நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கா… சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற்றிட வேண்டும் எனச் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவர முயல்வதாகத் தெரிகிறது. இது மாநில அரசின் உரிமைகளை நிரந்தரமாக விட்டுக் கொடுக்கும் செயலாகும்.தமிழகத்திற்கு அ.இ.அ.தி.மு.க அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இது கண்டனத்திற்குரியது.

நிரந்தர விலக்கு

நிரந்தர விலக்கு

எனவே, தமிழக அரசின் ஒதுக்கீட்டு வரம்புக்குள் வரக்கூடிய இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான நீட் நுழைவுத்தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆந்திரா போல் சட்டம்

ஆந்திரா போல் சட்டம்

உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு பெற தமிழக சட்டமன்றத்தில் இதுவரை மசோதா தாக்கல் செய்யவில்லை.எனவே, அதற்கும் தனி மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை,உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கும் வகையில் ஆந்திர அரசைப்போல் தமிழக அரசும் சட்டம் கொண்டுவர வேண்டும்.

மருத்துவ சேர்க்கை வீழ்ச்சி

மருத்துவ சேர்க்கை வீழ்ச்சி

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்தான பிறகு, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் எண்ணிக்கை மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 2009 -10 கல்வி ஆண்டு முதல் 2016 -17 கல்வி ஆண்டுவரை தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கான மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 29225.இதில் வெறும் 278 அரசுப் பள்ளி மாணவர்கள் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.இதிலும் 213 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் . மீதி 65 மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.ஆனால், நுழைவுத்தேர்வு இருந்த பொழுது 20 விழுக்காடு இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தப் புள்ளி விவரங்கள் , நுழைவுத்தேர்வு ரத்தானதால், அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்குப் பெரிய பயன் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

மேலும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அமையும் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் சிறிய அளவில் குறைந்தால் கூட, அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.மேலும், அடுத்த ஒரு வாய்ப்பும் கிடைப்பதில்லை. அவர்களின் டாக்டர் ஆகும் கனவு ஒரு தேர்வோடு கலைந்துவிடுகிறது. ஒருமுறை மட்டுமே எழுத வாய்ப்பளிக்கப்படும் பிளஸ் 2 தேர்வு , மாணவர்களின் மருத்துவராகும் விருப்பத்திற்கு நிரந்தரமாக முடிவு கட்டிவிடுகிறது. அடுத்த ஒரு வாய்ப்பு என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுவிடுகிறது.இதனால் , பிளஸ் 2 மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தற்பொழுது நீட் தேர்வில் வயது வரம்பு இல்லை என்பதும், எத்தனை முறை வேண்டு மென்றாலும் நீட் தேர்வை எழுதலாம். இது மாணவர்களுக்குச் சாதகமானது. மருத்துவராக ஆகியே தீர வேண்டும் என மன உறுதியுடன் முயலும் மாணவர்கள் மத்தியில், இந்தக் காரணங்களுக்காக நீட் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கை

சட்ட ரீதியான நடவடிக்கை

எனவே, மாணவர்களின் இந்த உணர்வைப் புரிந்து கொண்டு, தமிழகத்தின் உரிமையைக் காக்கும் வகையில் ,நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கைப் பெறுவதோடு, அடுத்த ஆண்டு முதல், தமிழக அரசே தனியாக மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வை நடத்திட வேண்டும்.அதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலவசப் பயிற்சி

இலவசப் பயிற்சி

தமிழக அரசின் பாடத்திட்டத்தையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்த வேண்டும். போட்டித் தேர்வுகளை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சியை அரசே இலவசமாக வழங்கிட வேண்டும். போதனை முறையும்,தேர்வு முறைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கும், உரியப் பயிற்சியை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

50 % இடஒதுக்கீடு

50 % இடஒதுக்கீடு

தனியார் நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டைத் தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கவும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டனம்

கண்டனம்

மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது கண்டனத்திற்குரியது. தனது போக்கை மாற்றிக் கொண்டு, மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு அங்கீகரித்து நடந்திட வேண்டும்.ஏற்கனவே பறித்துவிட்ட உரிமைகளை மீண்டும் மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டும் எனச் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dr. Ravindranath has condemned ADMK government for trying one year exemption from NEET exam.
Please Wait while comments are loading...