For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி எந்த கவலையும் இல்லை, நீங்க அழக்கூடாதுன்னு முதல்வர் அம்மா சொன்னாங்க..: அற்புதம்மாள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-ஜெயலட்சுமி

மரணத்தின் பிடியில் இருந்து மகனை மீட்டிருக்கிறார் ஒரு தாய். இது ஒரு தாயின் 23 ஆண்டுகால போராட்டம்.

கணவனைக் காக்க எமனிடம் போராடினாள் சாவித்திரி என்று கதைகள் வாயிலாக படித்திருப்போம். இப்போது மகனைக் காக்க போராடிய தாயை நேரடியாக பார்த்திருக்கிறது இந்த உலகம்.

கைது செய்யப்பட்ட நாள் தொடங்கி விடுதலை பற்றிய அறிவிப்பு வரும் நாள் வரை தினம் தினம் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

விடுதலை என்று மாநில அரசு அறிவித்த பின்னர் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்கிறது. இது போன்ற ஒரு சூழலில் என் மகன் நிச்சயம் வருவான் என்று உறுதியோடு சொன்னார்.

அழுகை, பேச்சு என்று மாறி மாறி நிகழ்ந்து குரல் கூட சற்றே கம்மலாக வெளிப்பட்டாலும் உறுதியோடு இருந்தது. ராஜீவ் கொலை, பேரறிவாளன் கைது, விடுதலைக்கான தருணம் என்று பல கேள்விகளுக்கு ஒன் இந்தியா இணையதளத்திற்கு அவர் சிறப்புப் பேட்டியளித்தார். அதன் விவரம்:

அறிவு கைதுக்கான சூழல்

அறிவு கைதுக்கான சூழல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் அறிவு கைது செய்யப்பட்டார்.. அறிவு என்ன மாதிரியான சூழலில் கைது செய்யப்பட்டார்? அவருக்கு முன்பு விசாரிக்கப்பட்டவர்கள் யார்?

அற்புதம்மாள்: என் மகனை முதல்ல கைது செய்யவே இல்லை... விசாரணைக்கு கூட்டிட்டு போய்ட்டு கைது பண்ணதா சொல்லிட்டாங்க. ராஜீவ் காந்தி இறந்த வருஷம் ஜூன் 10ம் தேதி எங்க வீட்டுக்கு வந்த அதிகாரிகள் என் பையனை மல்லிகைக்கு விசாரணைக்கு அனுப்பிவைக்கச் சொன்னார்கள். நம்ம பக்கம் எந்த தப்பும் இல்லையே என்ற தைரியத்தில் ‘மல்லிகை'க்கு அனுப்பி வைத்தோம்.

என் மகன் இன்னும் வரலை...

என் மகன் இன்னும் வரலை...

என் பையனுக்கு முன்னாடி நிறைய பேரை விசாரித்துள்ளனர் ஓ.சுந்தரம் என்பவரை விசாரிச்சதா வக்கீல் துரைசாமி சொன்னார். அவரை விசாரிச்சிட்டு விட்டுட்டாங்க. அதே போல என் பையனையும் விட்டுடுவாங்கன்னு சொன்னாங்க. ஆனா இன்னும் விடலை. எனக்கு ஒரே வேதனை என்னவென்றால், என்மகனை குற்றவாளியாக்கிவிட்டார்களே என்பதுதான். அந்த பெயரை நீக்கத்தான் நான் 23 வருடமாக போராடி வருகிறேன்.

புரட்டிப் போட்ட வாழ்க்கை

புரட்டிப் போட்ட வாழ்க்கை

கேள்வி: ராஜீவ் கொலை செய்யப்பட்டதற்கு பேரறிவாளனை குற்றவாளியாக்கிய போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.

