For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல் மதிப்பெண் கிடைப்பது சும்மால்ல... வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தோடு தங்கிப் படிக்கணும்!

By Shankar
Google Oneindia Tamil News

-எஸ் ஷங்கர்

ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண் பெற்றதும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் விடும் ஸ்டேட்மென்ட்களுக்குப் பின் உள்ள கதைகள் கொடுமையானவை.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ஊத்தங்கரைப் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகில் புதுப்புது குடியிருப்புகள். ஒற்றைப் படுக்கை அறை, ஒரு சமையல் அறை மற்றும் குளியலறை கொண்ட வீடுகள்தான் பெரும்பாலும்...

இவற்றுக்கான வாடகைதாரர்கள்... பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள்தான். குறிப்பாக நாமக்கல்லிலும், ராசிபுரத்திலும், பிராய்லர் கோழிப் பண்ணைகளைவிட அதிகமாக இந்த தனியார் பள்ளிகள் உருவெடுத்துள்ளன. சேலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வரும் வழியெங்கும் முன்பு பொட்டல் வெளியாகக் கிடந்த நிலங்களில் அதி நவீன கல்வித் தொழிற்சாலைகளைக் காண முடியும். அதையொட்டியே பல நூறு அடுக்கு மாடி குடியிருப்புகள்.

உள்ளூர் மாணவர்கள் வேண்டாம்

உள்ளூர் மாணவர்கள் வேண்டாம்

இந்த வீடுகளையெல்லாம் கட்டி வைத்திருப்பவர்கள் வேறு யாரோ ரியல் எஸ்டேட்காரர்கள் அல்ல... அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளின் தாளாளர் அல்லது பங்குதாரர்கள்தான்!

இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பலரும் இந்த ஊர்க்காரர்கள் இல்லை. வெளிமாவட்டத்திலிருந்து வந்தவர்கள். உள்ளூர்க்காரர்களுக்கு பெரிய முக்கியத்துவம் தருவதில்லை இந்தப் பள்ளிகளும்.

கடந்த சில ஆண்டுகளில் எஸ் எஸ் எல் சி அல்லது ப்ளஸ் டூ தேர்வுகளைச் சந்தித்த மாணவர்கள், அவர்களுடன் தங்கியிருந்து, பள்ளிகள் படுத்திய பாடுகளை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பெற்றோரைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்!

கல்வித் தொழிற்சாலைகள்

கல்வித் தொழிற்சாலைகள்

கிட்டத்தட்ட பள்ளிகளை 'கல்வி தொழிற்சாலை'களாகத்தான் நடத்துகின்றன இந்தப் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள். நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தொகையை கல்விக் கட்டணம், தங்குமிடக் கட்டணம், இதர கட்டணங்களாகப் பிடுங்கும் இவை, 11-ம் வகுப்பு முடிந்து 12-ம் வகுப்பு தொடங்கும்போதே மெல்ல மெல்ல தங்கள் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.

காலாண்டுக்குப் பின்...

காலாண்டுக்குப் பின்...

சரியாக காலாண்டுத் தேர்வு முடிந்ததும், பெற்றோருக்கு ஓலை வரும், அவசரச் சந்திப்பு வருமாறு. அங்கு போனதும், மாணவனோ மாணவியோ நன்றாகப் படித்தாலும், அவர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். இப்படி படித்தால் எங்களால் இவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்க முடியாது என்பார்கள். ஹாஸ்டலில் தங்கியிருந்தால் (அதை நடத்துவதும் இவர்கள்தான்), படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் என எச்சரிப்பார்கள்.

சரி, என்னதான் செய்ய வேண்டும்?

சரி, என்னதான் செய்ய வேண்டும்?

"ஒண்ணு பண்ணுங்க.. ஒரு நல்ல வழியிருக்கு. பக்கத்துல எங்கேயாவது ஒரு வீடு எடுத்து குடும்பத்தோடு தங்கியிருந்து உங்க பையன் / பெண்ணை உங்க நேரடி கண்காணிப்புல வச்சிக்கிட்டா பிரச்சினையே இருக்காது. வீட்ல நாங்களும், ஸ்கூல்ல நாங்களும் ஸ்ட்ரிக்ட்டா புடிச்சிடலாம்.. அப்புறம் எல்லா சப்ஜெக்ட்டுக்கும் ட்யூஷன் வெச்சிடுங்க. சப்ஜக்டுக்கு ரூ 5000 (பள்ளியின் பேராசையைப் பொறுத்து இது மாறுபடும்) கட்டிடுங்க.. மாஸ்டர்ஸை நாங்களே ஏற்பாடு செஞ்சிடறோம்," என்பார்கள்.

