For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பொன்.ராதா' தமிழுக்கு ஆதரவு வழங்க வேண்டும்- இந்திக்கு அல்ல: தமிழர் பண்பாட்டு நடுவம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய இணை அமைச்சர் இந்திக்கு ஆதரவாக பேசியுள்ளதற்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் ராச்குமார் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் இந்தி படிக்க வைக்க வேண்டும் என்றும் இந்தி தெரியாததால் தான் படும் கஷ்டம் தனக்குத் தான் தெரியும் என்று அண்மையில் நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார் பாஜக அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன். மேலும் இந்தி படிக்காதீர்கள் என்று சொல்பவர்கள் உங்கள் குழந்தைகளை அழிக்க நினைபவர்கள் என்று தடித்த வார்த்தைகளால் பேசியுள்ளார் பொன்னார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

Tamil movement condemns Pon Radha's support to Hindi

தமிழர்களை இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் இந்தி மக்களை கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? சொன்னால் அவரை அங்கு இருக்க விடுவார்களா? தமிழன் மட்டுமே இளிச்சவாயன் அவனிடம் என்ன சொன்னாலும் கேட்பான் என்ற சிந்தனை தானே பொன்னார் அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது.

தமிழ் மொழியின் மேல், தமிழர்களின் மேல் உண்மையான அக்கறை பொன்னாருக்கு இருக்குமே என்றால் முதலில் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி விட்டு இங்கு வந்து தமிழர்களுக்கு அவர் உபதேசம் செய்யலாம்.

இத்தனை ஆண்டுகள் தமிழர்களின் மொழியுரிமை மறுக்கப்பட்டு இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி இருந்து வருகிறது . அதனால் தானே தமிழன் எங்கு சென்றாலும் சொந்த மொழியில் அரசுடன் பேச முடியாமல் தடுமாறும் நிலை உருவானது . இந்திய அரசு மக்களிடம் மக்கள் மொழியில் பேசாமல் இந்தி மொழியில் மட்டுமே பேசி அனைத்து தேசிய இனங்களையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது. இந்த அநீதியை கண்டிக்கக்காமல், இந்தித் திணிப்பை எதிர்க்கத் துணிவில்லாமல் தமிழர்களை தமிழ் மண்ணில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்ல பொன்னாருக்கு எப்படி மனம் வருகிறது?

தமிழ் ஆட்சி மொழியாக இல்லாத காரணத்தால் தானே தமிழர்கள் வடநாட்டில் மொழியால் புறக்கணிக்கப்படுகிறார்கள். எல்லா வேலை வாய்ப்பிலும் கட்டாயம் இந்தியை திணித்து இந்தி அல்லாத மக்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளிவிடுகிறது இந்திய அரசு. எல்லா மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது தானே உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்? இந்த சமூக நீதியை பெற்றுத் தரத்தான் தமிழர்கள் பொன்னார் போன்றோர்களை தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் உரிய இடத்தை பெற்றுத் தருவதை விட்டு விட்டு, தமிழகத்தில் வாழும் தமிழர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது அநீதி இல்லையா ? தமிழ் ஆட்சி மொழியாகுவது ஒன்று தான் இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்தும் என்பதை ஏன் பொன்னார் போன்றவர்கள் உணரவில்லை. தமிழர்கள் இந்தித்திணிப்பை ஏற்கவேண்டும்?

ஆட்சி மொழி உரிமை கோரக் கூடாது என்று பொன்னார் நினைப்பது தமிழர் விரோத செயல் அல்லவா. தமிழர்கள் அனைவரும் விரும்பி எந்த மொழியையும் படிக்கலாம், ஆனால் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்ப்பது மட்டுமில்லாமல் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க பொன்னார் குரல் கொடுப்பாரா ? அப்படி குரல் கொடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாக உள்ளது. அதை செய்வதை தவிர்த்து தமிழ் மண்ணில் வேற்று மொழிகளை திணிக்கும் செயலை பொன்னார் செய்து வருவதை தமிழர் பண்பாட்டு நடுவம் கடுமையாக கண்டிக்கிறது. பொன்னார் தமிழுக்கு ஆதரவு வழங்க வேண்டும். இந்திக்கு அல்ல என்பதை பொன்னார் அவர்களுக்கு நினைவுபடுத்துவது நம் கடமையாகும்.

இவ்வாறு ராச்குமார் பழனிச்சாமி கூறியுள்ளார்.

English summary
Tamil movement leader Rajkumar Palaniswamy has condemned Union Pon. RadhaKrsihnan's support to Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X