அறவழியில் போராடிய என்எல்சி தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதா? வேல்முருகன் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்எல்சி தொழிலாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Police attacks on NLC contracted staffs

என்எல்சியின் சுரங்கம்-IA பிரிவில் சுமார் 1300 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள். இந்தப் பணிக்காக தங்களின் வீட்டு மனைகளையும், விலை நிலங்களையும் என்எல்சிக்காகத் தந்தவர்கள். அதன் பொருட்டே ஒப்பந்தம் போடப்பட்டு பணியில் இருக்கிறார்கள்.

ஒப்பந்தப்படி மாதத்தில் 26 நாட்கள் இவர்களுக்குப் பணி வழங்க வேண்டும். ஆனால் கடந்த 12ந் தேதியன்று 19 நாட்கள் மட்டுமே பணி வழங்க முடியும் என்று என்எல்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. இதன் காரணமாக மறுநாள் 13ந் தேதி முதல் இந்த 1300 தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கடந்த 18 நாட்களாகப் போராடி வரும் தொழிலாளர்களை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று காலை வடலூர் நான்குமுனை சந்திப்பு சாலையில் காலை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் இருந்தபோது திடீரெனப் புகுந்து காவல்துறை அவர்கள் மீது தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டது. இதில் பெண்களும் குழந்தைகளும்கூட காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலுக்கு இலக்காயினர். தடியடி நடத்திய காவல்துறை அனைவரையும் கைதும் செய்தது.

அறவழியில் போராடிய தொழிலாளர்கள் மீதான காவல்துறையின் இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தி ஒப்பந்தப்படி நியாயமாக அவர்களுக்கு வழங்க வேண்டிய 26 நாட்கள் பணியை மறுபடியும் வழங்க வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TVK leader Velmurugan has condemned Police for attacking on NLC contracted staffs today.
Please Wait while comments are loading...