அற்புதம்மாள்: அதை இப்ப நினைச்சா கூட உடம்பு நடுங்குது. ராஜீவ் காந்தியை கொலை செய்துவிட்டார்கள் என்று நாங்கள் பதறிப்போய் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் என் பையனையே அந்தக் கொலையில் சம்பந்தப்படுத்திவிட்டனர். ஏன் இது நடந்தது என்று கடைசி வரைக்கும் எனக்குப் புரியவில்லை. அப்போ அறிவுக்கு 19 வயது. எங்க வாழ்க்கையை புரட்டி போட்டிருச்சே. இப்போ வரைக்கும் அந்த வலியோடத்தான் நான் போரடிக் கொண்டிருக்கின்றேன். விசாரணை செய்த சி.பி.ஐ அதிகாரியே என் மகன் நிரபராதின்னு சொல்லியிருக்கிறார். அதுதான் நிம்மதியை கொடுத்திருக்கிறது.

ஜோடித்த வழக்கு

ஜோடித்த வழக்கு

கேள்வி: ராஜீவ் காந்தியை கொலை செய்ய பேரறிவாளன்தான் வெடிகுண்டு தயாரித்து கொடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது இல்லையா?

அற்புதம்மாள்: என் பையனின் படிப்பை வைத்து அறிவு ஒரு வெடிகுண்டு நிபுணன்னு ஜோடிச்சாங்க. அது இந்திய டுடேயிலதான் முதல்ல வந்தது. அதை எதிர்த்து நாங்க கேஸ் போடலாம்னு நினைச்சோம். அப்புறம்தான் தடா சட்டத்தில கைது பண்ணவங்களை என்ன சொன்னாலும் நாம கேட்டுத்தான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அதை நம்ப வைக்க முடியாம போனதால அறிவு வாங்கி கொடுத்த பேட்டரியை வைச்சுதான் குண்டை வெடிச்சாங்கன்னு மாத்தி சொல்லிட்டாங்க.

தீர்ப்பு வரும் வரைக்கும்…

தீர்ப்பு வரும் வரைக்கும்…

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை மூடிய அறைக்குள்ள நடந்தது. மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தை வச்சுதானே 26 பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாங்க. தீர்ப்பு வரும் வரைக்கும் எதுவுமே எங்களால செய்ய முடியலை.

26 பேர் குற்றவாளிகளா?

26 பேர் குற்றவாளிகளா?

கேள்வி: இந்த வழக்கில் அரசியல் தலையீடு காரணமாக பலர் வெளியே வந்ததாக சொல்லப்படுகிறதே.. அதில் உண்மை இருக்கிறதா?

அற்புதம்மாள்: அதைப் பத்தி தெரியலையே... சிலரை மட்டும் வெளியே விட்டதா பத்திரிக்கையில செய்தி வந்தது. நானும் படிச்சேன். அப்போ இருந்த சூழல்ல என் மகனை காப்பாத்தறது எப்படின்னுதான் என்னால யோசிக்க முடிஞ்சது. அப்போ எல்லோரும் எங்களுக்கு எதிரா நின்னாங்க.

புரியாத புதிரா இருக்கு

புரியாத புதிரா இருக்கு

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமா சொல்ல முடியும். எத்தனையோ பேர் ஈழத்துக்கு சகஜமா போயிட்டு வந்தாங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டாங்க. ஆனா என் பையனை மட்டும் குற்றவாளியாக்கிட்டாங்க. அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர் கூட கைது செய்யப்படலை, விசாரிக்கப்படலையே. ஆனா இந்த 26 பேரை மட்டும் குற்றவாளின்னு எப்படி சொல்றாங்கன்னு புரியலை.

சுப்ரமணிய சாமி தலையீடு

சுப்ரமணிய சாமி தலையீடு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அறிவுக்கு முன்பாக விசாரிக்கப்பட்டவர்கள் சிலர் சுப்பிரமணிய சாமி தலையீட்டால் விடுவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே அறிவு கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுவதெல்லாம் உண்மைதானா?

அற்புதம்மாள்: இருக்கலாம்... வாழப்பாடி ராமமூர்த்தி சொல்லி கூட சிலரை வெளியே விட்டதா சொல்றாங்க. ஆனா நாங்க என்ன செய்ய முடியும்? யார் கிட்ட போய் கேட்க முடியும். நாங்க பெரியார் இயக்கத்தை நம்பினோம். ஆனா அவங்க எங்களை கைவிட்டுட்டாங்க. இப்போ முதல்வரம்மா நம்பிக்கை கொடுத்திருங்க.

உலகத்தமிழர்கள் உதவி

உலகத்தமிழர்கள் உதவி

வழக்கறிஞர் துரைசாமி, முருகன், நளினிக்கு வாதாடப் போனப்ப ஜூனியர் வக்கீல்கள்தான் என் மகனுக்காக கேசை வாதாடுனாங்க. எங்க கிட்ட பணமும் இல்லை. உச்சநீதிமன்றம் போன போது பழ. நெடுமாறன் ஐயாதான் 26 தமிழர்கள் உயிர்காப்பு குழு அமைத்து நிதி சேகரித்து கொடுத்தார். உலகத் தமிழர்கள் எல்லோரும் பணம் அனுப்பினாங்க.

எதையும் யோசிக்கவில்லை

எதையும் யோசிக்கவில்லை

2011ம் ஆண்டு இருந்த நிலை இப்போது மாறிவிட்டது... நான் இப்போது எதைப் பத்தியும் யோசிக்கவில்லை. ஒவ்வொரு விநாடியும் என் மகனின் விடுதலையைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

துரோகங்கள் என்ன?

துரோகங்கள் என்ன?

கேள்வி: உங்கள் மகன் கைது தொடங்கி எண்ணற்ற துரோகங்களை எதிர்கொண்டதாக சொல்லியிருக்கிறீர்கள்.. என்ன மாதிரியான துரோகங்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியுமா?

அற்புதம்மாள்: அது இப்போ வேண்டாமே... லேசாய் சிரித்துக் கொண்டே தொடர்கிறார். என் மகன் முதலில் ஜெயிலில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதுதான் இப்போதைக்கு என் ஒரே லட்சியம், குறிக்கோள். அதைத்தவிர வேறு எதையும் நான் பேசப்போவதில்லை

தடா நீதிமன்றதில்…

தடா நீதிமன்றதில்…

கேள்வி: பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் 26 தமிழருக்கும் தூக்கு விதித்து நொறுங்க வைத்த தருணத்தில் இருந்து உங்களை மீட்டு 26 தமிழர் மீட்புக்காக நாடு முழுவதும் பயணப்பட வைத்த தொடக்க புள்ளிகளாக யாரை குறிப்பிடுவீர்கள்?

அற்புதம்மாள்: முதல்ல எனக்கு யாரையும் தெரியாது. வெளி உலகமும் தெரியது. என் பையன்தான் ஒவ்வொன்னா சொல்லுவான். அவரைப் போய் பாரும்மா... இங்க போய் பேசும்மான்னு சொல்லுவான். நானும் ஓடுவேன்.... அறிவு தவிர மத்த யாருக்கும் சொந்தக்காரங்க சப்போர்ட் இல்லை. பயம் காரணமா யாரும் வரவும் இல்லை. அதனால தனி ஆளாக போராட வேண்டியதாகிவிட்டது. அப்போ ஒரு சிலரோட சப்போர்ட் கிடைச்சிருந்த எளிதாக வெளியே வந்திருக்க முடியும். பழ.நெடுமாறன் ஐயா, நல்லக்கண்ணு, வைகோ, தம்பி கொளத்தூர் மணி, தியாகு, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவு கொடுத்து 26 பேரோட உயிரை மீட்டிருக்காங்க.

 விலகிய சொந்தங்கள்

விலகிய சொந்தங்கள்

கேள்வி: சொந்தக்காரங்க உங்களை விட்டு ஒதுங்கிட்டாங்களா?

அற்புதம்மாள்: எல்லாம் பயம்தான் காரணம். அதான் எல்லோரும் ஒதுங்கிட்டாங்க. இப்போ என் மகன் நிரபராதின்னு தெரிஞ்சு போச்சே. அதான் எல்லோரும் இப்போ வர்றாங்க.

 என் வலிகள்… வேதனைகள்…

என் வலிகள்… வேதனைகள்…

கேள்வி: 23 ஆண்டுகால நெடும்பயணத்தின் துயரம் தோய்ந்த அனுபவங்களை வலிகளை புறக்கணிப்புகளை நூலாக எழுதவீர்களா?

