For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயிரக்கணக்கான ஏக்கர் கபளீகரம்… புராதன சின்னங்கள் அழிப்பு: அதிகாரிகளை எச்சரித்த சகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள், நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கபளீகரம் செய்துள்ளனர் கிரானைட் குவாரி முதலைகள். ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

முறைகேடான குவாரிகளினால் ஆயிரம் ஆண்டு பழமையான புராதன சின்னங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அரசு நிலங்களை காட்ட மறுத்து ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்த அதிகாரிகளை சகாயம் எச்சரிக்கை விடுத்தார்.

Sagayam begins inspection of quarry sites

மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள ரூ.16000 கோடி அளவிலான கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு செய்துவரும் சகாயம் வியாழக்கிழமையன்று நேரடியாக களத்தில் இறங்கினார். திருவாதவூரில் உள்ள குவாரிகளுக்கு அவர் தனது குழுவினருடன் சென்றார். கனிம வளம், வேளாண்மை, வருவாய், பொதுப்பணி, தொல்லியல் துறை அதிகாரிகள் பலர் உடன் வந்தனர். டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலைமையில் 50 போலீஸார் சகாயத்திற்கு பாதுகாப்பாக சென்றனர்.

சிதைக்கப்பட்ட புராதன சின்னம்

திருவாதவூர் மேலச்சுனைகுளம் அருகே அமைந்துள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஓவாமலை என்றழைக்கப்படும் சமணர் படுகையை அவர் பார்வையிட்டார். தமிழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தொல்லியல் ஆர்வலர் கபிலன் உட்பட பலர் பாதிப்புகள் குறித்து சகாயத்திடம் தெரிவித்தனர்.

சமணர் படுகைகள் சேதம்

2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதி, படித்ததை இங்குள்ள கல்வெட்டுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. மலைக்கு மேல் உள்ள சிவன் கோயிலுக்கு மாணிக்கவாசகர் வந்துசென்றுள்ளார். மலை குகையில் 10 சமணர் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் குவாரி நடத்தியவர்களால் கடுமையாக சேதமாக்கப்பட்டுவிட்டன.

பாதை அடைப்பு

மலையை ஆங்காங்கே வெட்டி சிதைத்திருந்தனர். இங்கு யாரும் நுழைந்துவிடாதபடி பாதையையே அடைத்துவிட்டனர் என்றனர். புராதன சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்கிறது சட்டம். ஆனால் இந்த மலையில் 125 முதல் 242 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததை சகாயம் பதிவு செய்தார்.

கண்மாய்கள் அழிப்பு

கீழச்சுனைகுளம், இரணிய ஊருணி முழுமையாக அழிக்கப்பட்டு கிரானைட் குவாரியாக காட்சியளித்தன. கல்கட்டு ஊருணி, மாங்குளம் கண்மாய், மேலச்சுனை குளத்தின் பெரும் பகுதியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அளக்க மறுத்த வருவாய்துறையினர்

கண்மாய், கரைகளை தேடி சகாயம் அலைந்தார். அதிகாரிகளாலும் அடையாளம் காட்ட முடியவில்லை. அளந்து காட்டும்படி கூறியும் வருவாய்த் துறையினரால் முடியவில்லை. இறுதியாக சிறிய மேட்டுப்பகுதியை காட்டி இதுதான் கண்மாய் எனக்கூறியதை கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார்.

கிரானைட் குவியல்கள்

கண்மாய்கள் மூலம் விவசாயம் நடைபெற்ற நிலங்கள் முழுவதும் கிரானைட் கல் குவியல், 200 அடி பள்ளங்களாகக் காட்சியளித்தன. குவாரி அருகே பெட்ரோல் பங்க், சொகுசு அறைகளுடன் பல ஏக்கர் வளைக்கப்பட்டிருந்தது. இது யாருடைய இடம் என விசாரித்தபோது ‘கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் அது. குவாரி அதிபர் பி.கே.செல்வராஜ் இப்பகுதியை ஆக்கிரமித்து குவாரி அலுவலகமாக பயன்படுத்தியதாகவும், தற்போது சீல் வைத்துள்ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். பின்னர் சீலை உடைத்து உள்ளே சென்று சகாயம் ஆய்வு செய்தார்.

