என்ன அநியாயம்… ஏரிக் கால்வாய்க்கு அருகில் 11 மாடி கட்ட அனுமதி!
சென்னை: போரூர் ஏரித் தண்ணீர் போன பாதை அது ஒரு காலத்தில். காலப்போக்கில் அது தூர்ந்து அப்படியே வெட்டவெளியாகி மண் மூடிப் போன இடத்தை வாங்கி 11 மாடிகளைக் கொண்ட இரு கட்டடங்களை எழுப்பியுள்ளனர்.
ஏரியின் கால்வாய் போகும் இடத்திற்கு அருகேதான் இந்த இரு கட்டடங்களையும் எழுப்பியுள்ளனர். இதில் ஒன்றுதான் தற்போது இடிந்து விட்டது.
எப்படி கால்வாய்க்கு அருகே இவ்வளவு பெரிய கட்டடத்தை எழுப்ப அனுமதித்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பிரைம் சிருஷ்டி ஹவுசிங் நிறுவனம்
பிரைம் சிருஷ்டி ஹவுசிங் நிறுவனத்தை சேர்ந்த பாலகுருசாமி, சம்பந்தப்பட்ட நிலத்தினை கமலநாதன், முத்துகருப்பன் ஆகியோரிடமிருந்து தலா ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அளவு தலா 1,03,21 சென்ட்டில் 617 சதுர அடியில் உள்ளது.

ஏரி கால்வாய்
நிலத்தினை கட்டுமான நிறுவனம் வாங்கி அதை பதிவு செய்யும்போது நிலத்திற்கு தெற்கில் கட்ட தோட்டி நிலம் மற்றும் ஏரி கால்வாயும், கிழக்கில் குன்றத்தூர் ரோடு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24.68 லட்சத்துக்கு வாங்கியதாக பதிவு
நிலத்தினை குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். நிலத்தை 24.68 லட்சத்திற்கு வாங்கியதாகவும் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவுத்துறையே சொல்கிறது
நிலத்தின் அருகில் ஏரி கால்வாய் உள்ளது என்று தமிழக அரசின் பத்திர பதிவுத்துறையே பதிவு செய்துள்ளது. ஏரிக்கு அருகிலேயோ, விளைநிலங்களிலேயோ எந்தவிதமான கட்டடமும் கட்டக்கூடாது என்று அரசின் சட்டமே உள்ளது.

சிறிய வீடு கட்டவே அனுமது இல்லாதபோது
இப்படிப்பட்ட இடத்தில் சிறிய வீடு கட்டவே அனுமதி மறுக்கும் அரசு, 11 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட அனுமதி எப்படி அளித்தது என்பது ஆச்சரியமாகவும், அநியாயமாகவும் உள்ளது.

இதற்கு மட்டும் எப்படிக் கிடைத்தது விதி விலக்கு
சி.எம்.டி.ஏ.விடம் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால் கூடுதலாக கட்டிய கட்டடத்தை உடனே வந்து இடித்து விடுவார்கள். ஆனால், ஏரிக்கரையில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு மட்டும் அதிகாரிகள் எவ்வாறு விலக்கு அளித்து அனுமதி அளித்தார்கள் என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு அனுமதி
மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்திற்கு சிஎம்டிஏ கடந்த 3.6.2013 அன்று (சி3/3120/2012)அனுமதி கொடுத்துள்ளது. பிரைம் சிருஷ்டி நிறுவனம் அனுமதி கேட்டு 15.2.12ல் விண்ணப்பம் அளித்துள்ளது. ஆனால் சுமார் 16 மாதம் காலம் அனுமதி அளிப்பதில் சிக்கல் நீடித்துள்ளது.

2056 சதுர மீட்டரில் 86 வீடுகள்
மவுலிவாக்கம் 17/7A, 17/7B, 17/7C, 8B3, 8B4B ஆகிய சர்வே எண்களில் உள்ள 2056 சதுர மீட்டர் இடத்தில்தான் 86 அடுக்குமாடி வீடுகள் கொண்ட இரு 11 மாடி கட்டிடங்கள் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கட்டுமான நிறுவனத்துக்கும் லட்சுமி விலாஸ் வங்கி கடன் தந்துள்ளது.

