மீறப்படும் மரபுகள்...சட்டப் பேரவை கூடுவதுதான் எப்போது? தீருமா பிரச்சினைகள்…. ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

-பா. கிருஷ்ணன்

தமிழக அரசின் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாமலேயே சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லாத சமயம், சட்டப் பேரவைத் தொடர் பொதுவாக ஜனவரி மாதம் குறிப்பிட்ட நாளில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அப்போது அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறிப்பிடப்படும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்ற பின் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரைப் பேரவைத் தலைவர் ஒத்தி வைப்பார்.

Tamil Nadu government to convene assembly?

இதனிடையில் மாநில அரசு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும். அது நிறைவு பெற்ற பின் நிதியமைச்சர் ஒரு நாள் தாக்கல் செய்வார். அதன் மீது விவாதம் நடைபெறும். அதற்கு நிதியமைச்சரோ, முதலமைச்சரோ பதில் கூறிய பிறகு, ஒவ்வொரு துறைக்கும் தேவையான மானியங்களை ஒதுக்குவதற்காக மானியக் கோரிக்கைகள் பேரவையில் கொண்டுவரப்படும். இவை சுமார் தேவைக்கு ஏற்ப முப்பது முதல் நாற்பது நாட்கள் வரை பேரவையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். மானியக் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறிய பிறகு, முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் ஆகியோரின் நிறைவு உரைகளுடன், விடுபட்ட அல்லது சில்லறை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பேரவைக் கூட்டத் தொடர் நிறைவு பெறும். அதை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவர் அறிவிப்பார். சில தினங்களில் பேரவைத் தலைவரின் யோசனைப்படி ஆளுநர் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிவுற்றது என்று முறையாக அறிவிப்பார்.

பின்னர், ஆறு மாதங்களுக்குள், அநேகமாக செப்டம்பர் மாதம் விடுபட்ட செலவுகளுக்காகவும், சில அவரசச் சட்டங்களைச் சட்டமாகக் கொண்டுவந்து நிறைவேற்றவும் சில தினங்களுக்கு சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும். இது வழக்கமான நடைமுறை.

Tamil Nadu government to convene assembly?

சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும்போது, முதலமைச்சரோ, அமைச்சர்களோ பங்கேற்கும் இதர அரசு விழாக்களில் எந்த அறிவிப்பையும் வெளியிட மாட்டார்கள். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் இல்லாத சமயத்தில் ஏதாவது அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

பொதுவாக திமுக ஆட்சிக் காலங்களில் இது போன்ற நடைமுறையில் மாற்றமோ, மரபு மீறலோ இருந்ததில்லை.

ஆனால், அண்ணா திமுக ஆட்சியில் இத்தகைய நடைமுறை திடீரென்று நடைபெறுவது வாடிக்கையாக இருக்கிறது.

1986ம் ஆண்டு சட்டப் பேரவைத் தொடரில் அன்றைய ஆளுநர் எஸ்எல் குரானா உரை நிகழ்த்தினார். அதன் பிறகு சிறிய இடைவெளியை அடுத்து முறைப்படி சட்டப் பேரவை கூடி, நிதிநிலை அறிக்கையை அன்றைய நிதியமைச்சர் நெடுஞ்செழியன் தாக்கல் செய்தார். இவையெல்லாம் மரபாக நடந்துகொண்டிருந்தது.

திடீரென்று, "தமிழக சட்டமன்றத்தின் மேலவை கலைக்கப்படும்" என்று 1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நிதியமைச்சர் நெடுஞ்செழியன் அறிவித்தார்.

ஒரு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை இருப்பதா வேண்டாமா என்பதை மாநில அரசே முடிவுச செய்துகொள்ளலாம். அதில் தவறில்லை.

ஆனால், இது மிகப் பெரிய முடிவு. இது ஓர் ஆளும் கட்சியின் கொள்கையின் அடிப்படையிலானது.

அண்ணா தலைமையில் திமுக அரசு உருவானதும் மும்மொழித் திட்டத்தைக் கைவிடுவது, மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுவது, ரூபாய்க்கு ஒரு படி அரிசியை நியாயவிலைக் கடைகளில் வழங்குவது போன்றவற்றை நிறைவேற்றியது. ஆனால், அவை யாவும் தனது கொள்கைகளாக அக்கட்சி முன்பே அறிவித்தது. அது ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டன.

அதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த மேலவைக் கலைப்பு குறித்த முடிவை அண்ணா திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. 1986ம் ஆண்டு ஆளுநர் உரையில் தெரிவிக்கவில்லை. நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கவில்லை.

Tamil Nadu government to convene assembly?

நவம்பர் மாதம் மேலவை கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, அதற்குக் காரணமாக நிதியமைச்சர் நெடுஞ்செழியன், "செலவை மிச்சப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்று விளக்கினார். அவ்வாறு மிச்சப்படும் செலவு சில லட்சம் மட்டுமே என்பதை அவர் கூறவில்லை.

