரிழந்த பரிதாபம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: "அம்மா நீ இல்லேன்னா நான் இல்லம்மா, நீ செத்துட்டா.. உன் கூடவே நானும் செத்துருவேன்" என்று சொல்வதை பொதுவாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நெல்லை மாவட்டத்தில் ஒரு மகன் தன் தாய்மீது வைத்திருந்த எல்லையற்ற பாசத்தினால் மரணத்தையே தழுவ நேர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர். 69 வயதாகும் கமலாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகன் பெயர் குட்வின் 40, வெளிநாட்டில் கப்பல் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வீட்டுக்கு கடைசி பிள்ளை என்பதால் அம்மாவுக்கு பிள்ளைமீதும், குட்வினுக்கு அம்மா மீதும் அளவு கடந்த பாசத்தினை வைத்திருந்தனர். குட்வினுக்கு திருணமாகி 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

Mother-son dead in Nellai

குட்வின் கடந்த 2 வாரங்களுக்கு விடுமுறை காரணமாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கமலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடவும், நேற்று முன்தினம் அவரை அழைத்துகொண்டு நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது காரில் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்து முடித்த பிறகு ஊருக்கு புறப்படலாம் என கிளம்பினர். ஆனால், மருத்துவமனையிலேயே கமலா திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டனர். கதறி அழுதார் குட்வின். தன் தாயின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தார்.

அங்கு உறவினர்கள் எல்லாம் கூடி அழ, தாயின் உடலையே பார்த்து பார்த்து கதறி அழுதுகொண்டே இருந்தார் குட்வின். யாராலும் அவரை சமாதானப்படுத்தவே முடியவில்லை. நேரம் ஆக ஆக உடல் சோர்ந்து காணப்பட்டார் குட்வின். இதனிடையே கமலாவின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

பின்னர், கமலா சடலத்தின் அருகில் குட்வின் சடலமும் வைக்கப்பட்டது. இதனை பார்த்து உறவினர்கள் கதறி கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. கடைசியில் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

தாய்மீது மகனுக்கு இருந்த எல்லையற்ற பாசமே மாரடைப்பு வரை செல்ல காரணமாக இருந்திருக்கிறது. அன்னையர் தினமான நேற்று, அன்னை இறந்த அன்றே பாசத்தினால் மகனும் இறந்தது அதிர்ச்சியையும், வியப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The son died in the tragedy of his mother's death. Then the mother and son were buried near the side.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற