For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர் பிரச்சினையில் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லையே மத்திய அரசு.. வேல்முருகன் கொதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்படுவதும், சிங்கள கடற்படையுடன் இணைந்து தென்னிலங்கை சிங்களவர்களும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ ஆகக் குறைந்தபட்சம் இலங்கை அரசை எச்சரிக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத கையாலாகாத இந்திய மத்திய பேரரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Panruti Velmurugan condemns Union govt

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த குட்வின், கெவின், முனியசாமி, கென்னடி, ஆன்ட்ரூஸ், சாரதி, ரொனால்டு, லெனன்ஸ், நிஷாந்த் உள்ளிட்ட 14 மீனவர்கள் கடந்த ஜூன் 1-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 3 விசைப் படைகுகளையும் சிங்கள் கடற்படை பறிமுதல் செய்தது. இதுநாள் வரை இந்த 14 மீனவர்கள் தொடர்ந்தும் விசாரணைக் கைதிகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த மீனவர்களை மீட்க இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமோ, யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகமோ ஒரு நடவடிக்கையுமே மேற்கொள்ளாத காரணத்தால் அடுத்தடுத்து 4 முறை இந்த 14 மீனவர்களது நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். இந்த மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நாகப்பட்டினம் செருதூர் பகுதியில் இருந்து கடந்த ஜூன் 30-ந் தேதி 200 பைபர் படகுகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 25 படகுகளில் வந்த சிங்கள மீனவர்கள் இலங்கை கடற்படை உதவியுடன் கொடூர கொலைவெறித் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

இதில் மீனவர்களின் 37 படகுகள் மிக மோசமாக சேதமாக்கப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து மீன்கள் உட்பட அத்தனை பொருட்களையும் பறித்துச் சென்று நடுக்கடலில் கொலைவெறியாட்டத்தை நிகழ்த்தி கொள்ளையாட்டம் போட்டிருக்கின்றனர். இதில் 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இக்கொடுந்தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மீனவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்படி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் நித்தம் நித்தம் துயரமும் போராட்டமுமாக நாட்களை கடத்த வேண்டியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; தனி அமைச்சகமே அமைப்போம் என்றெல்லாம் வாய்ச்சவடால் உறுதிமொழி கொடுத்த மத்திய அரசு மெத்தனமாக இந்த விவகாரத்தில் சிறு துரும்பையும் கூட அசைக்காமல் தமிழக மீனவர்களை வேற்று நாட்டு குடிமக்களாக கருதிக் கொண்டிருப்பது மிகவும் வன்மையாக கண்டனத்துக்குரியது.

நீதிமன்ற வழக்குகளில் கூட, தமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆக்கப்பூர்வமான எந்த ஒரு உறுதிமொழியும் நடவடிக்கையுமே எடுக்காமல் மத்திய அரசு 'கடனுக்குத்தான்' பதில் அறிக்கைகளைத் தாக்கல் செய்து கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில், இந்தியாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் உள்ளதாகவும் அவை அனைத்தையும் கண்காணிப்பது சவாலான ஒன்று; 20 மீட்டர் அளவு குறைந்த மீன்பிடி படகுகளிலும் எல்லையை கண்டறியும் கருவிகள் பொறுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன; தமிழகத்தில் இதனை அமல்படுத்த 3 ஆண்டுகளாகும் என்று 'சடங்குத்தனமான' அறிக்கைகளையே தாக்குதல் செய்துள்ளது. இத்தகைய மெத்தனப் போக்கை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மீனவர்களின் தொடரும் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்; இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில் அழைத்து தாக்குதல்கள் தொடர்ந்தால் வெளியேற்றுவோம் என மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வேல்முருகன்.

English summary
TVK leader Panruti Velmurugan has condemned the Union govt for its continuous silence in the fishermen issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X