For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்துவட்டி, செம்மரக்கடத்தல்… கரகாட்டக்காரி மோகனாவை பிடிக்க போலீஸ் தீவிரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வேலூரில் செம்மரக்கடத்தல், கந்துவட்டி தொழில் செய்து 4 கோடி ரூபாய் பணத்தை பதுக்கிய கரகாட்டக்காரி மோகனாவை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

வேலூரை அடுத்த காட்பாடி அருகில் உள்ள தாராப்படவேடு கோவிந்தராஜ முதலியார் தெருவில் வசித்து வந்தவர் ஜமுனா. இவரது வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் மோகனாம்பாள் என்ற கரகாட்டப் பெண்மணி குடியேறினார்.

கடந்த மே 25-ம் தேதி மோகனாம்பாள் குடியிருந்த வாடகை வீட்டில் போலீஸார் நடத்திய திடீர் ரெய்டில் நான்கு கோடி ரொக்கப் பணம், 73 சவரன் தங்க நகைகள், எட்டரை கோடி ரூபாய் மதிப்பிலான அடமான பத்திரங்கள் என அதிரடியாக கைப்பற்றப்பட்டன.

கரகாட்டக்காரியான மோகனாவிடம் எப்படி இவ்வளவு பணம்? செம்மரம் கடத்தும் கும்பலோடு மோகனாம்பாளுக்கு இருந்த தொடர்புதான் காரணம் என்பது தெரிந்து காவல் துறையும் அதிர்ந்துபோயுள்ளது.

கரகாட்டக்காரி

50 வயதான மோகனாம்பாள் தனது இளமைக் காலத்தில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் ஆடி புகழ் பெற்றவர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இவர் கரகாட்டம் ஆடியுள்ளார்.

வட்டித்தொழில்

திருமணம் ஆகாத நிலையில் வயதானதால் கரகாட்ட மவுசு குறைந்து விட்டது. இதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். குறுகிய காலத்தில் அதிக பணம் புரளவே, அதை அதிக வட்டிக்கு விட்டு பலமடங்காக்கினார். பணத்தை வசூலிக்க ரவுடிகளையும், அரசியல்புள்ளிகளையும் நட்பாக்கிக்கொண்டார் மோகனாம்பாள்.

வாடகை வீட்டில்

மோகனாம்பாளுக்கு வேலூர் வசந்தபுரத்தில் சொந்த வீடு உள்ளது. அங்கு அவர் வசிக்காமல் காட்பாடி தாரா படவேடு என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் திடீர் என்று அவரிடம் கட்டுக் கட்டாக பணம் புழங்கியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கவே அதிரடி ரெய்டு நடத்தி பணம், நகைகளை கைப்பற்றியுள்ளனர். தகவல் அறிந்து மோகனாம்பாள் தலைமறைவாகிவிட்டார்.

கடத்தல்காரன் சரவணன்

மோகனாம்பாளுக்கு சொந்த வீடு வேலூர் வசந்தபுரத்தில் உள்ளது. அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். வீடு பூட்டிக் கிடந்தது. அவரது அக்காள் நிர்மலா மகன் சரவணன் அருகில் உள்ள வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவனது வீட்டுக்கு போலீசார் சென்றனர்.

போலீஸ் விசாரணை

ஆனால் அங்கு அவன் இல்லை. அவனது மனைவி தேவிபாலாவும் தலைமறைவாகி விட்டாள். இந்த வீடும் பூட்டப்பட்டு இருந்தது. சரவணன் பற்றி விசாரணை நடத்திய போது அவன் செம்மரக் கடத்தல்காரன் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

செம்மரக்கடத்தல் பணம்

எனவே மோகனாம்பாள் வீட்டில் சிக்கியது செம்மரக் கடத்தலில் சேர்த்த பணம் என்று தெரிய வந்தது.

சரவணன் ஆரம்ப காலத்தில் சாதாரண திருட்டுகளில் ஈடுபட்டு வந்தான். அப்போது அவனுக்கும் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஆந்திர மாநில காடுகளில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தும் தொழில் செய்து வந்தான். கடந்த 2 ஆண்டுகளாக செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளியாக சரவணன் மாறினான். செம்மரக் கடத்தல் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தான்.

உதவி செய்த மோகனாம்பாள்

சரவணன் தனக்கு உதவியாக சித்தி மோகனாம்பாளை கூட்டு சேர்த்துக் கொண்டார். இருவரும் செம்மரக் கடத்தலில் கை கோர்த்து செயல்பட்டு வந்தனர்.

மேலும் பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு செம்மரங்கள் விற்பனை செய்து கொடுக்கும் புரோக்கர்களாகவும் செயல் பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. அந்தப் பணத்தைத்தான் மோகனாம்பாள் தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்.

தனிப்படை போலீஸ்

போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் சொந்த வீடு இருந்தும் அதில் பணத்தை பதுக்கி வைக்காமல் வாடகைக்கு வீடு எடுத்து அதில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

கடத்தல் புள்ளிகளான மோகனாம்பாள், சரவணன் ஆகியோரை பிடிக்க காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஆந்திராவில் பதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களது செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் அவர்களை பல இடங்களில் தேடி வருகிறார்கள்.

சரவணன் மனைவி கைது

இந்த நிலையில் தனிப்படை போலீசார் சரவணனின் மனைவி தேவிபாலாவை (24) நேற்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கைது செய்தனர். அவரை அழைத்துச் சென்று வசந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டை திறந்து சோதனை செய்தனர். அங்கு பணம் எதுவும் கிடைக்காததால் அந்த வீட்டை போலீசார் பூட்டி ‘சீல்' வைத்தனர்.

மோகனாம்பாள், சரவணன் ஆகியோரிடம் இவ்வளவு பணம் - நகைகள் எப்படி வந்தது? என்பது பற்றியும் அவர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பது குறித்தும் தேவிபாலாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் அவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் மோகனாம்பாள் பிடிபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே மோகனாம்பாள் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற முயற்சி மேற் கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் முன் ஜாமீன் பெறுவதற்குள் சுற்றிவளைத்து பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

விலை உயர்ந்த செம்மரங்கள்

ரெட் சாண்டல் வுட் என்று சொல்லப்படும் செம்மரங்கள் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து அதிகம் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் கிலோ 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் இந்திய எல்லையைத் தாண்டினால் கிலோ 8,000 முதல் 10,000 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. சந்தன மரங்களைவிட கூடுதல் மதிப்பாகக் கருதப்படும் செம்மரங்கள் சமீப காலங்களில் டன் கணக்குகளில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு வருகின்றன.

நெருங்கிய போலீசார்

30 அல்லது 40 பேர் ஒன்றாகச் சேர்ந்து மரங்களை இரவோடு இரவாக அறுத்து, லாரியில் ஏற்றி, குறிப்பிட்ட இடத்தில் டீலர்களிடம் பத்திரமாகச் சேர்க்கின்றனர். மரத்தை வெட்டும் ஆட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் தரும் வியாபாரிகளும் இங்கு உள்ளனர். மூன்று மாநிலங்களிலும் நடைபெறும் செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கியப் புள்ளியை போலீஸார் நெருங்கிவிட்டனர். அந்த நபருக்குத் தொடர்புடைய நபர்தான் கரகாட்டகாரி மோகனாம்பாள்.

யாருடைய பணம்

அதேசமயம், மோகனாம்பாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வேறு தகவல்களும் உலாவருகின்றன. மோகனாவிற்கு தீனா என்கின்ற பைனான்சியர் நல்ல பழக்கமாம். அவர்தான் கந்துவட்டித்தொழில் மூலம் வட்டிக்கு விட்டு நிறைய பேரின் வீட்டுப் பத்திரங்களைப் பறித்துக்கொள்வாராம். தீனா ஆந்திராவிலும் வட்டிக்குப் பணம் கொடுத்துவந்தார். அதில் செம்மர கடத்தல் கும்பலும் அடக்கம். எனவே மோகனா வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் தீனாவிற்கு சொந்தமானதா? செம்மரக்கடத்தல் கும்பலுக்குச் சொந்தமானதா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Cash to the tune of Rs. 4,04,73,500 and gold jewels weighing 73 sovereigns were seized from the locked house of a karagam artist in Tharapadavedu in the Katpadi area of Vellore on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X