மூளைச் சலவை

மூளைச் சலவை

அப்புறம் எதுக்குங்க பள்ளி, ஹாஸ்டல், உங்க டீச்சர்ஸ்? என்றெல்லாம் திருப்பிக் கேட்க முடியாத அளவுக்கு அந்த மூளைச் சலவை பக்காவாக நடக்கும்!

பெரும்பாலும் அரசு ஊழியர்கள்தான், தங்கள் கவுரவத்தைக் காப்பாற்ற இப்படி பெரிய தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். எப்படி விடுப்பெடுத்தாலும் சம்பளத்துக்கு பங்கம் வராது என்ற தைரியத்தில், இந்த ஊர்களில் வாடகைக்கு வீடு எடுத்து, பையன் / பெண்ணுடன் தங்கியிருந்து படிக்க வைக்கிறார்கள்.

தீப்பெட்டி வீடுகளுக்கு ஏக வாடகை

தீப்பெட்டி வீடுகளுக்கு ஏக வாடகை

இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு, மாதம் ரூ 1000 ரூபாய்கூட பெறுமானமில்லாத வீடுகளுக்கு, குறைந்தது ரூ 6000 வரை வாடகை நிர்ணயிக்கிறார்கள். இன்ஸ்டன்ட் கேஸ் இணைப்பு எல்லாம் கூட இங்கே கிடைக்கிறது, எந்த ஆதார சான்றுகளும் இல்லாமலேயே!

ஆமா சார்.. எப்படித் தெரியும்?

ஆமா சார்.. எப்படித் தெரியும்?

முதல் மதிப்பெண், அல்லது அதிக மதிப்பெண்களைப் பெற்ற அத்தனைப் பேரின் பின்னணியும் இதுதானா என்று கேட்டால்... ஆம், 90 சதவீத மாணவ மாணவிகளின் பின்னணி இதுதான். 10 சதவீத விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம். இன்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகள் சிலரைத் தொடர்பு கொண்டு பள்ளியின் பெயரைக் கேட்டு, வாடகை வீட்டில் தங்கிப் படித்தீர்களா என்று கேட்டதும், 'ஆமாம் சார்... எப்படித் தெரியும்?' என்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களையும் பாராட்டுவோமே...

அரசுப் பள்ளி மாணவர்களையும் பாராட்டுவோமே...

அதற்காக இவர்கள் பட்ட பாடுகளை, படிப்புக்காக உழைத்ததை நாம் மட்டமாக மதிப்பிட்டுவிடவில்லை. ஆனால் கல்வி என்பது இதுதானா...கல்வியை அறிவாக நினைத்து இனி படிக்கவே முடியாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இப்படி கல்வித் தொழிற்சாலையில் 'மோல்டாகி' வந்த 'டாக்டர்' லட்சியவாதிகளை மட்டுமே கொண்டாடும் நாம், பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில், இயல்பாகப் படித்து 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்களைப் பற்றிப் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை!

இதுதானே சாதனை!

இதுதானே சாதனை!

அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 200 மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நிச்சயம் இவர்களில் எவரும் வீடு எடுத்துத் தங்கிப் படித்தவர்கள் இல்லை. அரசுப் பள்ளி, விடுதி எப்படியிருக்கும் என்று தெரியும்.. அதை தாங்கிக் கொண்டு படித்து தேறியவர்கள். இதுபோல பல ஆயிரம் அரசுப் பள்ளிகள் சாதனைப் படைத்திருக்கின்றன. வாழ்த்துக்களும் மீடியா வெளிச்சமும் அவர்கள் மீதும் பாயட்டும்!

English summary
How these private school students getting top scores in plus two exams in Tamil Nadu? Here is the true story behind their scores!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X