For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்: கொஞ்சம் மகிழ்ச்சியையும் நிறைய ஏமாற்றத்தையும் அளிக்கிறது - ராமதாஸ், வைகோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் சில வரவேற்கதக்க அம்சங்களும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத்தில் 2026-17 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தாக்கல் செய்திருக்கிறார். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்திற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

ramadoss and vaiko statement about railway budjet

கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று அமைச்சர் அறிவித்திருப்பது தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இனிப்பான செய்தி ஆகும். முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு, கீழ்நிலை படுக்கைகளில் (Lower Berth) மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், பயணிகள் நெரிசல் அதிகமுள்ள வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத அதிவேக தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் பாராட்டத்தக்கவை.

முன்பதிவு செய்யப்படாத தொடர்வண்டிகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவது அவரச பணிகளுக்காக திடீரென பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2020 ஆம் ஆண்டில் கேட்டவுடன் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை அல்லது படுக்கை வசதி கிடைக்க வகை செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிக்கிறது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் இப்போது இயக்கப்படும் தொடர்வண்டிகளை விட 50% வண்டிகள் கூடுதலாக இயக்கப்பட வேண்டும்.

ஆனால், தொடர்வண்டித்துறை அமைச்சராக சுரேஷ்பிரபு பதவியேற்ற பின் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தாக்கல் செய்யப்பட்ட நிநிநிலை அறிக்கைகளில் புதிய தொடர்வண்டிகள் எதுவும் அறிவிக்கப் படுத்தப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொடர்வண்டிகளை இயக்கவும் நடவடிக்கை இல்லை. இத்தகைய சூழலில் கேட்டவுடன் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கிடைக்கும் நிலையை அடுத்த 4 ஆண்டுகளில் சாத்தியமாக்குவது எப்படி? என்பதை அமைச்சர் சுரேஷ் பிரபு தான் விளக்க வேண்டும்.

தருமபுரி - மொரப்பூர் இடையே தொடர்வண்டி இணைப்புப் பாதை திட்டம் ரூ.134 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளருமான மருத்துவர் அன்புமணி கடந்த இரு ஆண்டுகளாக கடுமையாக உழைத்தார்.

இப்போதைய தொடர்வண்டித்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, முந்தைய அமைச்சர் சதானந்த கவுடா, தெற்கு தொடர்வண்டி மண்டல பொதுமேலாளர் ஆகியோரை குறைந்த பட்சம் 10 முறையாவது சந்தித்து இந்த திட்டங்கள் குறித்து வலியுறுத்தினார். அதையேற்று இத்திட்டம் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது அன்புமணி இராமதாசுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இத்திட்டத்தை அறிவித்ததற்காக அமைச்சர் சுரேஷ்பிரபு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் பெரும்பாலானவை இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 139 அறிவிப்புகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மேலோட்டமாக கூறியிருக்கிறார். அவை எந்த அளவுக்கு முன்னேற்றமடைந்து உள்ளன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 19 தொடர்வண்டித் திட்டங்கள் நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அவற்றை செயல்படுத்த முந்தைய மதிப்பீட்டின்படி இன்னும் ரூ.9215 கோடி தேவைப்படும் நிலையில், அதில் 10% நிதி கூட இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டைப்பாதை திட்டத்திற்கு மட்டும் தான் அதை முடிக்கும் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும் போது தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. மொத்தத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி, நிறைய ஏமாற்றங்கள் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இரண்டாவது முறையாக இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். வண்ணக் கனவுகளுடன் இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்றார் அவர். ஆனால், அவற்றைச் செயல்படுத்திட முடியவில்லை என்பதை இரயில்வே பட்ஜெட் 2016-2017 உணர்த்துகிறது.

எளிய மக்களுக்காக முழுவதும் முன்பதிவு இல்லாத சாதாரண அதிவிரைவு வண்டிகள் இயக்குவது. முன்பதிவு பயணச் சீட்டுகளில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு. மூத்த குடிமக்களுக்கான கீழ்ப்படுக்கைகளை 50 சதவிகிதம் அதிகரிப்பது. சில நீண்ட தூர பயண இரயில்களில் 2 முதல் 4 பெட்டிகள் இணைப்பது. முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கைபேசி சார்ஜ் செய்யும் வசதி அளிப்பது போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பயணிகள் வசதிக்காக அறிவிக்கப்பட்டவை அனைத்தும் கடந்த பட்ஜெட்டிலும் இடம் பெற்றதைப் போன்று உள்ளது. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் இரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இதற்காக நிதி ஆதாரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதைப் போன்று, சென்னை - டில்லி சரக்கு இரயில் பாதை அமைத்தல், நாகப்பட்டினம் இரயில் நிலையத்தை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு கால நிர்ணயம் இல்லை.

தமிழக அரசும், இரயில்வே அமைச்சகமும் இணைந்து செயல்படுத்தும் சென்னை - தூத்துக்குடி சரக்கு இரயில் பாதை, சென்னை - மதுரை - கன்னியாகுமரி அதிவேக பயணிகள் இரயில் பாதை, மதுரை - கோவை அதிவேக இரயில் பாதை ஆகிய மூன்று திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு முன் வைத்த கோரிக்கை குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்திற்கென ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இரயில்வே திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சென்னை - கன்னியாகுமரி இரட்டை இரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், இத்திட்டம் மேலும் கால தாமதமாகும். இரயில்வே வாரியத்தின் திட்ட மதிப்பீட்டு அனுமதி பெற்ற பல திட்டங்கள் போதிய நிதி இல்லாமல் ஆமை வேகத்தில் நடக்கின்றன.

புதிய இரயில்கள் இயக்குதல், பழைய மற்றும் புதிய இரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததற்கு இரயில்வேத் துறையில் அரசின் முதலீடுகள் குறைக்கப்பட்டுள்ளதும், வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளதும்தான் காரணம் ஆகும். கடந்த ஏப்ரல் முதல் 2016, ஜனவரி வரை வருவாய் இலக்கு 1,14,416 கோடி ரூபாய். ஆனால், இதில் இரயில்வே துறையின் வருமானம் 3.77 சதவிகிதம் குறைந்து இருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் இரயில்வே துறையில் உள் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் இரயில்வே வளர்ச்சிக்கும் 8.50 இலட்சம் கோடி ரூபாய் தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அரசின் பொதுத்துறையான எல்.ஐ.சி. நிறுவனம் 1.50 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று இரயில்வே அமைச்சர் கூறுகிறார். மற்றவை தனியார் பங்களிப்பு மற்றும் அயல்நாட்டு நேரடி முதலீடுகள் மூலம் திரட்டப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறையான இரயில்வே துறையைப் படிப்படியாகத் தனியார் மயத்தை நோக்கித் தள்ளும் வகையில்தான் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. போதிய நிதி இல்லாததால், புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை என்று இரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்வதன் மூலம் தனியார் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

அரசின் முதலீடு என்பது மக்களுக்கு சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தனியார் முதலீடு என்றால் அதில் இலாப நோக்கம் மட்டுமே முதன்மையாக இருக்கும். இலட்சக்கணக்கான இரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆக, மோடி அரசின் மூன்றாவது இரயில்வே பட்ஜெட் நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
PMK founder ramadoss and MDMK leader vaiko issue the statement about union railway budjet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X