For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவருக்கு கொலை மிரட்டல்: மைத்ரிபால சிறிசேனவுக்கு வேல்முருகன் கண்டனம்- கொடும்பாவி எரித்த த.வா.க.!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்வேன் என்று எச்சரித்து தமிழக மீனவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் மைத்ரிபால சிறிசேனவின் கொடும்பாவியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர்.

TVK condemns Srilankan President on Fishermen issue

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதியில் மீன்பிடித்தால் கைது செய்வோம்- படகுகளை பறிமுதல் செய்வோம் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆணவத்தோடு பேசியிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழக மீனவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கொலை மிரட்டலாகவே கருத முடியும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வடக்கு மாகாண தமிழ் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை படகுகளுடன் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

மேலும் இனிமேல் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப் போவதில்லை என்றும் கொக்கரித்திருக்கிறார். தமிழகம் மற்றும் ஈழத் தமிழ் மீனவர்களிடையே சுமூக நிலையை உருவாக்கவும் இருநாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இப்பேச்சுவார்த்தை நியாயமாக தமிழக மீனவர்களை கைது செய்கிற இலங்கை அரசுடன் இந்திய அரசுதான் நடத்தியிருக்க வேண்டும். இருப்பினும் ஏதோ ஒருவகையில் சுமூக தீர்வு காணப்பட்டுவிடாதா என்ற அடிப்படையில் தமிழக மீனவர்களும் 3 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்றனர்.

TVK condemns Srilankan President on Fishermen issue

சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தையும் கொழும்பு நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 14-ந் தேதி 2-வது கட்ட பேச்சுவார்த்தையும் அண்மையில் மார்ச் 24-ந் தேதி சென்னையிலுமாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தை முற்று முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே ஈழத் தமிழ் மீனவர்களை தமிழக மீனவர்களுடன் மோத விடும் வகையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக மீனவர்களை கைது செய்வோம்- படகுகளை பறிமுதல் செய்வோம் என்று திமிராகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையாகும். இதை எந்த அரசாங்கங்களாலும் தடுத்து தட்டிப் பறித்துவிட முடியாது.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண தனி மீன்வள அமைச்சகம் அமைப்போம் என்று வெற்று உறுதிமொழி அளித்து மத்தியில் அரியணையேறி அமர்ந்திருக்கும் மோடி அரசு கடந்த 10 மாத காலத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையுமே மேற்கொண்டதில்லை.. இதனால்தான் இலங்கை அதிபரும் பிரதமரும் தமிழக மீனவர்களை கொல்வோம் என்று ஆணவம் கொப்பளிக்க பேசுகின்றனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்வேன் என்று கொக்கரித்தபோது மிகக் கடுமையாக இந்திய மத்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் சுடுவேன் என்று ரணில் மிரட்டல் விடுத்த போதும் இந்திய மத்திய அரசு கள்ள மவுனம் சாதித்தது.

இதனால் தற்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் தமிழக மீனவர்களை கைது செய்வோம்- படகுகளை பறிமுதல் செய்வோம் என்று மிரட்டுகிறார்.. இப்படி இலங்கை அதிபர், பிரதமர் பேசுவதால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது அனைத்துவிதமான அட்டூழியத்தையும் கட்டடற்ற சுதந்திரத்துடன் கட்டவிழ்த்துவிடத்தான் போகிறது.. இது தமிழக மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலே...

இந்திய மத்திய அரசு இப்போதும் கள்ள மவுனம் சாதித்தால் அதை தமிழக மீனவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இலங்கை அதிபரின் இந்த ஆணவப் பேச்சுக்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில் அழைத்து தமது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; இலங்கையில் உள்ள இந்திய தூதர் மூலமாக தமது ஆணவப் பேச்சை மைத்ரிபால சிறிசேன திரும்பப் பெறச் செய்து இதுபோன்ற மிரட்டல் பேச்சுகளை இனியும் விடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்ய வேண்டும்..

இத்தகைய நடவடிக்கைகள் மூலமே தமிழக மீனவர்கள் உயிர் அச்சமன்றி நாளாந்தம் கடல் தொழிலுக்குச் செல்ல முடியும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசுக்கு மிகக் கடுமையான அழுத்தங்களைக் கொண்டு இலங்கைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கொடும்பாவி எரிப்பு

இதனிடையே தமிழகத்தின் பல இடங்களில் மைத்ரிபால சிறிசேன கொடும்பாவி எரிக்கப்பட்டது.

தருமபுரி, வேதாரண்யம், கும்பகோணம், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் கொடும்பாவியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர்.

English summary
Tamizhaga vazhvurimai katchi leader Velmurugan has condemned Sriankan President Maithripala Srisena for remarks against TN fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X