For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாமலை பல்கலை. மாணவர் சேர்க்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PMK founder Ramadoss oppose separate admission process for Annamalai University

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அண்மையில் அரசுடைமையாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி இடம் பெறவில்லை. மாறாக அது சுயநிதிக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு அதற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை தனியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு முறைகேடுகள் ஓரளவு குறைந்திருந்தாலும், கல்விக் கட்டணக் கொள்ளை இன்னும் தொடர்கிறது என்பது தான் மிகவும் வேதனையளிக்கும் உண்மையாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டதன் மூலம் அப்பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த கல்லூரிகளும் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. அதன்பின்னர் தமிழக அரசு கல்லூரிகளில் நடத்தப்படுவதைப் போன்று தான் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவிருக்கும் நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் பல்கலைக்கழக நிர்வாகம் மூலமாக நடத்துவது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும்.

இதையே காரணம் காட்டி தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தனித்தனியாக மாணவர் சேர்க்கைகளை நடத்தத்தொடங்கினால், அதை தமிழக அரசு நினைத்தால் கூட சட்டப்பூர்வமாக தடுக்க முடியாமல் போய்விடும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியாக மாணவர் சேர்க்கையை நடத்துவதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இன்னொரு பாதிப்பும் ஏற்படும்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக்கட்டணமாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி சுயநிதிக் கல்லூரி என்ற அடிப்படையில் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.5.70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக் கட்டணம் சராசரியாக ரூ.10 லட்சத்தைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ.10 ஆயிரமும், இன்னொரு கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சமும் வசூலிக்கப்பட்டால் அது முரண்பாடுகளின் உச்சமாக இருக்கும். இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்ட போதிலும், மற்ற நடைமுறைகளும், கல்விக் கட்டணமும் மாற்றப்படாதது கண்டிக்கத்தக்கது. நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்வி வாய்ப்பை பறித்து தகுதியில்லாத பணக்கார மாணவர்களுக்கு வழங்கவே இந்த நடைமுறை பயன்படும்.

பொறியியல், வேளாண் அறிவியல், தோட்டக்கலை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இதே முறையில் நடப்பதால் இந்த படிப்புகளும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவப்படிப்புக்கு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மூலமும், பொறியியல் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் படிப்புகளுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாகவும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

இந்த அனைத்துப் படிப்புகளுக்கும் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகி ஏழை மாணவர்களுக்கான நீதியை பெற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss has threatened to file a petition in the Madras High Court against the separate admission process for Annamalai University, urging the Tamil Nadu government to treat it on par with government colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X