போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில், தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாகப் போராட்டத்தைத் தொடருவதால் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய தமிழக அரசு அலட்சியப்போக்கோடும், அதிகாரச்செருக்கோடும் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

Seeman's Naam Tamilar Party demands TN Government about strike

பயணிகளைப் பாதியில் இறக்கிவிட்டு பேருந்துகளை நடுத்தெருவில் நிறுத்திச்சென்ற போராட்ட வழிமுறை ஏற்கத்தக்கதல்ல என்றாலும்கூட, அத்தகைய போராட்ட வடிவத்தை நோக்கி போக்குவரத்துத் தொழிலாளர்களைத் தமிழக அரசு தள்ளியிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. கடந்த 16 மாதங்களில் 21 முறை தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களோடு தமிழக அரசு நடத்திய பேச்சுவாரத்தையில் உடன்பாடு எட்டப்படாததன் விளைவாகவே இன்றைக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். அவர்கள் கோரிக்கை மிக மிக நியாயமானதே! அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

'உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்குள் அவருக்கான கூலியைக் கொடுத்துவிடுங்கள்' என்கிறார் நபிகள் பெருமகனார். ஆனால், 2011ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்ற போக்குவரத்துத்தொழிலாளர்களுக்கு இன்னும் ஓய்வுதியப்பயன்கள் சென்றடையவில்லை. மேலும், பணியிலுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களிடமிருந்து வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட நிதியும் பணியிலுள்ள ஊழியர்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை. இத்தோடு பலகாலமாகக் கேட்டுவரும் ஊதிய உயர்வும் மறுக்கப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, நிலுவையிலுள்ள தொகையினைப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கிடக்கோரி நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதனைத் துளியும் மதியாது அலட்சியப்படுத்தி, ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கிறது தமிழக அரசு. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நியாயமாகச் சென்று சேர வேண்டிய 7,000 கோடி ரூபாய் பணத்தை வழங்காது ஏமாற்றி வரும் இதே தமிழக அரசுதான் மாவட்டங்கள்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தைத் தண்ணீராய் வாரி இறைத்து வருகிறது. தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்திய தமிழக அரசு, மக்களுக்காக இரவு பகல் பாராது உழைக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வையும், நிலுவைத்தொகையையும் அளிக்காதிருப்பது அப்பட்டமான வர்க்கச்சுரண்டலாகும்,

இதுகுறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வானது போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பவில்லையென்றால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்திருக்கிறது. போராடும் தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுப்பேன் என எச்சரிக்கிற நீதிபதிகள், நிலுவையிலுள்ள தொகையை வழங்க உத்தரவிட்டும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுத்து வரும் தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்காதது ஏன்? சம்பளம் போதவில்லையென்றால் வேறு வேலைக்குப் செல்லுங்கள் என்று தொழிலாளர்களைப் பார்த்து சொல்வதற்கான அதிகாரத்தை நீதிபதிகளுக்கு யார் கொடுத்தது? அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையைத்தானே கேட்கிறார்கள்.

அதிலென்ன பிழை இருக்கிறது? தொழிலாளர்களின் பக்கமிருக்கும் தார்மீக நியாயத்தை உணராது அதிகாரப்போக்கோடு அவர்களை அடக்கியாள முற்படும் நீதிமன்றங்களின் இதுபோன்ற தீர்ப்புகள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குலைக்கச் செய்துவிடும் என்பதை அன்போடு நீதிமான்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

ஆகவே, தமிழக அரசானது போக்குவரத்துத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகப் போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Seeman's Naam Tamilar party urges TN Government that it should put an end to transport workers strike which affects passengers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற