For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேகமாகவும், விவேகமாகவும் பணியாற்றி வெற்றிக்காக பாடுபடுங்கள் - ஸ்டாலின்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேகமாகவும் விவேகமாகவும் பணியாற்றி, வெற்றியினைப் பெற்றிடவேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் களம் நமக்காக அமைந்துள்ளது. இடையில் இருப்பது ஒரு வாரம்தான் என்பதை மனதில் கொண்டால் நாம் எத்தனை வேகமாகவும் விவேகமாகவும் பணியாற்றி, வெற்றியினைப் பெற்றிடவேண்டும் என்பதை உணர முடியும். ''தொய்வின்றித் தொடரட்டும் இடைத்தேர்தல் பணி. திமுகதான் தமிழகத்தின் எதிர்காலம் இனி!'' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு புதன்கிழமை ஸ்டாலின் எழுதிய கடிதம்:

''போர்க்களத்தைப் புன்னகையுடன் எதிர்கொள்ளும் புறநானூற்று தமிழ் வீரனைப் போல, தேர்தல் களம் என்றால் திமுகவினர் துள்ளிக் குதித்து வந்து தேனீக்களாகச் செயல்படுவது இன்று-நேற்றல்ல, திமுக முதன்முதலாக சந்தித்த 1957-ம் ஆண்டு தேர்தலிலிருந்தே தொடர்ந்து வருகிறது மாற்றுக்கட்சியினர் கூட தேர்தல் பணிக்கு திமுக தொண்டர்களை உதாரணம் காட்டும் வகையில் தேர்தல் பணிகள் ஆற்றல் மிகுந்ததாக இருக்கும்.

சோர்வை நீக்குங்கள்

சோர்வை நீக்குங்கள்

சோர்வை நீக்கிக் கொள்ளவும், சிறுசிறு பூசல்களைக் களைந்து திமுகவினர் அனைவரும் ஒரே குடும்பத்தினராக செயல்படவும், 'பார் எமது பட்டாளத்தை' என மாற்றாருக்குக் காட்டிடவும், வெற்றியினை ஈட்டி ஜனநாயகம் காத்திடவும் தேர்தல் களம் என்பது நமக்கு ஒரு நல்வாய்ப்பு.
அந்த வகையில்தான் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் களம் நமக்காக அமைந்துள்ளது. இடையில் இருப்பது ஒரு வாரம்தான் என்பதை மனதில் கொண்டால் நாம் எத்தனை வேகமாகவும் விவேகமாகவும் பணியாற்றி, வெற்றியினைப் பெற்றிடவேண்டும் என்பதை உணர முடியும்.

புதிய அத்தியாயம் எழுதுவோம்

புதிய அத்தியாயம் எழுதுவோம்

திமுக வரலாற்றில் திருவண்ணாமலை இடைத்தேர்தல் தொடங்கி அண்ணாநகர்-மயிலாடுதுறை இடைத்தேர்தல்கள் வரை ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளை வென்ற களங்கள் நிறையவே உண்டு. ஆர்.கே.நகர் களமும் அப்படிப்பட்டதாக அமைந்திட வேண்டும். கடந்த கால வெற்றி வரலாற்றின் புதிய அத்தியாயத்தை இப்போது எழுதுவது களத்தில் உழைக்கும் திமுகவினரின் கைகளில்தான் உள்ளது.

மக்கள் நம் பக்கம்

மக்கள் நம் பக்கம்

ஆர்.கே.நகரில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் ஒரு தரப்பிடம் ஆட்சி இருக்கிறது. இன்னொரு தரப்பிடம் சில மாதங்கள் முன்பு வரை ஆட்சி இருந்தது. நம்மிடம் அதிகாரம் இல்லை. ஆனால், வாக்காளர்களான பொதுமக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்மோடு இருக்கும் ஆர்.கே.நகர் மக்களை விலைக்கு வாங்குவதற்கு என்ன செய்யலாம் என்கிற ஜனநாயக விரோத செயல்பாடுகளில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால், இந்த முறை மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. காரணம், தங்களை யார் விலைக்கு வாங்க நினைக்கிறார்களோ அவர்களால் ஏமாற்றப்பட்டதால்தான் இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை ஆர்.கே.நகர் மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

அண்டப்புளுகு ஆகாச புளுகு

அண்டப்புளுகு ஆகாச புளுகு

அதனை உறுதிப்படுத்துவது போலவே ஆட்சியில் இருப்பவர்களும், சில மாதங்களுக்கு முன்பு வரை ஆட்சியில் இருந்தவர்களும் செய்யும் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன. மக்களுக்கான திட்டங்களைப் பற்றி அக்கறை செலுத்தாமல் முன்னாள் முதல்வரின் மரணத்திற்கு காரணம் நீயா-நானா என இரண்டு அணிகளும் மோதிக் கொள்கின்றன. ஓர் அணி அண்டப் புளகுகளை அள்ளி விடுகிறது என்றால் இன்னொரு அணி ஆகாசப் புளுகுகளை அள்ளிக் கொட்டுகிறது. இரண்டு பேரும் கூட்டாக இருந்தபோதுதானே எல்லாமும் நடந்தது என்பதை ஆர்.கே.நகர் மக்கள் மறக்காத காரணத்தால் அவர்கள் இந்த இரு அணிகளையும் புறந்தள்ளி, தங்களுக்கு கை கொடுக்கக்கூடிய இயக்கம் திமுகவே என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

வேகத்தோடு விவேகம்

வேகத்தோடு விவேகம்

ஆர்.கே.நகர் வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் அங்கே பணியாற்றும் திமுகவினரின் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். திமுகவின் தேர்தல் பணிமணைகளில் இருவண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. திமுகவினர் பெருமளவில் திரண்டு உற்சாகத்துடன் பணியாற்றுகின்றனர். இந்த வேகமும் வியூகமும் மேலும் கூர்மைப்படுத்தப்பட்டு, தேர்தல் நாள் வரை அயராமல் செயல்படவேண்டியது அவசியமாகும்.

