For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெருகூட்டிய ஆசிரியர்கள்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ஜெயக்குமார், குஷ்பு

Google Oneindia Tamil News

- ராஜாளி

சென்னை: மாணவர்களை மட்டுமல்லாது மனிதர்களை சமூகத்திற்கு கொடுப்பவர்களை ஆசிரியர்கள் என்று நாம் கொண்டாடுகிறோம். நம் வாழ்வின் மாற்றத்திற்கு அடித்தளமிட்டு நம்மை உயரத்தில் அமர்த்த ஏணியாகும் அவர்களின் தியாகங்களை நம் வாழ்வின் வழி நெடுகிலும் நினைவு கூர்வது அவசியம் என்றாலும் அவர்களுக்கான ஒரு தினத்தில் அவர்களுக்கு தலை வணங்கி சிறப்பு செய்தல் இன்னும் மகிழ்வான நிகழ்வு.

ஆசிரியர் தினம் உலகில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தியாவில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.

teachers day interview with actress kushbu, and minister jeyakumar

இந்த தினத்தில் தங்களால் மறக்க முடியாத ஆசிரியர்கள் யார் யார் என்பது குறித்து ஒன் இந்தியா தமிழுக்காக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்புவிடமும், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடமும் கேட்டோம்.

என்னால் மறக்க முடியாத லோபோ - குஷ்பு

தனக்கு ஒன்றாம் வகுப்பு ஆசிரியை லோபோதான் தன்னால் மறக்க முடியாத ஆசிரியர்களுள் ஒருவர் என்று ஆரம்பித்தார் நடிகை குஷ்பு. எப்போதும் என் மீது அன்பு காட்டியவர் அவர். முதலாம் வகுப்பில் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது என்னுடைய அம்மா பலதடவை பெல் அடித்தால் ஸ்கூல் முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம் அப்டின்னு சொல்லியனுப்பினாங்க. ஸ்கூல் டைம்ல இடையில இடைவெளிக்கும் பெல் அடிப்பாங்கன்னு சொல்லவே இல்லை. ஸ்கூல் நடந்திட்டு இருக்கும்போது இடையில இடைவேளையில பெல் அடிச்சாங்க நானும் ஸ்கூல் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சிட்டு வீட்டுக்கு போயிட்டேன். அப்போ என்னோட அண்ணாக்களும் அதே ஸ்கூல்லதான் படிச்சிட்டு இருந்தாங்க.

நான் மட்டும் வீட்டுக்கு போனப்ப அம்மா என்னாச்சு ஏன் வீட்டுக்கு வந்துட்டன்னு கேட்டாங்க. நான் ஸ்கூல் முடிஞ்சிருச்சுன்னு சொன்னேன். அப்போ அண்ணனுங்க எங்கன்னு கேட்டப்ப அவங்களுக்கு இன்னும் ஸ்கூல் முடியலன்னு சொன்னேன் அப்போ அம்மாவுக்கு புரிஞ்சிருச்சு நான் இடைவேளையிலதான் வீட்டுக்கு வந்திருக்கேன்னு. இதுக்கு நடுவுல ஸ்கூல்ல என்னை தேடி வீட்டுக்கே வந்துட்டாங்க என்னோட லோபோ டீச்சர். வீட்டில் என்னைப் பார்த்ததும் அப்டியே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாங்க. பத்திரமா வீட்டுக்கு வந்துட்டேங்கறது அவங்களுக்கு சந்தோஷம். அதுக்கப்புறம் நாலு வருஷம் நான் அந்த ஸ்கூல்ல படிச்சேன். அந்த நாலு வருஷத்துல ஒரு நாள் கூட அவங்க என்ன பாக்காமா போனதே கிடையாது. அவ்வளவு என்மேல அன்பா இருந்தாங்க அவங்கள என்னால மறக்கவே முடியாது.

இவங்கள தவிர இன்னொரு டீச்சரையும் என்னால மறக்க முடியாது. நான் இன்னைக்கு இந்த அளவுக்கு தைரியமா பேசுறேன் செயல்படுறேன் அப்டின்னா என்னோட ஸ்கூல் பிரின்சிபால் விஜயலட்சுமி நாயர்தான் காரணம். நான் 8 ம் வகுப்பு வரை படித்த பள்ளியில் அவர்தான் பிரின்சிபாலாக இருந்தார். அப்போ பள்ளியில் இருந்து ஷூட்டிங் போக வேண்டிய நிலை வரும் அப்பல்லாம் ஷூட்டிங்க்க்கும் என்ன அனுமதிச்சதோட மற்ற டீச்சர்ஸ் என்னைப் பற்றி கம்ப்ளைன்ட் பண்ணாக் கூட அவ நல்லாப் படிக்கிற பொண்ணுன்னு என்னைப்பற்றி எப்பவுமே உயர்வாதான் பேசுவாங்க. நான் படித்த அந்த நாள்களில் என்னை மெருகூட்டியவர் அவர். நான் பள்ளிப்படிப்பை பாதியில் முடித்தபோது என் அம்மாவை விட அதிகளவில் கவலைப் பட்டவர் அவர்.

