For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சிப் பதவி– நடராஜனுக்கும், சசிகலா குடும்பத்துக்கும் மோதல் முற்றுகிறது!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலாவைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கட்சியின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் புதிய பிரச்சனை உருவாகியிருக்கிறது. அதுதான் நடராஜனுக்கும், சசிகலா குடும்பத்திற்கும் இடையிலான மோதல்.

பொதுச் செயலாளராக சசிகலா எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பொறுப்பேற்றுக் கொண்டு விட வேண்டும் என்று நடராஜன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் சசிகலா குடும்பத்தினரிடம் இதற்கு தயக்கமும், ஓரளவுக்கு எதிர்ப்பும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மூன்று நாட்களாகவே இரண்டு தரப்புக்கும் இடையில் வாக்கு வாதங்கள் அதிகரித்துள்ளதாகவும், இது மோதலாகவே உருவெடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Sasikala Vs Natarajan?

நடராஜனின் வாதம் இதுதான் - "எப்படியிருந்தாலும் மோடி நம்மை அரசியல் ரீதியில் செட்டில் ஆக விடப் போவதில்லை. நாம் அடங்கிப் போனாலும் நமக்கு மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய தொல்லைகள் வரத்தான் போகின்றன. நாளாக ஆக இந்த தொல்லைகள் அதிகரிக்கப் போகின்றன. நாம் அடங்கிப் போக நினைத்தால் ஓபிஎஸ் ஸூம் நம்மை புரட்டிப் போட்டு விடுவார். ஓபிஎஸ் ஸின் எஜமானை (மோடி) எதிர்த்து நாம் போராடா விட்டால் நாம் ஓபிஎஸ் ஸாலும் வேட்டையாடப் படுவோம். ஆகவே செஸ் விளையாட்டில் சொல்லப் படுவதைப் போல ''எதிர்த்து தாக்குவதுதான் சிறந்த தற்காப்பு (Offence is the best defense)" என்ற அணுகுமுறையைக் கடைபிடிப்பதே நமக்கு நல்லது என்று நடராஜன் வாதாடி வருவதாகச் சொல்லப் படுகிறது.

ஆனால் சசிகலா தரப்போ இதனை ஏற்றுக் கொள்ள கடுமையாகவே தயங்கி வருவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. இது பற்றி சில வருடங்களுக்கு முன்பு வரையில் போயஸ் கார்டனுடன் நெருக்கத்தில் இருந்த ஒருவர் இவ்வாறு சொல்லுகிறார்:

"உச்ச நீதிமன்றத்தில் ஜெ வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இது ஒருவேளை சசிகலா வுக்கு எதிராகப் போனால் அத்துடன் சசிகலா வின் அரசியில் கனவுகள் தவிடு பொடியாகிவிடும். இரண்டாவது சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜெ ஆட்சிக் காலத்தில் பலன் அடைந்தது போல நடராஜன் குடும்பத்தினர் பலனடையவில்லை. மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ போன்றவை எளிதில் தொட்டு விடும் தூரத்தில் இருப்பவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான். அதனால் அவர்கள் அஞ்சுகிறார்கள். நடராஜனின் ரத்த சொந்தங்களுக்கு அந்தளவுக்கு அச்சம் இல்லை. இதுதான் சிக்கலுக்கும், உரசலுக்குமான காரணமே,'' என்கிறார் அவர்.

ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டுகள் சசிகலா தரப்பை 'ரொம்ம்ப்பவே' ஆட்டங் காணச் செய்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. இந்த ரெய்டுகளின் தொடர்ச்சியாக அதற்கடுத்த நாளில், மணல் வியாபாரிகள் சிலரது வீடுகளில் நடந்த ரெய்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப்படுகின்றன.

"இந்த மணல் வியாபாரிகள் சசிகலாவுக்கு ரத்த சம்மந்தமுள்ள ஒருவருடன் நெருக்கமானவர்கள். ஆகவே இந்த ரெய்டுகளின் நீட்சி அந்த ரத்த சொந்தத்தின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை நோக்கித் தான் நீளப் போகிறது என்றே சம்மந்தப்பட்ட தரப்பு அஞ்சிக் கொண்டிருக்கிறது. சசிகலா அரசியல் பதவியை ஏற்றுக் கொள்ள காட்டும் தயக்கம் நாளும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இந்த ரெய்டுகள் நாளுக்கு நாள் ,தொடர்ந்து வருவதுதான் காரணம்,'' என்று மேலும் கூறுகிறார் அவர்.

சசிகலா தரப்பின் தயக்கம் வெளிப்படையாகவே ராம்மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற ரெய்டுகளுக்கு அடுத்த நாள் தெரிய வந்தது. டிசம்பர் 21 ம் தேதி ரெய்டுகள் நடந்த நாளன்று தொலைக்காட்சிகளில் பேசிய அஇஅதிமுக செய்தித் தொடர்பாளர்கள் அனைவருமே இது மத்திய அரசின் பழி வாங்கும் செயல் என்றே கண்டனம் தெரிவித்தனர். சிலர் மோடி அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் அஇஅதிமுக வை பணிய வைக்க முடியாது என்றெல்லாம் கூறினர்.

