For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்கள் படுகொலை... உண்மை கண்டறியும் குழுவை ஆந்திரா அனுப்ப பாமக முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, உண்மை கண்டறியும் குழுவை ஆந்திரா அனுப்ப பாமக முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

PMK to investigate Andhra shoot out issue

''ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப் பகுதியில் 20 தமிழர்கள் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி ஆந்திரக் காவல்துறையால் கொடூரமான முறையில் காக்கைக் குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றனர். மனிதநேயமற்ற மிருகத் தனமான இத்தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவருமே செம்மரக் கடத்தலுடன் எந்தவகையிலும் சம்பந்தப்படாதவர்கள். அதிக கூலி தருவதாக ஆசைவார்த்தைக் கூறி ஆந்திராவைச் சேர்ந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அம்மாநில காவல்துறை யினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளனர். தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றதற்காக ஆந்திர சிறப்பு அதிரடிப் படையினரால் கூறப்படும் எந்த காரணமும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின்படி பார்க்கும்போது, தொழிலாளர்கள் எவரும் செம்மரத்தை வெட்டும் பணியில் ஈடுபடவில்லை என்பதும், ஏற்கனவே அவர்களை கைது செய்த ஆந்திரக் காவல்துறையினர் சேஷாசலம் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்திருக்கலாம் என்பதும் தெரியவருகிறது.

20 தமிழர்களும் ஆந்திரக் காவல்துறையால் கடத்திக் கொல்லப்பட்டனர் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் கிடைத்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் அர்ஜுனாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் திங்கட்கிழமை மதியம் திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு பேரூந்தில் பயணம் செய்துள்ளனர். நகரி என்ற இடத்தில் அந்த பேரூந்தை வழிமறித்த ஆந்திரக் காவல்துறையினர் அதிலிருந்த 8 பேரை பிடித்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள ஒருவர் மட்டும் பேரூந்திலிருந்து இறங்கி சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அவர் வருவதற்குள் பிடித்துச் செல்லப்பட்ட 8 பேரும் ஏற்கனவே சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 12 பேருடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆந்திர மாநில சிவில் உரிமை அமைப்பு கூறியிருக்கிறது. காவல்துறையிடம் சிக்காமல் தப்பிய தமிழகத்தைச் சேர்ந்தவரும் அந்த அமைப்பின் பாதுகாப்பில் தான் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படுகொலைகள் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும் இதை முழுமையாக மூடி மறைக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ள இந்தப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக உண்மை கண்டறியும் குழுவை ஆந்திராவுக்கு அனுப்ப பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இக்குழு விரைவில் ஆந்திராவுக்குச் சென்றும், கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தும் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில் இப்படுகொலைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது மத்திய புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ) மூலம் விசாரணை நடத்த ஆணையிட வேண்டுமென கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர பா.ம.க. திட்டமிட்டுள்ளது. இதுதவிர மனித உரிமை ஆணையத்திடமும் முறையிடப்படும்.

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தொழிலாளர்களும் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 7 பேர் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வறுமையில் வாடும் இம்மாவட்ட மக்களை ஆந்திரக் கடத்தல்காரர்கள் மூளைச்சலவை செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் போதிய வளர்ச்சியோ, வேலைவாய்ப்புகளோ இல்லாததால் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதைப்பயன்படுத்தி இவர்களை ஒரு கும்பல் ஆந்திராவுக்கு அழைத்து சென்று அவர்களின் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது என்பது தான் உண்மை. இதைத் தடுக்க வேண்டுமானால் இந்த பின்தங்கிய மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு உடனடியாக திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நேரத்தில் 20 பேரை ஆந்திரக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ள நிலையில், இதற்கு கண்டனம் கூட தெரிவிக்க தமிழக அரசுக்கு மனம் வரவில்லை. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப் படும் நிலையில் தமிழக அரசு ரூ.3 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. சென்னை முகலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 68 பேர் உயிரிழந்த போது, ஆந்திரத்தைச் சேர்ந்த 38 பேருக்கு தமிழக அரசும், ஆந்திர அரசும் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கின. அதேபோல், இப்போதும் இருமாநில அரசுகளும் இணைந்து கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, எந்த குற்றமும் செய்யாமல் ஆந்திரச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3000-க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை விடுவிக்கவும், அவர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் 20 தமிழர்களின் படுகொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தும்படி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி இதற்கான உத்தரவைப் பெறவும் தமிழக அரசு தயங்கக் கூடாது.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The PMK has decided to send a special investigation team to Andhra to find out the original reason for the encounter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X