For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பாலியல் பலாத்காரங்கள் பெருகிவிட்டன: பட்டியலுடன் கருணாநிதி அறிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் என்று சட்டசபையில் ஜெயலலிதா தெரிவித்ததை திமுக தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற முக்கிய குற்றச்செயல்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க. ஆட்சி வந்தாலும் வந்தது; சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை, வாரம் ஒரு கற்பழிப்பு என்று செய்திகள் நம்மைச் செந்தேளாய்க் கொட்டு கின்றன. அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அ.தி.மு.க. அரசினரோ, தங்களுக்கு அதிலே எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதைப் போலவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைப் போலவும் ஒரு நாடகம் நடத்தி, தங்களையும் ஏமாற்றி தமிழக மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

Rape incidents raises in Tamilnadu: Karunanidhi

காவல் துறை மானியத்தின் மீதான விவாதத் திற்குப் பதில் கூறிய முதல் அமைச்சர் ஜெயலலிதா, "இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக் கின்ற மாநிலம் தமிழகம்தான்"" என்று கூறியதாக அனைத்து நாளேடுகளும் வெளியிட்டிருக்கின்றன.

ஒருவேளை; ஆண்கள் பாதுகாப்பாக தமிழகத்திலே இல்லை என்பதைக் கூற முடியாமல், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. பெண்கள் எந்த அளவுக்கு தமிழகத்திலே பாதுகாப்பாக இருக் கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களை முன் வைக்கத்தான் இந்த மடல்!

அ.தி.மு.க. ஆட்சியில், பொள்ளாச்சியில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். நன்னிலம் அருகே விமலா - கோயம்பேட்டில் இளம் பெண் மலர் என நீளும் பட்டியலில் - கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வெற்றிலைக் கொடிக்காலுக்குள் ப்ளஸ் 2 படித்து முடித்த தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவி வினிதா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் தமிழகத்திலே கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டவர்களின் ஒரு சிறு பட்டியல் :-

> வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி காயத்ரி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை.

> சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழித் துக் கொலை.

> சைதாப்பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம்.

> தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 13 வயது சிறுமி, பள்ளி மாணவி புனிதா கற்பழிக்கப்பட்டுக் கொலை.

> நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கற்பழித்தனர்.

> விருதாசலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிக் கப்பட்டார்.

> சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமம், சந்தியா என்கிற இளம்பெண், கற்பழிக் கப்பட்டு 3வது மாடியிலிருந்து வீதியிலே எறியப்பட்டாள்.

> தர்மபுரியில் அரூர் தாலுக்காவில் தாதரா வலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண் திருமணமானவர் கற்பழித்துப் படுகொலை.

> தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2வது தெருவில் மாரியம்மாள் என்கிற இளம்பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். விடியற் காலையில் வீடு புகுந்து கற்பழிக்கப்பட்டாள்.

> விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள் கற்பழிக்கப்பட்டு சவுக்குத் தோப்பில் பிணமாகத் தொங்க விடப்பட்டாள்.

> உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள்.

> நாமக்கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

> வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயது பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரண மாக, கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்து தற்கொலை.

> அம்பத்தூரில் முகப்பேர் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியை வீடு புகுந்து கற்பழித்திட முயற்சி.

> சென்னை, பொழிச்சலூரில் பிரேமலதா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு காட்டில் பிணமாக வீசப்பட்டுக் கிடந்தாள்.

> திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமணமான மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு.

> சென்னை கோயம்பேட்டில் வீட்டு வேலை செய்து வந்த பெண் கண்ணம்மாவை வீட்டு உரிமையாளர் கற்பழித்தார்.

> ஒரத்தநாடு, புதூரில் 6ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது கற்பழிக்கப்பட்டார்.

> ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்.

> சென்னை ஆதம்பாக்கம் செல்வி ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண் கற்பழிப்பு

> மைலாப்பூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் - தப்பியோடிய டிரைவரின் தாய் தற்கொலை.

> தர்மபுரியில் 16 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் - இப்படி பட்டியல் முடிவின்றி நீண்டு கொண்டே போகிறது.

"பெண்களுக்கு எதிரான குற்றம் - குறிப்பாக தலித்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் அடிக்கடி நிகழ்கின்றன - ஆனால் காவல் துறையினர் அந்தக் குற்றங்களைப் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர் - விளிம்பு நிலை மக்களின் துயரங்களைப் பற்றி அதிகார வர்க்கத்தினர் சிறிதும் கவலை கொள்ளவில்லை - காயம்பட்டவர்கள் ஊமையாக"" என்று ஆங்கில நாளேட்டில் செய்தி வந்துள்ளது.

பாலியல் குற்றங்கள் மட்டுமா? அ.தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு கொள்ளைகள் நடை பெறுகின்றன என்பதைப் பற்றி மற்றொரு ஆங்கில நாளேடு விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டின் தொடக்க உரையில் முதலமைச்சர் ஜெயலலிதா "சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை இங்குள்ளோர் அனைவரும் பெருமையும், திருப்தியும் கொள்ளும் நிலையில்தான் உள்ளது"" என்று பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேசிய போதும், "எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டிலே சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன"" என்று குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஆதாரப் பூர்வமாக விளக்கம் கூற வேண்டுமே யானால், அ.தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டுகளில் ஏடு களிலே வெளிவந்த கொலைகள் மாத்திரம் 3,525 - கொள்ளைகள் 1,352 - வழிப்பறி மோசடிகள் 1,023 - செயின் பறிப்புகள் 1,120!

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Rape incidents raises in Tamilnadu charge, DMK chief Karunanidhi in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X