For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நிலையில் பாக்.குடன் பிரதமர் பேசுவதா?: மோடி கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

திருச்சி: ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுடன் பிரதமர் மன்மோகன்சிங் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெற்ற பாஜகவின் இளந்தாமரை மாநாட்டில் நரேந்திர மோடி உரையைத் தொடங்கும் முன்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் அண்மையில் நைரோபியில் நடந்த தாக்குதலில் இந்தியர்கள் பலியானதற்கு உட்கார்ந்த இடத்தில் அஞ்சலி செலுத்த மோடி அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் அமைதியாக அஞ்சலி செலுத்தினர்.

Modi

பின்னர் அவர் பேசியதாவது:

பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்து ராணுவத்தினர் தலையை வெட்டி எடுத்துச் செல்கின்றனர், பாகிஸ்தான் ராணுவத்தினர் இங்கு வந்து படுகொலை செய்து விட்டு செல்கின்றனர் என நடந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு பிரதமருடன் விருந்தில் பங்கேற்கிறார் பிரதமர் என்றால் என்ன அர்த்தம்?

இந்த நாடா கையாலாகாத நாடா? பலவீனமான நாடா? என்று நமக்கு கேள்வி எழும். அவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை ஏன் வந்தது.

பாகிஸ்தான் மீது நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது நமது பிரதமர், பாகிஸ்தான் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவசரம் வேண்டுமா? (கூடாது கூடாது என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர்.) பிரதமரே, காதில் விழுகிறதா.. தமிழக இளைஞர்களின் குரல் கேட்கிறதா?

பேச்சுவார்த்தை முக்கியமா?

பிரேசில் நாட்டின் மீது அமெரிக்கா உளவு பார்த்தபோது அமெரிக்கக் குழுவை பிரேசில் திருப்பி அனுப்பியது. பிரேசிலின் தன்மான உணர்ச்சியை நாம் பாராட்ட வேண்டும்,

அமெரிக்காவில் உளவுத் துறையில் பணியாற்றியவர் ஸ்னோடென். உளவுத் துறையில் அவர் அறிந்த விஷயங்களை வெளியிட்டார். தேசத் துரோகத்தில் ஈடுபட்ட காரணத்தால் அமெரிக்கா அவரை கைது செய்ய முனைந்தது. ஆனால் ரஷியாவோ ஸ்னோடென்னுக்கு அடைக்கலம் கொடுத்தது.

அதனால், என் நாட்டிலே துரோகம் செய்து ஓடியவனுக்கு அடைக்கலம் கொடுத்த உன் மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று சொன்னார் அதிபர் ஒபாமா. சிறிய நாடோ, பெரிய நாடோ ஒரு நாட்டின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் நாட்டின் சுய கவுரவத்தையும் மரியாதையும் காப்பாற்ற வீறு கொண்டு எழத்தான் செய்யும்.

நான் பிரதமரிடம் கேட்க விரும்புவது நீங்கள் முன்னுரிமை கொடுப்பது எதற்கு? இந்த நாட்டின் தன்மானத்துக்கா? கவுரவத்துக்கா? அல்லது பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கா? பதில் சொல்லுங்கள்.. இங்கே தாக்குதல் நடத்தும் போது நீங்கள் பேச்சுவார்த்தையின் பெயரால் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறீர்களா?

நாட்டில் ராணுவ வீரர்களுக்கு, எல்லைக்கு, மாநிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் இருக்கிறது. இந்த சூழலில் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை இதற்கு காரணமான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான்.

இன்று டெல்லியில் ஒரு அரசு இருக்கிறது.. இந்த நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி இருக்கிறது. பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. நாட்டி ரூபாய் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்திய ரூபாய்க்கு இப்போது மதிப்பு இல்லை. இன்னும் இந்த அரசு நீடித்தால் ரூபாய்க்கு மதிப்பே இல்லாமல் போய்விடும்.

பிச்சை எடுக்க நேரிடும்

இந்த ஆட்சி தொடருமேயானால் 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் பிச்சை எடுக்க நேரிடும் என்று நாட்டின் பொருளாதாரம் பற்றி பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த அரசின் நடவடிக்கையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் செயல்படும் பெல் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெல் நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. சிறிய தொழிற்சாலைகள் அனைத்தும் அரசின் தவறான கொள்கைகளால் மூடப்பட்டு வருகின்றன.

காணாமல் போகும் ரூபாய் மதிப்பு

பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், வங்கிக் கடன்களை பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வருகிறதா? ஆனால் லட்சம் ரூபாய் கடன் பெற்று தராதவர்கள் பெயரை பகிரங்கப்படுத்தி அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது மத்திய அரசு.

