For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனி பெயர்ச்சி விழாவிற்கு தயார் நிலையில் திருநள்ளாறு: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருநள்ளாறு: சனிப்பெயர்ச்சி நாளை நடைபெறுவதை ஒட்டி திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

Thirunallar Sani Peyarchi Vizha Festival Tomorrow

தற்பொழுது துலாம் ராசியில் உச்சம் பெற்ற கிரகமாக இருந்துவந்த சனீஸ்வர பகவான் விருச்சிக ராசிக்கு பழமையான திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நவம்பர் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.54 மணிக்கு இடம் பெயர்ந்தார்.

இந்த சனிப்பெயர்ச்சியை தமிழ்நாட்டில் யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. கேரள மாநிலம் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே அந்த சனிப்பெயர்ச்சியை கணக்கில் கொண்டார்கள்.

தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிக விழாவாக நாளை நடைபெறும் சனிப்பெயர்ச்சியைத்தான் பக்தர்களும், ஜோதிட வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர். மிகப்பழமையான பஞ்சாங்கமாக கருதப்படும் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி அன்றுதான் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. அதன்படி மார்கழி மாதம் 1-ம் தேதி (டிசம்பர் 16) பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனிபவகவான் பிரவேசிக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியை ஜெயா தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

திருநள்ளாறில் பக்தர்கள்

சனிப்பெயர்ச்சியையொட்டி, கடந்த சில வாரங்களாகவே சனிக்கிழமைகளில் திருநள்ளாறு பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் திருநள்ளாறு கோயிலில் கட்டண முறையிலும், தர்ம தரிசன முறையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நளன் குளத்தில் நீராடி வழிபாடு

அதிகாலை 4 மணி முதல் நளன் குளத்தில் பக்தர்கள் நீராடத் தொடங்கி, பின்னர் குளக்கரையில் உள்ள நளன் கலி தீர்த்த விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து, கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்றனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

குவியும் பக்தர்கள்

16ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், சனிப்பெயர்ச்சிக்கு முந்தைய சனிக்கிழமையான நேற்று சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். அதிகாலை முதல் அவர்கள் நளன்குளத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்றும் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழக, புதுச்சேரி அரசுகள் சார்பில் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் விளக்கினர். திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, இன்றும் நாளையும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குச்சனூரில் வழிபாடு

குச்சனூர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரர் கோயில் உள்ளது. நாளைய தினம் இங்கும் சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்கு வருவார்கள். இதற்காக நீண்ட பந்தல், பேரிகார்டு, பக்தர்கள் உடை மாற்ற வசதியாக தற்காலிக அறைகள் தயாராக உள்ளன. சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதாலும், பெயர்ச்சிக்கு முன்னதாக வரும் கடைசி சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் நேற்று அதிகளவில் திரண்டிருந்தனர். இவர்கள் சுரபி நதிக்கரையில் குளித்து கொடி மரத்திற்கு பொரி, உப்பை தூவி காக்கை வாகனத்தை வலம் வந்தனர். பின்னர் எள் விளக்கு ஏற்றி தோஷம் கழித்தனர்.

ஏழரைச்சனி

ஏழரைச் சனி என்பது ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகள் வீதம் ஒரு ராசி, அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளில் சனி இருக்கும் ஏழரை ஆண்டுகள் என்பதைத்தான் ஏழரைச்சனி என்கிறோம்.

யாருக்கு ஏழரை சனி

மேஷத்துக்கு அஷ்டம சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும், விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில் விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.

சனிப் பெயர்ச்சி யாருக்கு நன்மை

மிக அதிகமானதும் நல்லதுமான பலன்களை பெறப்போவது மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிகள். கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார். அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

சனி கிரகத்தின் கதிர்வீச்சு

திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன் அருளாட்சி செய்கிறார். இங்கு சென்று ஒரு நாள் தங்கி வழிபடுவது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள். சனிப் பெயர்ச்சிக்கு பல லட்சம் பேர் வழிபட வருவதால் அன்று செல்ல முடியாதவர்கள் பதினைந்து நாள் முன்போ, பின்போகூட செல்லலாம்.

வட திருநள்ளாறு

திருக்கொள்ளிக்காட்டில் உள்ள சனீஸ்வரர் பொங்குசனீஸ்வரராக அருள் பாலிக்கிறார். நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தருகிறார் சனீஸ்வரர்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை

சனிக்கு உகந்த தானியம் எள். அதனால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவை கொண்டு அவரை வழிபடலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகுந்த மகிமை வாய்ந்தது. அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.சனி பகவானின் வாகனம் காக்கை. தினமும் காக்கைக்கு சாதம் வைப்பதன் மூலம் சனியின் பாதிப்பு குறையும். சனிக்கு உகந்தவர்கள் ஆஞ்சநேயர், விநாயகர், பெருமாள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

English summary
Thirunallar Sani Peyarchi Vizha Festival will be celebrate December 16, 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X