ஆதரவை பெறுங்கள்

ஆதரவை பெறுங்கள்

பொதுக்கூட்டங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எனத் தொடர்ச்சியாக நடைபெறும் பணிகளுடன் திண்ணைப் பிரச்சாரமும் அதன் வாயிலாக ஒவ்வொரு வாக்காளரையும் திமுகவினர் நேரில் அணுகி அவர்களின் ஆதரவை உறுதி செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக, பெண் வாக்காளர்களை திமுகவின் மகளிரணி சகோதரிகளும், திமுக குடும்பத்து மகளிரும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வு வெளிச்சம் பெற உதயசூரியன் தேவை என்பதை உணர்த்திட வேண்டும்.

பணம் ஆறாக ஓடுகிறது

பணம் ஆறாக ஓடுகிறது

பதவிக்காக எதையும் செய்வோம் எனக் களமிறங்கியிருக்கும் ஆளும் அணி-ஆட்சியை அனுபவித்த அணி இவையிரண்டுமே மக்களை எந்த விதத்தில் மயக்கலாம் எனத் திட்டமிட்டு செயல்படுகிறார்ககள். தொகுதி முழுவதும் பணம் ஆறாக ஓடுகிறது என்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்து, கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறது.

துரோகத்தை அறிந்தவர்கள்

துரோகத்தை அறிந்தவர்கள்

பணத்தைக் கொண்டு பெண் வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம். அதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் எனக் கற்பனை கணக்குகளில் மூழ்கியிருப்பவர்களுக்குத் தக்க பாடம் வழங்கக்கூடிய வகையிலே ஆர்.கே.நகரின் தேர்தல் முடிவுகளை அமையச் செய்வது திமுகவினரின் கைகளில்தான் உள்ளது. பெண் வாக்காளர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல, நினைத்தபடி வாக்குகளைப் பறிப்பதற்கு! அவர்கள்தான் இரு அணியினரின் துரோகத்தை முழுமையாக அறிந்தவர்கள்.

பச்சை துரோகம்

பச்சை துரோகம்

அம்மா அணி என்றும் புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் ஓட்டுக்காக யார் பெயரை இரு அணியினரும் பயன்படுத்துகிறார்களோ அந்தப் பெயருக்குரியவருக்கு இரண்டு அணியினருமே பச்சைத் துரோகம் செய்ததன் விளைவுதான், இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பதை உணர்ந்திருக்கும் வாக்காளர்களை பணத்தால் மறக்கடிக்கச் செய்துவிடலாம் என நினைக்கும் சூழ்ச்சியை முறியடித்து, இரு அணியினரின் துரோகத்தை திமுகவினர் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

களப்பணியாற்றுங்கள்

களப்பணியாற்றுங்கள்

தேர்தல் விதிகளுக்குட்பட்டு களப்பணியாற்ற வந்திருக்கும் திமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தொண்டர்களை ஒருங்கிணத்து, அவர்களுக்கானப் பணிகளைப் பிரித்துக் கொடுத்து, அவை செம்மையாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். அதுபோலவே, தோழமைக் கட்சியினரின் உதவிக்கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு, அவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். தேர்தல் பணி என்றால் திமுகவைப் போல இருக்கவேண்டும் என்கிற நம்முடைய வரலாற்றுப் பெருமை ஆர்.கே.நகர் தொகுதியில் மேலும் செம்மை பெறவேண்டும்.

ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானவை

ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானவை

தமிழகத்தின் எதிர்காலத்தை குற்றவாளி மாஃபியா கும்பலிடமிருந்தும் மணல் மாஃபியா கும்பலிடமிருந்தும் மீட்டு, ஜனநாயகத்தின் வெற்றியை நிர்ணயிக்கவிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானவை. நம்மை வழிநடத்தும் தலைவர் கருணாநிதி ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திக்கொண்டே இருப்பார். இளையான்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மலைக்கண்ணன் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார் என்பதை எடுத்துக்காட்டி, நம்மை விழிப்படையச் செய்வது தலைவர் கருணாநிதியின் வழக்கம். அவரிடம் பயின்ற பாடத்தினை மனதில்கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

தமிழகத்தின் எதிர்காலம்

தமிழகத்தின் எதிர்காலம்

ஓயாத உழைப்பும்-கூர்மையான வியூகமம்- சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறனும்-ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே நமக்கு வெற்றியாக விளையும். இவற்றில் எது ஒன்று குறைந்தாலும் தமிழகத்தை வஞ்சிக்கும் கும்பல்களுக்கே சாதகமாக அமையும். இதனைக் களத்தில் இருப்போர் அனைவரும் உணர்ந்து, திட்டமிட்டு உழைத்து வெற்றியை அறுவடை செய்து அதனை தலைவர் கருணாநிதிக்கும், பேராசிரியருக்கும் காணிக்கையாக்குவோம். தொய்வின்றித் தொடரட்டும் இடைத்தேர்தல் பணி. திமுகதான் தமிழகத்தின் எதிர்காலம் இனி!'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK working leader MK Stalin has written a letter to DMK workers for RK Nagar bypoll victroy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X