அசம்பிளியில் தினமும் செய்தித் தாள்களை படிக்க சொல்வார். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து அவ்வப்போது கலாட்டா செய்வது வழக்கம். இதனால் எங்கள் வகுப்பை பிரின்சிபால் அறைக்கு பக்கத்தில் மாற்றி விட்டனர் அப்போதாவது அமைதியாக இருப்போம் என்ற எண்ணத்தில். ஒருநாள் பிரின்சிபால் அறையில் இருந்து அவர் வெளியில் வரும்போது நாங்கள் வகுப்புக்கு வெளியில் நின்று கொண்டிருந்தோம். எதற்காக வெளியில் நிறுத்தப்பட்டுள்ளோம் என்று எங்கள் ஆசிரியரிடம் கேட்டார் பிரின்சிபால் வகுப்பில் சத்தமிட்டதால் தண்டனை என்று வகுப்பு டீச்சர் கூறினார். இந்த வயசுல கலாட்டா பண்ணாம என்னோட வயசுலயும், உங்க வயசுலயுமா கலாட்டா பண்ண முடியும் என்று கேட்டு எங்களை வகுப்புக்குள் போக சொன்னார். அதே நேரத்தில் பிகேவ் யுவர்செல்ப் என்று கூறினார். இப்படி கண்டிப்பும் கனிவும் கொண்டிருந்ததால் இப்ப நான் பாம்பேக்கு சென்றாலும் அவரை சந்திக்காமல் வருவதே இல்லை என்றார் குஷ்பு.

வாழ்க்கையின் ஆசிரியர்களாக இருவரை குறிப்பிட்டார் குஷ்பு, ஒருமுறை அன்னைத் தெரசாவை சந்தித்தபோது அவர் தன்னிடம் நடிகை என்பதால் ஏகப்பட்ட உடைகள் உன்னிடம் இருக்கும், உடுத்திய ஆடைகளை தூர எறிந்துவிடாதே அவற்றை என்னிடம் உள்ள குழந்தைகளுக்கு அனுப்பி வை என்று கேட்டுக்கொண்டதோடு இதை நான் உன்னிடம் பிச்சையாகவே கேட்கிறேன் என்று கேட்டாராம். அப்போது என்ன மதர் இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டதும் ஒரு அம்மா தனது குழந்தைகளுக்காக பிச்சை எடுப்பதில் தவறில்லை என்று கூறியது தன வாழ்வில் மறக்க முடியாத பாடம் என்று கூறினார் குஷ்பு.

அடுத்ததாக தனது 16 வயதில் தந்தை இறந்தபின்னர் அந்த வெறுமையான சூழல் தன்னை தைரியம் உள்ள ஒரு மனுஷியாக மாற்றியதாகவும் நினைவு கூர்ந்தார் குஷ்பு.

மறக்க முடியாத பரமசிவம் - அமைச்சர் ஜெயக்குமார்


அடுத்ததாக தன்னால் மறக்க முடியாத ஆசிரியர் பரமசிவம் என்று குறிப்பிட்டார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். ஒரு சராசரி மாணவனாக இருந்த தன்னை ஒரு சிறந்த மாணவனாக மாற்றியது பரமசிவன் ஆசிரியர் என்றும் அவரிடம் டியுஷன் பயின்றதாலேயே தன்னால் SSLCயில் டிஸ்டிங்ஷன் வாங்க முடிந்தது என்றும் கூறினார் ஜெயக்குமார்.

கெமிஸ்ட்ரி பாடத்தில் 2 மார்க் எடுத்த தன்னை பின்னர் பி யு சி யில் கெமிஸ்ட்ரி மேஜர் எடுக்கும் அளவுக்கு தன்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் பரமசிவன் ஆசிரியர் என்ற ஜெயகுமார், எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் தனது அரசியல் வாழ்வின் குருக்கள் என்றும் அவர்களோடு தனது தந்தை தனக்கு வாழ்வின் பெரிய பெரிய பாடங்களை கற்றுத்தந்ததாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

பள்ளிக் கல்லூரி ஆசிரியர்களைப் போன்றே நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நாம் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்றை வைத்துள்ளனர். அவற்றிலிருந்தும் நாம் கற்றுக்கொண்டோமேயானால் வாழ்வின் பாடங்கள் நம்மை அழகான வாழ்வியலை நோக்கி நகர்த்தும் என்பதில் ஐயமில்லை. மீண்டுமொருமுறை அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய வாழ்த்துகள்

English summary
Teachers day special article with special interview with VIPs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X