For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.1லட்சம் பணத்திற்காக வெட்டி வீசிய கொலையாளி: வெங்கட்ராவ் கொலையில் காட்டி கொடுத்த சி.சி.டி.வி கேமரா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தனியார் நிறுவன செக்யூரிட்டி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை சிந்தாரிப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் பணமே கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புளியந்தோப்பை சேர்ந்த வெங்கட்ராவ் என்ற விஜயகுமார், சைதாப்பேட்டையில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில், ஏ.டி.எம் மையத்திற்கு பணம் கொண்டு செல்லும் வேலையை செய்து வந்தார். கடந்த 10ஆம் தேதி இரவு பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பாததால் தாய் வேலம்மாள் புளியந்தோப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

One arrest in ATM security murder case

இந்தநிலையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த சுண்ணாம்புப் பாறை என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கிடந்த 2 சூட்கேசையும், 1 டிராவல் பேக்கையும் போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்தனர்.

அதில், ஒரு ஆண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஒரு சூட்கேசில் உடல் பகுதியும், மற்றொன்றில் தலைப் பகுதியும், டிராவல் பேக்கில் கை, கால் உள்ளிட்டவையும் இருந்தன. அழுகிய நிலையில் இருந்த அந்த பாகங்களை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் பரிசோதனை செய்தனர். விசாரணையில் காணாமல் போன புளியந்தோப்பு வெங்கட்ராவ் தான் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். அதோடு மோப்பநாய் புருனோவும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அந்த நாய் சிறிது தூரம் ஓடியது, ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இதற்கிடையே, சூட்கேஸ் பெட்டிகள் கிடந்த இடத்தில் ‘மல்லிகா ரெசிடன்சிஸ்' என்ற லட்ஜின் தலையணை உறை ஒன்றும், ஷூவுக்கான 2 சாக்ஸ்கள், செல்போன் ஆகியவை மழையில் நனைந்த நிலையில் கிடந்தன. கொலை செய்யப்பட்டவர், விலை உயர்ந்த சட்டை, பேண்ட் ஆகியவை அணிந்திருந்த நிலையில் காணப்பட்டார். கையில் கிடைத்த ஆதாரங்களை கொண்டு விருத்தாசலம் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

அங்கு கிடைத்த செல்போனை ‘ஆன்' செய்து, அதில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த எண்களை பரிசோதித்தனர். அதில் ‘டாடி' என குறிப்பிட்டு ஒரு எண் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது கொலை செய்யப்பட்டவரின் தந்தையின் போன் நம்பராக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

அந்த நம்பரில் போலீசார் தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர்முனையில் பேசியவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் இருந்து பேசுவதாகவும், தனது பெயர் எத்திராஜூலு என்றும் தெரிவித்தார். போலீசார் தெரிவித்த அடையாளங்களை வைத்து, கொலை செய்யப்பட்டது தனது மகன் வெங்கட்ராவ் என்பதை அவர் உறுதி செய்தார்.

வேலை பிரச்சினையில் வெங்கட்ராவ் கடத்தி செல்லப்பட்டு, தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், வெங்கட்ராவ் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பணம் கொலையாளிகளால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் மல்லிகா ரெசிடென்சியில் தங்கியிருந்த நபர்களைப் பற்றியும், சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை ஒப்பிட்டு பார்த்தும் கொலையாளியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

வெங்கட்ராவை கொலை செய்தது பற்றியும், உடலை சென்னையில் இருந்து கடத்திச் சென்றது எப்படி? என்பது குறித்தும் கொலையாளி வேல்முருகன் போலீசில் அளித்த வாக்குமூலம்:

விருத்தாச்சலம் அருகே உள்ள பாசிகுளம்தான் எனது சொந்த ஊர். அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது தந்தை கோவிந்தன் சைதாப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் சூப்பர்வைசராக வேலை செய்யும் புளியந்தோப்பை சேர்ந்த வெங்கட்ராவ் எனது தந்தை மூலமாக எனக்கு அறிமுகமானார்.

பட்டதாரியான அவர் அரசு வேலையில் எப்படியும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தார். அதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருந்தார். இதனால் பெரிய அளவில் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டேன். பணம் செலவழித்தால் எப்படியும் அரசு வேலையை வாங்கி விடலாம் என்று கூறியதை வெங்கட்ராவ் நம்பினார்.

இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் ‘‘ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக ஒருவர் கூறி இருக்கிறார். 10ஆம்தேதி சிந்தாதிரிப்பேட்டை லாட்ஜில் வைத்து பணத்தை வாங்கி கொள்வதாக அவர் கூறியுள்ளார். எனவே ரூ.1 லட்சம் பணத்துடன் லாட்ஜிக்கு வந்துவிடுங்கள்'' என்று கூறினேன்.

அதன்படி கடந்த 10ஆம்தேதி அன்று இரவு 7 மணிக்கு பிறகு வெங்கட்ராவ் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லாட்ஜிற்கு வந்தார்.அங்கு வைத்து அவரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்தேன்.

பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேசுகளில் அடைத்தேன். ரத்தம் வடியக்கூடாது என்பதற்காக துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை கழிவறையில் வைத்து தண்ணீரால் நன்றாக கழுவினேன்.

பின்னர் எதுவும் தெரியாதது போல லாட்ஜை காலி செய்து விட்டு 3 சூட்கேசுகளுடன் ஒரு ஆட்டோவில் ஏறி விமான நிலையம் வரை சென்றேன். பின்னர் அங்கிருந்து வாடகைக்கு கார் பிடித்து விருத்தாச்சலம் அருகே உள்ள எனது சொந்த ஊரான பாசிகுளத்தில் ஓடையில் உடலை வீசிவிட்டு சென்னைக்கு வந்து விட்டேன்.

உடலை பார்சல் செய்யும் போது அதனுடன் லாட்ஜ் தலையணை உறையையும் சேர்த்து கட்டி விட்டேன். அதே போல் வெங்கட்ராவின் செல்போனையும் அங்கேயே விட்டு விட்டேன். இதுவே நான் போலீசில் சிக்குவதற்கு காரணமாகிவிட்டது என்று வேல்முருகன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

வெட்டி கொலை செய்து துண்டு துண்டாக கூறு போட்டு வீசியதை வேல்முருகன் விவரித்தது கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

English summary
Sindhadiripet Police arrested a accused name Velmurugan in connection with security employee Venkatrao murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X