For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த ஊரிலேயே அகதிகளாக்கிட்டீங்களே!.... ஒ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்ட கடலூர்வாசிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எங்களை சொந்த ஊர்லயே இப்படி அகதிகளாக்கிட்டிங்களே என்று கடலூர் மாவட்டத்தில் நிவாரண உதவி அளிக்க வந்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் முழுவதும் நவம்பர் 9ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையினால் மாவட்டத்தின் உட்பகுதிகளான பண்ருட்டி,சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோயில், நெய்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய இடங்களில் சராசரியாக 38 செ.மீ.மழை பெய்தது. இதில் நெய்வேலியில் அதிகபட்சமாக 48 செ.மீ மழை பதிவானது.

People protest demanding flood relief funds in Cuddalore

இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட 9 வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, மரவள்ளி, சவுக்கை என சுமார் 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடிசைகள் சேதம் அடைந்தன.

மேலும், 12 ஆயிரம் குடிசைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 3,893 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட கால் நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் குழு

அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். பண்ருட்டி அருகே பெரியகாட்டுபாளையத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்கள். இதே போல் விசூர் கிராமத்திலும் ஏராளமானோர் வீடுகளை இழந்து சாலைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர்.

இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, மக்களுக்கு நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறி, 8 இடங்களில் சாலை மறியல் நடந்ததால் கடலூர் மாவட்டம் ஸ்தம்பித்தது.

பொதுமக்கள் முற்றுகை

கடலூர் மாவட்ட வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் ஓ.பி.எஸ் தலைமையில் 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடும் பாதிப்புக்குள்ளான பெரியகாட்டுப்பாளையம், வீசூர் ஆகிய இரண்டு கிராமங்களை ஒரு அமைச்சர் கூட பார்வையிடவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், சம்பத், உதயகுமார், ஜெயபால் ஆகியோர் வெள்ளிக்கிழமை அங்கு சென்றனர். வெள்ள மீட்பு குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி, அருண்மொழித்தேவன் எம்பி, எம்எல்ஏக்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி ஆகியோரும் உடன் சென்றனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் 40க்கும் மேற்பட்ட கார்கள், பெரிய விழாவுக்கு வருவதுபோல் அணிவகுத்து வரவே பொதுமக்கள் அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

அதிகாரிகள் மீது புகார்

பெரியகாட்டுபாளையத்தில் திரண்டிருந்த மக்கள், அமைச்சர்ககளை சூழ்ந்துகொண்டு முறையிட்டனர். இங்கு வாழ்வதற்கே பயமாக உள்ளதால் வேறு இடத்தில் வீடு கட்டித்தரவேண்டும் என்று வலியுத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் சமாளித்து அமைச்சர்களை விசூர் கிராமத்துக்கு அழைத்து சென்றனர்.

தள்ளுமுள்ளு

விசூர் செல்லும் வழியில் மேட்டுகுப்பம் மக்கள், அமைச்சர்கள் வந்த காரை முற்றுகையிட முயன்றனர். இதனை அறிந்த காவல்துறையினர், மறியல் செய்யக்கூடாது என மக்களை எச்சரித்தும் அவர்கள் கேட்காமல் அமைச்சர்களின் கார்கள் முன்பு குவிந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தியதால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கதறி அழுத மக்கள்

இதனையடுத்து ஆந்திரிகுப்பம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கடும் ஆவேசத்துடன் எந்த அதிகாரிகளும் எங்களுக்கு எவ்வித நிவாரண உதவியும் செய்யவில்லை என்று கூறி காரின் முன்பு படுத்து கதறி அழுதனர். ஆனால் அமைச்சர்கள் காரை ஒதுக்கி எடுத்துக் கொண்டு சென்றனர். அமைச்சர்கள் யாரும் காரை விட்டு இறங்கவேயில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சர்களின் கார்களுக்குப் பின்னால் வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

வீடு கட்ட பணம் போதுமா?

ஒரு வழியாக அமைச்சர்கள் அனைவரும், விசூர் கிராமத்துக்கு சென்று அங்கு குடிசை வீட்டில் வசித்த ஏழுமலைக்கு ரூ.1,20,000 நிவாரணம் வழங்கினர். இந்த பணத்தில் எப்படி வீடு கட்டுவது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் பதில் கூறாமலேயே அங்கிருந்து சென்றார்.

சொந்த ஊரிலேயே அகதி

அங்கு திரண்டிருந்த மக்கள் எங்களை சொந்த ஊர்லயே அகதிகளாக்கிட்டிங்களே என சரமாரி கேள்வி கேட்டதால் அங்கிருந்து அவரால் நகர முடியவில்லை. உடனே சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி பொதுமக்களை சமாதானம் செய்து ஓபிஎஸ்ஸை காருக்கு அழைத்து சென்றார். காரையும் மக்கள் சூழ்ந்துகொண்டு அமைச்சரிடம் கேள்வி கேட்டதால் அவசர அவசரமாக அரசு மாளிகைக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் திரும்பினர்.

பொதுமக்கள் முகம் சுளிப்பு

அமைச்சர்களை முற்றுகையிட்டு பல இடங்களில் அமைச்சர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். வடலூர் அருகே உள்ள வெங்கடாம்பேட்டை கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பண்ருட்டி-குறிஞ்சிப்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இப்படி மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் மக்கள் ஆவேசத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.

குளு குளு அறையில் அமைச்சர்கள்

பொதுமக்களின் போராட்டங்களால் நிலைகுலைந்துபோன அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், சம்பத், உதயகுமார், ஜெயபால் ஆகியோர் அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் குளு, குளு அறையில் இருந்து, காலை 9.30 முதல் பிற்பகல் 12 மணி வரை ஆய்வுக்கூட்டம் நடத்துவது வீதியில் தவிக்கும் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

English summary
Cuddalore Floods People Struggle to get back to Normal Life. Six ministers including O. Panneerselvam and Natham Viswanathan, have been camping in Cuddalore for the last one week and attending to flood relief work in the district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X