1000 ஏக்கர் ஆக்கிரமிப்பு

இப்பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட் கற்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த சகாயம் இக்கிராமத்தில் மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என கேட்டார். 1800 ஏக்கர் இருப்பதாகவும், இதில் 1000 ஏக்கர் தரிசு, கண்மாய் புறம்போக்காக இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலம் எங்கே என கேட்டபோது, பெரும்பகுதி கிரானைட் குவாரிகளால் ஆக்கிரமித்தும், அழிக்கப்பட்டும் விட்டன என அதிகாரிகள் கூறியதைக் கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார்.

பஞ்சமி நிலங்கள்

திருவாதவூரில் பிஆர்பி, சிந்து உள்ளிட்ட 6 குவாரிகளை சகாயம் ஆய்வு செய்தார். பாசன வாய்க்கால் கரை முழுவதிலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மாயமான மயான பூமி

யாதவர் சமுதாய மயானத்துக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் என்பவர் கண்ணீர்விட்டபடி புகார் கூறினார். இப்பகுதிலிருந்த பலநூறு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பலரும் புகாராக தெரிவித்தனர்.

அழிந்த விளைநிலங்கள்

சகாயம் ஆதரவு குழுத் தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் குவாரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சகாயத்துக்கு விளக்கினர். இவர்களிடம் சகாயம் பேசிய சகாயம், குவாரிகளால் நீராதாரம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாதிப்புகள் குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

ஒத்துழைக்காத அதிகாரிகள்

மதுரை கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுகநயினார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், மேலூர் தாசில்தார் மணிமாறன், வருவாய் ஆய்வாளர் பூமாயி, கிராம நிர்வாக அலுவலர் அனுராதா, அளவையாளர் வேல்முருகன், கிராம உதவியாளர்கள் ஆண்டி, அய்யாவு உட்பட பலர் வந்தனர். இவர்களிடம் கண்மாய், அரசு நிலம், அழிக்கப்பட்ட நிலங்களின் அளவு, அமைவிடம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சகாயம் கேட்டார்.

அதிகாரிகள் தயாரில்லை

இதில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அலுவலர்கள் தயாராக வரவில்லை. கிராம கணக்குகளில் உள்ள நிலம் பற்றிய புள்ளிவிவரங்களைக்கூட முறையாக தெரிவிக்கவில்லை. கேட்டும், பார்த்தும் சொல்வதாக தெரிவித்தனர். ஆவணங்களை தேடிக்கொண்டே இருந்தனர்.

வீடியோவில் பதிவு

இவ்வளவு விதிமீறல் நடந்த பின்னரும் கண்மாயின் அமைவிடத்தைக்கூட காட்ட முடியாமல் அலுவலர்கள் திணறினர். இதில் அதிருப்தியடைந்த சகாயம், விசாரணையில் உரிய விவரங்களை தெரிவிக்காவிடில் அதை நீதிமன்றத்தில் அப்படியே பதிவு செய்துவிடுவேன். இதற்கு உரிய அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஆய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

பொதுமக்கள் எதிர்ப்பு

நேற்று ஆய்வு செய்யப்பட்ட குடைவரைக்கோயில் பகுதியில் சட்ட ஆணையர் சகாயம் இன்று 2வது நாளாக மீண்டும் குடைவரைக்கோயில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் வந்த கனிமத்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலையில் ஏற மறுத்து விட்டனர். மேலும், அரசுக்கு சொந்தமான இடங்களையும் காட்ட அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

சம்மன் அனுப்புவேன்

இதையடுத்து, கோபமடைந்த சகாயம் ஐ.ஏ.எஸ்., "உங்களுக்கு சம்மன் அனுப்பி முறைப்படி விசாரணை நடத்தப்படும்'' என கனிமத்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தோண்ட தோண்ட பூதம்

கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக மிகவும் நுணுக்கமாக சகாயம் ஆய்வு மேற்கொண்டு வருவதால் கிரானைட் குவாரி முதலைகளும், அவர்களுக்கு உதவி செய்த அதிகாரிகளும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

English summary
Escorted by more than 20 policemen, the High Court-appointed Legal Commissioner, U. Sagayam, began his inspection of quarry sites at Tiruvathavur on Thursday as part of his probe into the illegal granite scam in Madurai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X