For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்தா புயல் சேதத்தால் குவிக்கப்பட்ட மரங்களால் தீ விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: 'வர்தா' புயல் சேதத்தால் குவித்து வைக்கப்பட்ட மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும். மரங்களால் தீ விபத்துக்கள் ஏற்படும் ஆபத்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வர்தா புயல் தாக்கி 12 நாட்கள் ஆகி விட்ட நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. சென்னையில் சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. மின்சாரம் வழங்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மின் வினியோகம் சீரடையவில்லை. இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டால், ஒரு மணி நேரம் மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Ramadoss urges state government to remove damaged trees from roads in chennai city

சென்னை மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் 'வார்தா' புயலால் சிறியதும், பெரியதுமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. அவற்றில் பெரும்பான்மையான மரங்கள் இன்னும் அகற்றப் படவில்லை. சென்னையில் போக்குவரத்துச் சாலைகளில் சாய்ந்த மரங்கள் மட்டும் தான் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளன.

சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மரங்கள் அனைத்தும் கிடங்குகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பான முறையில் வைக்கப்படுவதற்கு பதிலாக ஆங்காங்கே உள்ள விளையாட்டுத் திடல்களிலும், மாநகராட்சியின் மண்டல, கோட்ட மற்றும் வட்ட அலுவலகங்களிலும் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் கண்ட இடங்களில் போடப்பட்டிருக்கின்றன.

இதனால் விளையாட்டுத் திடல்கள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் மேலாக குவிக்கப்பட்டுள்ள மரங்களால் தீவிபத்து ஏற்படும் ஆபத்துள்ளது. அதனால் மரங்களில் பயனுள்ளவற்றை கிடங்குகளுக்கு கொண்டு சென்று பாதுகாத்து வைக்க வேண்டும். பயன்பாடற்ற விறகுக்கு மட்டுமே பயன்படக்கூடிய மரங்களை ஏலம் விட வேண்டும்.

இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், விளையாட்டுத் திடல்களும், மண்டல அலுவலகங்களும் அவற்றின் உண்மையான பயன்பாட்டுக்கு கிடைக்கும். எனவே, போர்க்கால அடிப்படையில் 2 நாட்களில் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும். 'வர்தா' புயலால் சென்னையில் உள்ள பூங்காக்களும் சீரழிந்து விட்டன. அவற்றில் சாய்ந்த மரங்களையும் அப்புறப்படுத்தி, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Doctor Ramadoss urges state government to remove damaged trees from roads in chennai city
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X