For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் படுகொலையில் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள்: திருமுருகன் காந்தி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Unanswered Questions- Rajiv Gandhi Assassination case: Tirumurugan Gandhi
-ஜெயலட்சுமி

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள் இருக்கும் நிலையில் அப்பாவிகளை தண்டிக்கக் கூடாது என்று மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் உருவானது மே 17 இயக்கம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லக் கூடிய இயக்கங்களில் ஒன்று. இந்த மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

படித்த இளைஞர்களும், மாணவர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுக்க முக்கிய காரணமாக இருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறும் மிகமுக்கிய போராட்டங்களில் மே 17 இயக்கமும் பங்கு வகிக்கிறது.

அதேபோல் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமாகட்டும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான போராட்டமாகட்டும் மே 17 இயக்கம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தமிழக மக்களின் குரலை இந்தியா முழுவதும் பதிவு செய்யவேண்டும் என்று களப் போராளியாக செயல்படும் திருமுருகன் காந்தி ஒன் இந்திய இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி:

கேள்வி: முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவூட்டும் வகையில்தான் "மே 17 இயக்கம்" என பெயரிட்டுள்ளீர்கள்.. உங்களது சமூக இயக்கமா? அல்லது என்.ஜி.ஓவா? எப்படி எடுத்துக் கொள்வது?

திருமுருகன் காந்தி: இது மக்களின் பிரச்சினைக்காக போராடும் ஒரு இயக்கம்தான். என்.ஜி.ஓ அல்ல. தமிழக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறோம்.

கேள்வி: மே 17 இயக்கம் என்பது ஒரு சிறு குழுவாக தொடர்கிறது. அது பரந்துபட்ட அளவில் வளரவில்லையே..

திருமுருகன் காந்தி: தமிழகம் முழுவதும் எங்களின் இயக்கத்தினை அறிந்தவர்கள் இருக்கின்றனர். எங்களின் போராட்டங்களுக்கு இளைய தலைமுறையினரிடம் ஆதரவு இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு போராடியிருக்கிறோம். அதற்கு ஆதரவு கிடைத்துள்ளது.

கேள்வி: ஈழத் தமிழர் மற்றும் தமிழக உரிமை பிரச்சனைகளைப் பற்றி பேச எத்தனையோ இயக்கங்கள், கட்சிகள் இருக்கும்போது ஏன் தனி இயக்கம் அவசியமாகிறது?

திருமுருகன் காந்தி: எங்களுடைய அரசியல் சார்புடைய இயக்கம் அல்ல, தமிழக மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் முன்னெடுத்து போராடிவருகிறோம்.

கேள்வி: நீங்கள் தனியே இயக்கம் நடத்தினாலும் ஏற்கெனவே இருக்கும் இயக்கங்கள், கட்சிகளுடன் இணைந்துதானே களத்துக்குப் போக வேண்டியிருக்கிறது?

திருமுருகன் காந்தி: தமிழர்களின் பிரச்சினைக்காக போராடும் அனைவரோடும் ஒருங்கிணைந்து போராடுவதில் தவறில்லையே.

கேள்வி: தொலைக்காட்சி விவாத களங்களில் அதிகம் பங்கேற்கிறீர்கள்.. அவர்கள் உங்களை அழைத்தாலும் உங்களைவிட மூத்த களப் போராளிகளை அப்படியான விவாத மேடைகளுக்கு அனுப்பி வைத்தால் இன்னும் சிறப்பானதாக இருக்காதா?

திருமுருகன் காந்தி: எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளனர். உமர், அருள் போன்ற பலரும் பங்கெடுத்துள்ளனர். விவாதிக்கப்படும் பிரச்சினைக்களைப் பொறுத்து யார் பேசினார் சரியாக இருக்கும் என்றே இயக்கத்தில் இருந்து அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

கேள்வி: சி.என்.என், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளின் விவாத களத்தில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றுள்ளீர்கள்.. உங்களது அனுபவம் எப்படி?

திருமுருகன் காந்தி: அந்த விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகவே பிரச்சினைகளை மாத்தி பேசுறாங்க. வட இந்திய டிவிகளுக்கு அரசியல் கட்சிகளுடன் ரகசிய ஒப்பந்தமே உள்ளது. அது ஒரு நேர்மையற்ற விவாதம். அதை வெளிப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது பயன்படுத்திக்கொண்டேன்.

கேள்வி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள்.. அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கேஜ்ரிவாலை ஆதரிக்கின்றனர்.. ஆனால் அந்த கேஜ்ரிவால் இப்போது 7 தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?

திருமுருகன் காந்தி: அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அணு உலை எதிர்ப்புக்குழுவினர் கெஜ்ரிவால் கட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. டெல்லி கட்சிகளை நாங்கள் எப்போதுமே ஆதரிப்பதில்லை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத அல்லது விடைதெரியாத மர்ம முடிச்சுகள் என்று எதையெல்லாம் சொல்கிறீர்கள்?

உண்மையான குற்றவாளிகள்:

திருமுருகன் காந்தி: ராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில் கடைசியாக "இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்த கமிஷன் கருதுகின்றது. ஆகவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்"

பிரதமர் நரசிம்மராவ்

அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..

கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி?

சுப்ரமணிய சுவாமி, சந்திரசாமி

கொலை நடந்த அன்று சுப்பிரமணிய சுவாமி மற்றும் சந்திராசாமி ஆகியோரின் செயல்பாடுகள், நடமாட்டம் ஆகியவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின. மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் போன்றவையும் கேள்விக்குள்ளாகுகின்றன. ஆனால் சிபிஐ இவர்களை தகுந்த முறையில் விசாரிக்கத் தவறி விட்டது.