ஏரி சர்வே.. நில சர்வே.
போரூர் ஏரிக்கு அருகே இந்த நிறுவனம் கட்டுமான பணிகளுக்கு, சி.எம்.டி.ஏவில் அனுமதி கேட்ட போதுதான் பிரச்சனை தொடங்கியது. போரூர் ஏரிக்கான சர்வே எண்ணும், பிரைம் சிருஷ்டி கட்டிடம் அனுமதி கேட்டுள்ள இடத்தில் சர்வே எண்ணுக்கும் தொடர்பு இருந்தது. அதாவது ஒரே எண்ணாகும்.

பாய்ந்ததா பெரும் பணம்
ஆனால் ஏரிக் கால்வாய்க்கு அருகே கட்ட அனுமதி வாங்குவதற்காக மிகப் பெரிய அளவில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் சார்பில் பெரும் பணம் சிஎம்டிஏ அதிகாரிகளுக்குப் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

எத்தனை விதி மீறல்…
இந்த கட்டட அனுமதி தொடர்பாக பல விதிகள் மாற்றப்பட்டுள்ளன, விதி விலக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. கேட்கவே பயங்கர கொடுமையாக இருக்கிறது.

யாராச்சும் கொடுத்தால் போதும்
ஸ்டிரக்சுரல் பொறியாளர் மேற்பார்வையுடன் இந்த கட்டட பணி நடைபெற்றதாக பொறியாளர் பரிந்துரை கடிதம்/சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்ற விதியை இவர்களுக்காக மாற்றி, ஆர்கிடெக்ட் அதாவது வடிவமைப்பு பொறியாளர் சான்றிதழ் கொடுத்தால் போதும் என்று மாற்றியுள்ளனர்.

மண் பரிசோதனை சான்றிதழ் சரி பார்க்கப்படவில்லை
இந்த நிறுவனம் தாக்கல் செய்த மண் பரிசோதனைச் சான்றிதழ் சரிபார்க்கப்படவில்லை. சிறிய கட்டடமாக இருந்தாலும் சரி, பெரிய கட்டடம், அதுவும் ஏரிக் கால்வாய் அருகே என்கிறபோது நிச்சயம் சரி பார்த்திருக்க வேண்டும். அதைக் கூட சிஎம்டிஏ செய்யவில்லை.

ஏரிக்குப் பக்கத்திலேயே
பிரைம் சிருஷ்டி அப்ரூவலுக்கு கொடுத்த வரைபடத்தில் அருகில் போரூர் ஏரி காட்டப்பட்டுள்ளது. போரூர் ஏரி அருகே கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம எப்படி அனுமதி கொடுத்தது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

பில்லர் போட்டதில் தவறா…
இந்தக் கட்டடத்தற்குப் பில்லர் போட்டதிலும் தவறு நடந்திருப்பதாக சொல்கிறார்கள். 3 அடி அகல பில்லர் போட வேண்டும் என்று அனுபவம் வாய்ந்த மேஸ்திரி ஒருவர் கூறியதாகவும் ஆனால் 1.5 அடி போதும் என்ற முடிவுக்கு என்ஜீனியர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

கட்டி முடித்த சான்றிதழ் பெறாமலேயே
கட்டி முடித்த பின்னர் முழுமையாக கட்டப்பட்டது என்ற சான்றிதழைப் பெற வேண்டும். ஆனால் அதைப் பெறாமலேயே விற்று முடித்துள்ளனர்.

கியூரிங் சரியில்லை
மேற்கூரை போடும்போது, போட்டு முடித்த 21 நாட்கள் அதை நன்கு கியூர் செய்ய வேண்டும். தினசரி தண்ணீர் அடித்து, நீரைத் தேக்கி வைத்து வர வேண்டும். அதன் பிறகுதான் அதற்கு மேல் கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு அப்படி செய்யப்படவில்லையாம்.

சாலை அகலம் இல்லை
சிஎம்டிஏ விதிப்படி பார்த்தால் இந்தக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில் 60 அடிக்கு சாலை விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்களோ வெறும் 30 அடிதான் விட்டுள்ளனர்.
மொத்தத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டதிலும், அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டதிலும்தான் பெரும் குழப்பங்கள் இருக்கின்றதே தவிர இடிக்கும், கட்டடம் இடிந்து விழுந்த்தற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.