For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வாதிகாரம் தலை தூக்காமல் தடுக்க... ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: திருமா

Google Oneindia Tamil News

சென்னை:சர்வாதிகாரம் தலை தூக்காமல் தடுக்க ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய வரலாற்றில் இருண்ட காலம் எனக் குறிக்கப்படும் அவசரநிலை 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் நாற்பதாவது ஆண்டு இது. மீண்டும் அப்படி அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கான ஆபத்து இருக்கிறது என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியிருக்கிறார். அவரது கருத்தை ஆளும் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் ஆதரித்துள்ளது.

அவசரநிலைக் காலத்தின் அத்துமீறல்களை எவரும் எளிதில் மறந்துவிடமுடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன; பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன; முன்னணி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக் கானோர் 'மிசா' சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்;

Should stop single party governance: Thiruma

சிறைகளிலேயே பலர் கொல்லப்பட்டனர்; பலவந்தமாக லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டெல்லியில் குடிசைப் பகுதிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைச் சுற்றியிருந்த ஒரு சிறு கூட்டத்தின் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிக்கப்பட்டது;

இந்தியப் பாராளுமன்ற முறையை ஒழித்துவிட்டு அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ‘இந்திராவே இந்தியா' என்று ஒரு நபரை மையமாக வைத்துத் துதிபாடும் கூட்டம் வெறியாட்டம் போட்டது.

அவசரநிலை மீண்டும் பிறப்பிக்கப்படாமல் தடுக்க வேண்டுமானால் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அது சரியான தீர்வல்ல. "பெரும்பான்மை ஆட்சி நடக்கும் எந்தவொரு நாடுமே அவசரநிலை பிறப்பிக்கப்படுகிற ஆபத்துள்ள நாடுதான்" என சட்ட அறிஞர் பாலி எஸ்.நாரிமன் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

1975-ல் அவசரநிலை பிறப்பிக்கப்படும்போது இந்திராகாந்தி அம்மையாரின் தலைமையில் ஒரு பெரும்பான்மை ஆட்சிதான் நடந்துவந்தது. 1971-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 352 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தியது. அந்தப் பெரும்பான்மை பலம் தந்த இறுமாப்புதான் அந்த சர்வாதிகார ஆட்சிக்கு அடிப்படை.

அவசரநிலைக் காலத்துக்கு முன்பிருந்ததுபோலவே இப்போதும் மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஒருகட்சி ஆட்சி நடக்கிறது; எல்லா அதிகாரங்களும் பிரதமரின் கையில் குவிக்கப்படுகின்றன, நரேந்திர மோடி என்ற ஒருவரை மையப்படுத்தி துதிபாடும் கூட்டம் உருவாகியிருக்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் ஓரவஞ்சனைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கின்றன.

எனவே இந்தியாவில் அவசரநிலை மீண்டும் பிறப்பிக்கப்படாமல் தடுக்க வேண்டு மென்றால் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனால்தான் "மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் கூட்டணி ஆட்சி" என்ற முழக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைத்திருக்கிறோம். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சிமுறை தலைதூக்காமல் தடுக்கவேண்டும் என விரும்புகிற அனைவரும் இந்த முழக்கத்தை ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.

இந்த கருத்தை வலியுறுத்தி "அவசரநிலை ஆபத்தும் ஒருகட்சி ஆட்சிமுறையும்" என்ற தலைப்பில் 27-ந் தேதி (சனிக்கிழமை) மாலை கூட்டம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கிறது. என் தலைமையில் (தொல்.திருமாவளவன்) நடைபெறவுள்ள அக் கூட்டத்தில் மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The VCK president Thirmavallavan has insisted to stop single party governance in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X