அற்புதம்மாள்: பேசும் அளவிற்கு நான் எழுதமாட்டேன். கொஞ்சம் சோம்பேறித்தனம் எனக்கு இருக்கிறது.. எனக்கு இப்போ ரொம்ப அலைச்சலாக இருக்கிறது. கொஞ்சம் நேரம் கிடைத்தால் ஓய்வு எடுக்கத்தான் நினைக்கிறேன். நான் சொல்வதை கேட்டு யாராவது எழுதினால் நன்றாக இருக்கும். ஒருவேளை என் மகன் சிறையில் இருந்து வந்து எழுத வாய்ப்புள்ளது.

முதல்வரின் உத்தரவு

முதல்வரின் உத்தரவு

கேள்வி: பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு சர்ச்சையாகியுள்ளதே.. என்ன கருதுகிறீர்கள்...

அற்புதம்மாள்: அவங்க சட்டப்படி அறிவிச்சிருக்காங்க. இதுல மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. 2011ல் முதல்வர்தான் மூன்று பேரோட உயிரை காப்பாற்றி கொடுத்தார்கள். மரண தண்டனை குறைந்து ஆயுளாக மாறும் போதுதான், விடுவிக்க முடியும் என்று கூறப்பட்டிருக்கு இல்லையா? சரியான முடிவு எடுத்து இப்போது விடுதலை செய்யப் போவதாக அறிவிச்சிருக்காங்க.

5 ஆயுளுக்கு சமம்

5 ஆயுளுக்கு சமம்

அவங்க 23 வருஷமா வெளி உலகத்தையே பார்க்கலை. 5 ஆயுள் தண்டனைக்கு சமமான தண்டனையை அனுபவிச்சிருக்காங்க. நளினிக்கு தண்டனை குறைப்பு செஞ்சும் விடுதலையாகலையே, சிறையிலதான இருக்காங்க. முதல்வரம்மா அறிவிப்புதான் எங்க முகத்துலயும், உலகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் முகத்திலயும் சிரிப்பை வரவழைச்சிருக்கு.

நீதியை எப்படி மறுக்கலாம்

நீதியை எப்படி மறுக்கலாம்

மத்திய அரசு இதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அவர்களே தீர்ப்பு சொன்ன பிறகு மத்திய அரசு எப்படி மனு போடலாம். பொதுமக்கள் மட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்னு சொல்றாங்க. இது மத்திய அரசுக்கும் தானே பொருந்தும்.

உச்சநீதிமன்ற உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவு

கேள்வி: பேரறிவாளன் உள்ளிட்டோரின் கருணை மனு மீதான தாமதமே தண்டனைக் குறைப்புக்குக் காரணம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நிரபராதி என்று சொல்லவில்லையே அதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...

அற்புதம்மாள்: என் மகன் நிரபராதிதான். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. வாக்கு மூலத்தை பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், இப்போ, நான் கடமையில் இருந்து வழுக்கியிருக்கேன். வாக்கு மூலத்தை பேரறிவாளன் சொன்ன மாதிரி முழுசா பதிவு செய்யலைன்னு சொல்லியிருக்கிறார். அந்த ஒரு சொல் போதும் என் மகன் நிரபராதி என்று நிரூபிக்க.

குற்றவாளிகள் எங்கே

குற்றவாளிகள் எங்கே

ராஜீவ் கொலை வழக்கில் நேரடியாக கொலை செய்தவர்கள் மரணமடைந்து விட்டதாக சொன்னாலும், கொலைக்குத் தூண்டியவர்கள் யார்? அதை கண்டுபிடிச்சாங்களா? கொலைக்கு உடந்தை என்றுதானே இவர்களை கைது செய்து தூக்கு தண்டனை விதித்தார்கள். ராஜீவ் காந்தியை கொல்லப் பயன்படுத்தியது ராணுவத்தில் உபயோகப்படுத்தும் குண்டு என்று சொன்னார்கள். பேட்டரி வாங்கிக் கொடுத்து வெடிக்க வைத்ததுதான் காரணம் என்று சொன்னார்கள். எங்களை எதுவுமே கேட்க மாட்டார்கள். மூடிய அறைக்குள் இவங்களே வாக்குமூலத்தை பதிவு செய்து குற்றவாளி என்று அறிவித்துவிட்டனர்.