ஆனால் அடுத்த நாளே, டிசம்பர் 22 ம் தேதியே ஸ்ருதி மாறியது. அஇஅதிமுக வின் ஒரு செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கூறினார்: "ரெய்டுகள் நடந்ததில் எந்த தவறும் இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்தான்''. ஒரு கட்டத்தில் விவாதத்தில் பங்கேற்ற ஒரு பத்திரிகையாளர், "முதல்வர் ஜெயலலிதா இருந்தால் இந்த மாதிரியான ரெய்டுகளை நடத்தும் தைரியம் மத்திய அரசுக்கு வந்திருக்குமா?'' என்றே நேரடியாக கேட்ட போது அதற்கு அங்கிருந்த பாஜக பிரதிநிதி பொங்கி எழுந்தார். அவர் பொங்கியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அஇஅதிமுக பிரதிநிதியும் எகிறி குதித்தார். "இதில் எந்த தவறும் இல்லை. அம்மா பெயரை இதில் இழுக்க வேண்டாம்", என்று அஇஅதிமுக பிரதிநிதி சேம் சைட் கோல் போட்டார்.

அன்றைய தினம் முழுவதும் அஇஅதிமுக பிரதிநிதிகள் எல்லா தொலைக் காட்சிகளிலும் திரும்ப திரும்ப இதே கருத்தை, அதாவது ரெய்டுகளில் என்ன தவறு என்றே பேசி, நூற்றுக் கணக்கில் சேம் சைட் கோல்களை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு பல்டி அடித்தது நடராஜனுக்கு பிடிக்கவில்லை. அவர் இதனைக் கடுமையாக எதிர்த்தார் என்று சொல்லப்படுகிறது. நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும் என்றே வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் சசிகலா தரப்புத்தான் இந்த நிலை மாற்றத்துக்கு, அதாவது, 24 மணி நேரத்திலேயே இந்த பல்டிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சசிகலா தரப்பில் ஒரு பிரிவினர் நடராஜனிடம், "உங்களால் தான் பிரச்சனையே. அம்மா அப்பல்லோவில் இருந்த போது காங்கிரஸை தொடர்பு கொண்டு ராகுல் காந்தியை நீங்கள் அழைத்து வந்ததில் இருந்தே இந்த பிரச்சனை உண்டாகி விட்டது. நாம் மோடியின் கோபத்துக்கு ஆளாகி விட்டோம். இப்போதும் அதே தவறை செய்ய வேண்டாம்,'' என்றே வாதாடிக் கொண்டிருக்கிறார்களாம்.

சசிகலாவைப் பொறுத்த வரையில் அவர் முடிவு எடுப்பதில் கடுமையாக தடுமாறி வருவதாகச் சொல்லப் படுகிறது. இந்த தயக்கம் நேற்று முன்தினம் எம்ஜிஆர் நினைவு நாளன்று வெளிப்படையாகவே தெரிய வந்தது. அஇஅதிமுக கட்சிக்காரர்கள் எல்லோருமே எம்ஜிஆர் சமாதியில் மலர்வளையம் வைத்தார்கள். ஆனால் அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக யார் வர வேண்டும், அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கச்சை கட்டிக் கொண்டு குதிக்கிறார்களோ, அவர், அதாவது சசிகலா மலர் வளையம் வைக்க எம்ஜிஆர் சமாதிக்கு வரவில்லை. மாறாக போயஸ் வீட்டில் எம்ஜிஆர் படத்துக்கு சசிகலா மாலை அணிவித்த காட்சி ஒளிபரப்பானது. ஜெ மறைந்து போன பின் வரும் முதல் எம்ஜிஆர் நினைவு நாளன்று கூட சசிகலா வெளிப்படையாக கட்சியின் நிறுவன தலைவர் சமாதிக்கு வர முடியவில்லை என்றால் அவரது தயக்கத்தின் பரிமாணத்தை ஒருவர் புரிந்து கொள்ளலாம்.

இதனிடையே டிசம்பர் 29 ம் தேதி கூடவிருக்கும் அஇஅதிமுக பொதுக் குழுவுக்கு முன்பே அக் கட்சி முக்கியஸ்தர்கள், குறிப்பாக, 'மன்னார்குடி மானஸ்தர்களுக்கு' எதிராக மத்திய அரசின் அதிரடி வான வேடிக்கைகள் அரங்கேற இருப்பதாக டில்லியின் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். 2016 ம் ஆண்டின் இறுதி வாரம் தமிழக அரசியிலின் மிக முக்கியமான வாரமாகப் போகிறது என்பதில் சந்தேகமில்லை!

English summary
Mani's analysis on the infight of Sasikala family over capturing the high post of ADMK and Govt of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X