For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்ப் புத்தாண்டு: முதல்வர் ஜெ., ராமதாஸ், வைகோ வாழ்த்து

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி முதல்வர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கோலோகலமாய் கொண்டாடி மகிழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Political leaders extend Tamil New Year greetings

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி" என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கிறார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும் "சித்திரையே வா நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா" என்று உளமகிழ அனைவரும் வரவேற்கும் இப்புத்தாண்டில் அனைத்து வளமும் பெருகும் வகையில் நம் தாய்த் தமிழ்நாட்டினை மேலும் உயர்த்திட இந்த இனிய திருநாளில் உறுதியேற் போம்.

இத்தமிழ்ப் புத்தாண்டில் இன்பமும், இனிமையும் தமிழர்தம் இல்லந்தோறும் தங்கிப் பொங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து:

உழைப்புடனும், கொண்டாட்டங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்திரை திருநாளுக்கு தனிச்சிறப்பு உண்டு. சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த சித்திரை திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்த்து:

இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள்தான் சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாதத்தின் முழுநிலவு நாளினை கடற்கரை மணல் வெளியில் நதிப்படுகைகளில் கூடாரங்கள் அமைத்து தமிழர்கள் இன்ப விழாவாகக் கொண்டாடினர்.

இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் உன்னதமான சிறப்பைப் பெறுகிறது. ஆம்! சித்ரா பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாள், இந்த வருடம் சித்திரை மாதத்தின் தலைவாயிலாம் முதல் நாளில் அமைந்திருப்பது மிகவும் அபூர்வமாக ஏற்படக்கூடியதாகும்.

இந்த ஏப்ரல் 14 ஆம் நாள்தான், இந்திய அரசியல் சட்டத்தையாத்துத் தந்த மாமேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் ஆதலால் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa, PMK leader DR Raamadoss, MDMK leader Vaiko extended their greetings to people on Tamil New year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X