வெளிப்படையான விசாரணை

வெளிப்படையான விசாரணை

என் மகன் உள்ளிட்ட யாரையும் ராஜீவ் கொலையாளிகள் என்று கூறாதீர்கள். என் மகன் குற்றவாளி என்றால் வெளிப்படையாக விசாரித்து இருக்கலாமே?. என் மகனின் 23 வருட வாழ்க்கையை தொலைத்து விட்டனர். என் குடும்பத்தை கொலைகார குடும்பமாக சித்தரித்து விட்டனர். (அழுகிறார்...)

எதிர்க்கும் காங்கிரசார்

எதிர்க்கும் காங்கிரசார்

கேள்வி: 7 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தார்களே?

அற்புதம்மாள்: தப்பு செய்தவன் திருந்தி வாழத்தான் சிறைச்சாலையே தவிர மரண தண்டனைக்கு அல்ல. இறந்து போனது பெரிய உயிர். நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. அவருடன் 17 பேர் இறந்து போனார்கள் இன்றைக்கு அவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் இந்த 23 வருடமாக எங்கே போனார்கள். அவர்களுக்கு உதவி என்று காங்கிரஸ்காரர்கள் போய் நின்றிருக்கிறார்களா? காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்கின்றனர். என் மகன் நல்லவன்தான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்காதவன்.

மரண தண்டனைக்கு வேண்டாமே

மரண தண்டனைக்கு வேண்டாமே

கேள்வி : மரணதண்டனைக்கு எதிரான உங்களின் போராட்டம் பற்றி சொல்லுங்களேன்.

அற்புதம்மாள்: இறையாண்மை பேசுகிற நாட்டில் மரண தண்டனை எதற்கு? முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யரே, கொலைக்கு கொலை தீர்வாகாது என்று கூறியிருக்கிறார். பணக்காரர்கள், உயர்குடியில் பிறந்தவர்கள் யாரும் மரண தண்டனை பெறுவதில்லை. ஏழைகள், அப்பாவிகள், சாதியாலும், மதத்தாலும் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் மரண தண்டனை பெறுகின்றனர்.

சட்டம் சமமில்லை

சட்டம் சமமில்லை

சட்டம் என்பது எல்லோருக்கும் சமமானதாக இல்லை. நீதிபதிகளின் மனநிலைக்கு ஏற்ப தீர்ப்புகள் மாறும் என்று கிருஷ்ணய்யரே சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நீதிபதி சதாசிவம் ஐயா, 18 பேரின் மரண தண்டனையை ரத்து செய்திருக்கிறாரே.

அதிமுகவிற்கு ஆதரவா?

அதிமுகவிற்கு ஆதரவா?

கேள்வி: அதிமுகவுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வதாக புது சர்ச்சை கிளம்பியுள்ளதே....

அற்புதம்மாள்: என்னுடைய 23 வருட வலியினையும், வேதனையும் முதல்வரம்மா போக்கியிருக்கிறார். இன்றைக்கு மற்றவர்கள் பேசுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு மகனின் விடுதலைதான் முக்கியம். என் மனதில் என்ன இருக்கிறது. என் நிலைப்பாடு என்ன என்பது என்னுடன் இருப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும். பேசுபவர்களுக்கு என்ன தெரியும் என் வலியும், வேதனையும்?

மகன் விடுதலை முக்கியம்

மகன் விடுதலை முக்கியம்

கேள்வி: பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்குப் பின்னர் நீங்கள் எந்த அமைப்பிலாவது இணைந்து சமூக நலப் போராட்டங்களில் ஈடுபடும் திட்டம் உள்ளதா?

அற்புதம்மாள்: முதல்ல என் மகன் விடுதலையாகணும். இந்த நாட்டுல மரண தண்டனை என்பதே இருக்கக் கூடாது அதற்கான போராட்டத்தை தொடரணும்.

