For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் 3,4வது அணு உலைகளை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்க வேண்டும்: உதயகுமார் கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

Udayakumar letter to TN Chief Minister on Kudankulam 3,4th Unit
சென்னை: கூடங்குளம் 3வது மற்றும் 4வது அணு உலைகளை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்க வேண்டும் என்று போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப. உதயகுமார் எழுதியுள்ள கடிதம்:

கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினை பற்றிய அண்மை நிகழ்வுகள் சிலவற்றை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர என்னை தயவு செய்து அனுமதியுங்கள்.

கடந்த மே 14, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த ‘சிறு' விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இருவர் 70 டிகிரி தீப்புண்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்பட்டனர். ஒரு மாதமாகியும் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதுபோல, 2013-ம் ஆண்டு சனவரி மாதம் முதல் மே 17, 2014 வரை கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு 5.2 கோடி ரூபாய்க்கு மருத்துவச் செலவு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான தொகை கண் சம்பந்தப்பட்டப் பிரச்சினைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் வாழும் பொதுமக்களும் இம்மாதிரியான நோய்களுக்கு ஆளாகியிருக்க வேண்டும், அனால் அம்மக்களுக்கு யாரும் எந்த விதமான உதவியும் இதுவரை செய்யவில்லை. கூடங்குளம் அணுமின் திட்டம் இப்படிப்பட்டப் பிரச்சினைகளோடுத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதை சனநாயக முறையில் அறவழியில் எதிர்த்துப் போராடும் எங்கள் மக்கள் மீதுப் போடப்பட்ட வழக்குகள் அப்படியே இருக்கின்றன.

டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரசு அரசு தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கு ஒப்பந்தம் போட்டது. இந்த கூடுதல் உலைகளுக்கான பூர்வாங்கப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கூடங்குளம் போராட்டம் சம்பந்தமாக 2011-ஆம் ஆண்டு தங்களை நேரில் சந்தித்துப் பேசும்போது, மேற்கு வங்க முதல்வர் தமது மாநிலத்தில் அணுஉலை வேண்டாமென நிலைப்பாடு எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தாங்களும் அப்படி ஒரு நிலையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அப்போது தாங்கள் "ஹரிப்பூர் அணுமின் நிலையம் துவக்க நிலையில் இருப்பதால் மேற்கு வங்க முதல்வரால் அப்படி ஒரு நிலைப்பாடு எடுக்க முடிந்தது, ஆனால் கூடங்குளம் திட்டம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், என்னால் அந்த மாதிரி முடிவெடுக்க முடியாது" என்று தங்கள் நிலைமையைத் தெளிவாக நேர்மையாக தெரிவித்தீர்கள்.

கூடங்குளத்தில் தற்போது 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கான கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 5 மற்றும் 6 அணுஉலைகளுக்கான அலுவலகக் கட்டிடங்களும் கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்தத் திட்டங்களெல்லாம் துவக்க நிலையில் இருப்பதால், தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இவற்றைத் தடுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மே 6, 2014 அன்று கேரளத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. வி. எஸ். அச்சுதானந்தன் அவர்களை நானும், எனது தோழர்களும் சந்தித்துப் பேசினோம். கேரளத்தில் அணுமின் நிலையங்கள் கட்டுவதையும், கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் எதிர்க்கும் அவர், தேனி மாவட்டத்தில் கட்டப்படும் நியூட்ரினோ திட்டத்தால் இடுக்கி, முல்லைப் பெரியார் போன்ற அணைகள் பாதிக்கப்படும் என்கிற அச்சத்தையும் எங்களோடு பகிர்ந்துகொண்டு அந்தத் திட்டத்தையும் எதிர்ப்பதாகக் கூறினார்.

யூன் 7, 2014 அன்று சிவசேனை கட்சியினரும், மராட்டிய மாநில பாரதீய ஜனதா கட்சியினரும் திரு. வினோத் தாவ்டே தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவதேகரை சந்தித்து கொங்கண் மண்டலத்தின் சூழலையும், மீனவர்களின் நலனையும் கெடுப்பதால் ஜைதாபூர் அணுமின் நிலையத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். மும்பை நகரின் அருகேயுள்ள தாராப்பூர் அணுமின் நிலையம் கட்டப்படும்போது, மீனவ மக்களின் தொழில் பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் கூறியதையும், பின்னர் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கியதும் 10 கி.மீ. சுற்றளவுக்குள் மீன்பிடிக்கக் கூடாது என்று அவர்கள் தடுக்கப்பட்டதையும் அந்தக் குழு கோடிட்டுக் காட்டியது. மத்திய அமைச்சரும் அவர்கள் கருத்தை பிரதமர் கவனத்துக்குக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறார்.

இப்படி பிற மாநிலத்தவர் தங்கள் ஈடுபாடுகளை, நலன்களை கரிசனத்தோடு காத்துக் கொள்ளும்போது, தென் தமிழக மக்களாகிய நாங்கள் மட்டும் கேட்பாரின்றி விடப்படுவது வேதனையளிக்கிறது. தாங்களும் தங்கள் அரசும் கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சுப. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
People's Movement Against Nuclear Energy leader SP Udayakuma wrote a letter to Tamilnadu Chief Minister on Kudankulam 3rd and 4th Units.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X