நீங்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும். தன்மானத்தைவிட்டுவிடக் கூடாது. உங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஒரு அரசு மத்தியில் அமையும்.

20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன என்கிறது அரசின் புள்ளி விவகரம். காரணம் நிலக்கரி கிடைக்கவில்லை. ஒருபக்கம் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இன்னொருபுறம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. மற்றொருபுறம் பல மாநிலங்களில் மின்வெட்டு அமலில் இருக்கிறது. இந்த நிலை மாற இந்த மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை - அரசியல் நாடகம்

ஆதார் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு மத்திய அரசு ஆனந்தக் கூத்தாடுகிறது. இந்த விஷயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டு வைத்தது. இந்த ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் பலன் அடைந்தவர் யார்? எவ்வளவு செலவிடப்பட்டது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சொல்ல வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை 3 ஆண்டுகளுக்கு முன்பே நான் கேட்டேன். நாட்டில் ஊடுருவியிருப்பவர்களும் ஆதார் அடையாள அட்டையைப் பெற்றுவிடுவார்கள். அது மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கும் என்றேன். ஆனால் இப்போது உச்சநீதிமன்றமே குட்டு வைத்துள்ளது. அரசின் அனைத்து துறைகளும் அனைத்து மாநிலங்களும் இந்த ஆதார் அடையாள அட்டையை ஏற்றுக் கொண்டார்களா?

இந்த நாட்டு மக்களின் பல நூறு கோடி பணம் ஆதார் அட்டை எனும் உங்கள் அரசியல் நாடகத்துக்காக வீணடிக்கப்பட்டிருக்கிறதே! காங்கிரஸ் கட்சியானது நாட்டு மக்களை பிரித்து ஆட்சியை நிரந்தரமாக காப்பாற்ற முயற்சிக்கிறது. இதனால் நாட்டில் மிகப் பெரும் பிளவு ஏற்பட்டிருகிறது.

நாட்டு மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடுகிறார்கள்..ஆனால் காங்கிரசோ நாட்டை பிளவுபடுத்தியது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய போதும்கூட ஜம்மு காஷ்மீருக்கு ஒரு சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி கொடி என்ற பிரிவினையை உருவாக்கி பாவத்தைச் செய்தது காங்கிரஸ்.

பிரிவினை பாவம்

நாட்டின் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சனையை உருவாக்கி தண்ணீருக்காக மாநில மக்கள் மோதிக் கொள்ளும் பாவத்தைச் செய்தது மத்திய அரசு. இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிதான் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியது. 1857-ல் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திரத்துக்காகப் போராடிய போது மதத்தின் பெயரால் பிளவை உருவாக்கிய பாவத்தைச் செய்தது காங்கிரஸ்தான்!

காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிகளுக்காக இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி எனும் பாவத்தைத் தொடர்கிறது காங்கிரஸ். அதேபோல் ஜாதிகளுக்கு இடையே முற்பட்டோர், பிற்பட்டோர் என்ற பிளவை எழுப்பியதும் காங்கிரசே! இம்மாதிரியான பிளவு மனப்பான்மை கொண்ட காங்கிரஸால் நகரம் மற்றும் கிராமங்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது.

காங்கிரசிடமிருந்து விடுதலை

சகோதரர்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு ஆட்சியை தக்க வைக்க முயலும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இந்த நாடு விடுதலை பெற்றாக வேண்டும்.

நாம் காங்கிரஸைப் பற்றி அறிந்திருப்பதைவிட அதிகம் அறிந்தவர் காந்தி. அதனால்தான் நாடு விடுதலை அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைக்கச் சொன்னார். மகாத்மா காந்தியின் அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம் நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, காங்கிரஸோடு சேர்ந்து செயல்படுகிற கட்சிகளிடம் இருந்து அவர்களின் தரகர்களிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.

என் அரசியல் வாழ்க்கையில் இவ்வளவு பிரம்மாண்ட கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இது இளைஞர்களின் சமுத்திரமாக காட்சி தருகிறது.

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைந்து போக, உங்களது கனவுகள் உடைந்து போக விடமாட்டோம். உங்கள் நம்பிக்கையை கனவை நனவாக்க எங்கள் சக்தியை முழுமையாக பயன்படுத்துவோம். எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும் தமிழக பாஜக இளைஞர் அணியினருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

பின்னர் தமது உரையின் முடிவில் ''வந்தே'' என்று நரேந்திர மோடி முழக்கம் எழுப்ப ''மாதரம்'' என்று கூட்டத்தினர் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

English summary
BJP's prime ministerial candidate Narendra Modi said, Mr Prime Minister I want to ask,you & I want you to answer- our soldiers killed, innocents are killed, terror troubles us-should PM hurry to meet Pak leaders? at Trichy rally on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X