 நம்பிக்கை இருந்தது

நம்பிக்கை இருந்தது

கேள்வி: மரணத்தில் இருந்து மகனை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது எப்போது?

அற்புதம்மாள்: என் மகன் தவறு செய்யவில்லை என்பது என் மனதில் பதிந்து விட்டது. ராஜீவ் கொலையில் விசாரணைக்கு என்று அழைத்து சென்றவர்கள் கைது செய்து 18வது குற்றவாளி என்று சேர்க்கின்றனர். பின்னர் 4வது குற்றவாளியாக்கி தூக்கு தண்டனை அளவிற்கு கொண்டு வந்து விட்டனர்.

அவமானப்பட்ட சிபிஐ

அவமானப்பட்ட சிபிஐ

சிபிஐ எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அவர்களுக்கு எதிராக நாங்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று. இப்போது சிபிஐ அவமானப்பட்டு நிற்கிறது. இதில் மிகப்பெரிய சதியே இருக்கிறது. ராஜீவ் செத்துப் போவதில் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோதே இது மறுக்கப்பட்ட நீதி என்று அறிவு சொன்னான். சிபிஐ அதிகாரி தியாகராஜன் சொன்ன வார்த்தைதான் என் மகனின் தலை எழுத்தையே இப்போது மாற்றியிருக்கிறது.

அறிவுக்கு திருமணம்

அறிவுக்கு திருமணம்

கேள்வி: விடுதலைக்குப் பின்னர் பேரறிவாளனுக்கு திருமணம் செய்யப் போவதாக செய்தி வந்ததே?

அற்புதம்மாள்: லேசாக சிரித்து விட்டு தொடர்கிறார். அறிவுக்கு சமுதாய உணர்வு நிறைய இருக்கு. செய்ய வேண்டிய கடமையும் இருக்கும். தொண்டுள்ளம் படைச்ச, அக்கறை உள்ள பெண்ணா பார்த்து திருமணம் செய்யணும். வேற எதுவும் எனக்கு வேணாம்.

அந்த நெகிழ்ச்சியான தருணம்

அந்த நெகிழ்ச்சியான தருணம்

கேள்வி: தமிழக முதல்வரை சந்தித்து என்ன பேசினீர்கள்?

அற்புதம்மாள்: மகனை எப்படியாவது காப்பாத்துங்கன்னு கேட்டு மனு எழுதிக்கிட்டு இருந்தேன். டிவியில மூன்று பேர் விடுதலைன்னு ப்ளாஸ் நியூஸ் போச்சு. அப்புறம் 7 பேர் விடுதலைன்னு போச்சு. எனக்கு ஒண்ணும் புரியலை. நிறைய போன் வந்தது. அம்மா இன்னும் எங்க இருக்கீங்க. 7 பேரை விடுதலை பண்ணிட்டாங்க, சீக்கிரம் வாங்கண்ணு சொன்னாங்க. உடனே கோயம்பேடு போனேன். அப்புறம் உடனே முதல்வரை பார்த்து நன்றி சொல்ல கிளம்புனோம். சட்டசபை நடந்துகிட்டு இருந்துச்சு. காத்திருக்கச் சொன்னாங்க. அப்புறம் முதல்வர் கூப்பிடுறதா சொன்னாங்க. போனேன்.

தைரியம் சொன்னார்

தைரியம் சொன்னார்

எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியலை. சந்தோஷத்தில அழுகைதான் வந்தது. முதல்வர் கையை பிடித்துக் கொண்டு ஆறுதல் சொன்னார். இனிமே எந்த கவலையும் இல்லை, நீங்க அழக்கூடாது.... உங்க பையன் சீக்கிரமே வந்துடுவார்னு சொன்னாங்க. நடந்தது கனவா என்று கூட தெரியவில்லை. நான் வாசல்படி வரை வந்துவிட்டேன். திரும்ப கூப்பிட்டு போட்டோ எடுக்கச் சொன்னார். முதல்வரம்மாவே சொல்லிட்டாங்க. என் பையன் நிச்சயம் வெளியே வந்திடுவான்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு...

English summary
Arputham Ammal, mother of Perarivalan says that her son will come out soon as he is innoncent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X