For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதீத அன்பால் நீளும் உதவிகளால் சங்கடம்- தவறாக விதைத்துவிடாதீர்: நா. முத்துக்குமார் தம்பி உருக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் குறித்த பல்வேறு செய்திகள், தகவல்கள் குறித்து அவரது தம்பி நா. ரமேஷ்குமார் நீண்ட விளக்க கடிதம் ஒன்றை உருக்கமாக எழுதியுள்ளார்.

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். நா.முத்துக்குமாரின் இந்த திடீர் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவ தேவைக்கு பணம் இல்லாததால் தான் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. மேலும், சில தயாரிப்பாளர்களிடம் இருந்து வர வேண்டிய சம்பளத் தொகையும் அவருக்கு சரியாக வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. அவரது மரணம் பற்றி தினசரியும் யாராவது ஒருவர் எழுதி வருகிறார்கள்.

இதையும் படிங்க: (செல்ல மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்: அப்போதே ஏதோ தோன்றியிருக்கிறதோ? )

அவர் உடல்நலம் குன்றுவதற்கு குடியே காரணம் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவரது சகோதரர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் உருக்கமாக பலவற்றை நினைவு கூர்ந்துள்ளார். அக்கடித விவரம்:

தாயை இழந்தவர்கள்

தாயை இழந்தவர்கள்

ஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...'' என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்...

இன்று எங்கள் பிள்ளைகளுக்கும்...

இன்று எங்கள் பிள்ளைகளுக்கும்...

அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

திருப்தியான வாழ்வு

திருப்தியான வாழ்வு

உங்கள் அனைவரது நோக்கமும், எங்களுக்கு உதவ வேண்டும் என்கிற நினைப்பும், என் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அவன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது. சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்தான்.

பணம் பிரதானமே அல்ல

பணம் பிரதானமே அல்ல

கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவன் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை. ஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தது.

எளிமைக்கே பழக்கப்படுத்தியுள்ளோம்

எளிமைக்கே பழக்கப்படுத்தியுள்ளோம்

எங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறான். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவன் அவன்.

கட்டுக்கதைகள் வேண்டாமே

கட்டுக்கதைகள் வேண்டாமே

செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது.

வரலாற்றில் தவறாக இடம்பெற செய்யாதீர்

வரலாற்றில் தவறாக இடம்பெற செய்யாதீர்

அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன். அவனது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை தரையில் தான் வைத்திருந்தோம். தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.

அஞ்சுகிறோம்

அஞ்சுகிறோம்

இழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.

மீளமுடியவில்லை...

மீளமுடியவில்லை...

ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக,தகப்பனாக உறவுகளின் மீது அவன் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவனது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடியவில்லை. உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

சேர்த்து வைத்திருக்கிறான்...

சேர்த்து வைத்திருக்கிறான்...

யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறான். மற்றெல்லோரையும் விட அவன் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.

ராம், விஜய்

ராம், விஜய்

என் பதின் வயதுகளில், ''இவன் பேரு ராமசுப்பு..'' என்றும், இது விஜய்'' என்றும் தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினான். அதன் பின் இயக்குநர் ராம், இயக்குநர் விஜய் என மாறினார்கள். அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணனாகவே தொடர்கிறார்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கே, புனைக்கதைகளுக்கோ எங்களில் யாரைவேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

விதையென விருட்சமாய்

விதையென விருட்சமாய்

அவன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன். அவனது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்னும் வெளியாக காத்திருக்கின்றன.

3-வது தேசிய விருதுக்காக தரமணி

3-வது தேசிய விருதுக்காக தரமணி

தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக 'தரமணி'யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான். இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவன் இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.

கறுப்பு ஆடு

கறுப்பு ஆடு

சுஜாதாவின் ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன. மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.

இவ்வாறு நா. ரமேஷ்குமார் எழுதியுள்ளார்.

English summary
Late Tamil lyricist Na Muthukumar brother Na.Rameskumar wrote a letter for his family situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X