ஜெயலலிதா 1991ம் ஆண்டு ஆட்சி அமைத்த சில ஆண்டுகளில் அவரது அரசுக்கு எதிராக ஊழல் புகார்கள் வலுவாக எழுந்தன. அநேகமாக எல்லாக் கட்சியினருமே அந்தப் புகார்களை உரக்கக் கூறி வந்தன.

ஜனதா கட்சியின் தலைவராக அப்போது இருந்த சுப்பிரமண்யன் சுவாமி தலைமையில் நல்லாட்சி கூட்டணி என்ற அமைப்பு கூட உருவாக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்வதற்கு ஆளுநரிடம் அனுமதி கோரினார் சுவாமி. முதலமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குப் போடுவதற்கு ஆளுநரின் அனுமதி தேவை. ஆரம்பத்தில் ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் அனுமதி அளிக்கவில்லை. அவர் மாற்றப்பட்டு, சென்னா ரெட்டி ஆளுநராகப் பொறுப்பேற்றார். அவர் முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர சுவாமிக்கு 1995ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அனுமதி அளித்தார்.

கோபமடைந்த ஜெயலலிதா அது முதல் ஆளுநரைச் சந்திப்பதைத் தவிர்த்தார். அந்த ஆண்டு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது, சென்னா ரெட்டிக்கு எதிராக தன்னை தவறாக நடத்தியதாக அவதூறாகப் புகார் கூறினார் ஜெயலலிதா. அந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்ததும், பேரவைத் தொடரை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக மட்டுமே பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அறிவித்தார். எனினும், சில வாரங்கள் கழித்து 1996ம் ஆண்டு தொடங்கிய நிலையில், பேரவைக் கூட்டத்தை மீண்டும் அவர் கூட்டினார்.

"ஆண்டு தொடங்கும்போது, ஆளுநரின் உரை இடம்பெறவேண்டுமே..." என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதற்கு, "இது 1995ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய சட்டப் பேரவைக் கூட்டத்தின் தொடர்ச்சிதான்...எனவே, ஆளுநரின் உரை தேவையில்லை" என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

1996ம் ஆண்டின் மத்தியில் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதால், துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, கூட்டத் தொடர் முடிந்தது.

இப்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிசம்பர் 6ம் தேதி அதிகாலையில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அதையடுத்து, ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுச்சி மிக்க போராட்டம் நடந்தது. அதன் விளைவாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அதைச் சட்டமாக நிறைவேற்றுவதற்காக சட்டப் பேரவையின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. ஜனவரி 30ம் நடந்த அக்கூட்டத்தில் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார் ஓ. பன்னீர்செல்வம்.

ஆனால், அதையடுத்து அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியதால், எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். எனினும், அவரது பலத்தை நிரூபிக்க, நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவருவதற்காக சட்டப் பேரவையின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பழனி்சசாமி வென்றார்.

பின்னர் கூடிய சட்டப் பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவருக்கே எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேறாமல் போனது. தொடர்ந்து நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை மீதான விவாதம் முடிந்தது. பேரவைக் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.

எனினும் மரபுப்படி சட்டப் பேரவைக் கூட்டம் மானியக் கோரிக்கைகளுக்காக மீண்டும் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கூட்டத் தொடர் முடித்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கம் அளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், "இதைப் போல் 2009ம் ஆண்டும் திமுக ஆட்சியில் பிப்ரவரி மாதம் நிறைவுபெற்ற பிறகு பெரிய இடைவெளியை அடுத்தே சட்டப் பேரவை கூடியது. அதே வழியைத்தான் பின்பற்றுகிறோம்" என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

2009ம் ஆண்டு மட்டுமல்ல, 2006, 2014, 2011 போன்ற பல முறை இப்படி நடந்திருக்கிறது. காரணம் அவையெல்லாம் சட்டப் பேரவை அல்லது மக்களவைக்குத் தேர்தல்கள் நடந்த ஆண்டுகள் ஆகும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சட்டப் பேரவை, மக்களவை ஆகியவை நடைபெறக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. காரணம், பேரவையிலோ மக்களவையிலோ அரசு ஏதாவது அறிவிப்பை வெளியிட்டால், அது நடத்தை விதியை மீறியதாகிவிடும்.

எனவே, தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருவதால், கூட்டத் தொடர் நடைபெறுவதில்லை.

இப்போது எதற்காகச் சட்டப் பேரவையைக் கூட்டமால் தவிர்க்கிறார்கள்.. ஒரு வேளை மூத்த அரசியல் தலைவரான மு. கருணாநிதி சட்டப் பேரவையில் 60 ஆண்டுகள் பணியை நிறைவு செய்ததைப் பாராட்டி திமுகவினர் கோரிக்கை வைக்கக் கூடும் என்பதாலா...? அல்லது அதற்கான தகவலை திமுகவினரும் தோழமைக் கட்சியினரும் பேரவையில் பதிவு செய்யக் கூடும் என்ற காரணத்தினாலா..?

இவை ஆண்டவருக்கே, இல்லையில்லை, ஆள்பவருக்கே வெளிச்சம்..!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Columnist Pa Krishnan's Article over convene of the TamilNadu Aseembly.
Please Wait while comments are loading...