எம்.கே.நாரயணன் மீது சந்தேகம்:

ராஜீவ் கொலை குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அப்போதைய பிரதமர் சந்திரசேகர் ஆட்சி அமைத்தது. ஜே.எஸ். வர்மா தனது அறிக்கையை 1992ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசிடம் அளித்தார். ஆனால் ஐந்தாண்டு காலமாக இந்தக் கமிஷன் அளித்தப் பரிந்துரைகள் எதுவும் அமுலாக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் வினோத் பாண்டே உளவுத்துறைத் தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலாளர் சிரோண்மணி சர்மா பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய் ஆகிய நால்வரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றப பிறகே இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதன் மூலம் மேற்கண்ட அதிகாரிகள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார்? இந்தக் கேள்விக்கு இதுவரை விடையளிக்கப்படவில்லை.

மரகதம் சந்திரசேகர்:

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு ராஜீவ் காந்தியைக் கட்டாயப்படுத்தி வரவழைத்த மரகதம் சந்திரசேகர் குறித்து பல புகார்கள் எழுந்தன. எத்தகைய சூழலில் ராஜீவை இக்கூட்டத்திற்கு அவர் வரவழைத்தார் என்பது குறித்தோ அல்லது இந்தப் படுகொலை குறித்தோ மரகதம் சந்திரசேகரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மரகதம் சந்திரசேகரின் மருமகள் ஒரு சிங்களப்பெண். அவரது உறவினர்தான் தனுவை ஸ்ரீ பெரும்புதூர் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டும் அதை ராஜீவ் காந்தி கேட்காமல் பங்கேற்றது ஏன்?

எடிட் செய்யப்பட்ட வீடியோ:

ராஜீவ் படுகொலையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இறுதியில் சில காட்சிளை எடிட் செய்துவிட்டுத்தான் எம்.கே. நாராயணன் கொடுத்துள்ளார். விசாரணை செய்யப்பட்ட பைல் தொலைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியில் இருந்த சுப்ரமணியசுவாமிக்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கேபினட் அந்தஸ்துள்ள பதவி ஒன்றை கொடுத்தது ஏன்?. இந்த கேள்விகளைத்தான் நாங்கள் முன்வைக்கின்றோம்.

கேள்வி: ராஜீவ் காந்தியின் படுகொலை,அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலை இதை எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொருவரும் இதன் மூலம் ஆதயம் பெறத்தான் முயற்சிக்கிறார்கள்.இதைப்பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திருமுருகன் காந்தி: எதை வைத்து ஆதயம் பெறுவதாக நீங்க சொல்கிறீர்கள்?. இக்கொலைவழக்கில் சம்பந்தபட்டவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி போரட்டங்களை நடத்துபவர்கள்,அவர்கள் சந்தேகத்துக்கு உரியவர்களாக மட்டும் இருந்த போது ஏன் அவர்களை ஆதரிக்கவில்லை? 1999களில் அதாவது பத்தாண்டுகளுக்கு முன்பே இது தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 2009களுக்குப் பிறகு மூவர் தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது.

தூக்குதண்டனை தேசவிரோத தண்டனை என்றால் அது தூக்குதண்டனைக்கு உள்ளான எல்லாருக்குமே பொதுவானதுதானே?அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? பொதுவாகவே மரணதண்டனைக்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம். அப்சல்குரு தூக்கிலிடப்பட்டபோதும் நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம்.

கேள்வி: ஈழத்தமிழர் பிரச்சினையில் மே 17 இயக்கத்தின் வெற்றி என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

திருமுருகன் காந்தி: ஒரு இனப்படுகொலையை மறைத்து அதை போர்க்குற்றம் என்று மட்டும் சுருக்கிப் பேசிவரும் சர்வதேசம், அறிவுசீவி வர்க்கத்தினை புறந்தள்ளி இருக்கிறது. இது 2009க்கு பின்பு நமக்கு கிடைத்த குறிப்பிடத் தக்க வெற்றி.

போர்க்குற்றம் என்பதாக மட்டுமே சுருக்கினால் நமது விடுதலை என்பது எட்டாக்கனியாக மாறும் என்பதை 2011இல் ஐ.நா அறிக்கை வெளியான உடனேயே முன்வைத்தோம்..

இனப்படுகொலைதான் ...

போர்க்குற்றம் என்கிற பதத்தினை ஏற்க முடியாது என்று பேசிய பொழுது மே17 இயக்கத்தினை தனிமைப்படுத்தும் செயல் வெகுவேகமாகவே நடந்தது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் உலகின் மிக முக்கிய மனித உரிமையாளார்கள், சிந்தனையாளார்கள், செயல்பாட்டாளர்கள் என பல்வேறு நாடுகளில் இருந்து நீதிபதிகளாக வந்தவர்கள் ஆழமாக ஆராய்ந்த பின்னர் இதை 'இனப்படுகொலை' என அறிவித்திருக்கிறார்கள். இது முக்கியமானது. வரலாற்று சிறப்பு மிக்கது.

English summary
Thirumurugan Gandhi is a human rights activist and organiser of May 17 Movement in Chennai said The assassination of former Prime Minister Rajiv Gandhi was a tragic event, but even more tragic is the fact that the complete conspiracy behind his killing is yet to be unraveled and some critical pieces of leads continue to remain unexplored in spite of their relevance to the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X