• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வைகோ அழைப்பு!

  By Mayura Akilan
  |

  சென்னை: தஞ்சாவூரில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேண்டும் என அனைத்து தமிழர்களுக்கும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

  இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

  தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர்களைத் தாரை வார்த்த உன்னதத்தையும், கற்கள் பேசும் சிலைகளாக அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் விழுமிய ஏற்பாட்டால், நம் இருதயங்களின் அழியாத காட்சிகளாகச் சித்தரிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், நவம்பர் 8 ஆம் தேதி, தஞ்சை திருநகர்-விளார் புறவழிச் சாலையில் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  Vaiko

  ஈழத்தில் சிங்களப் பேரினவாதக் கொடியோர் தமிழர்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைக் காட்சிகள் சிலை வடிவில்! வானில் இருந்து கொத்துக்கொத்தாகத் தமிழர் மீது பாயும் குண்டுகள்; உடல்கள் சிதைந்து துடித்து மடியும் தமிழர்கள்; தமிழ்ப் பெண்களின் வயிறை பயனைட் கத்திகள் கிழித்துக் கருவில் உருவாகிய பிஞ்சுகள் அழிக்கப்பட்ட கொடூரம் சிலைவடிவில்! பிறந்த மண்ணை விட்டு கூட்டம், கூட்டமாக முதிர்வயதினரும், பாலகர்களும் உடன்வர, தமிழர்கள் அடைக்கல நிழல் தேடிச் செல்லும் பேரவலம் சிலை வடிவில்! குண்டுமழை நெருப்பில் துடிதுடித்துத் தமிழர்கள் செத்திடும் துன்பம் சிலைவடிவில்!

  தொப்புள்கொடி உறவுகள் இப்படி நாதியற்றுச் சாவதோ? இந்த அக்கிரமக் கொடுமைக்கு இந்திய அரசே துணை போவதோ? தாக்குதல் நிற்காதா? தமிழர்கள் சாகும் அவலம் தணியாதா? இன்னுமா உறக்கம் தாய்த்தமிழகத்தில்? மான உணர்ச்சியற்ற சதைப்பிண்டங்களா தமிழர்கள்? என்ற சவுக்கடி, தமிழர்கள் நெஞ்சில் விழட்டும்.

  இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது, இப்புவி எங்கும் வாழும் மனிதகுலத்துக்கு, தாய்த் தமிழகத்தின் தன்மானத் தமிழர்கள் விடுத்துள்ள அறைகூவல் பிரகடனம் ஆகும். தமிழ் ஈழத் தாயகத்தில், விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலகங்களை, கொடியவன் ராஜபக்சே இடித்துத் தகர்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டான்.

  நான் நெஞ்சால் பூஜிக்கும் தலைவர் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை இல்லத்தை மண்மேடாக்கி விட்டான். கிளிநொச்சியில் யுத்தகளத்தை இயக்குவதற்கு, தலைவர் பிரபாகரன் அமைத்து இருந்த நிலவறையை, அண்மையில் குண்டு வைத்துத் தகர்த்தான். ஆனால், ராஜபக்சே ஒரு வடிகட்டிய முட்டாள். அந்த ஈழ மண்ணில் புலிகள் சிந்திய இரத்தத்துளிகளும், அவர்களின் எலும்புத்துகள்களும் நீக்கமறக் கலந்து இருப்பதை, சுதந்திரத் தமிழ் ஈழம் என்று அவர்கள் எழுப்பிய போர்முழக்கமும், அவர்களின் உணர்வோடு கலந்த சுவாசமும் அக்காற்று மண்டலத்திலே சுற்றிச்சுற்றிச் சுழல்வதை, அம்மடையன் அறிய மாட்டான்.

  இதோ, 18 கல் தொலைவுக்கு அப்பால் அமைந்து உள்ள தஞ்சைத் தரணியில் இருந்துதான் கரிகால் பெருவளத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் படையெடுத்துச் சென்று, சிங்களவர்களைச் சிறைப்பிடித்து, இங்கு கொண்டு வந்து சோறு போட்டு, காவிரியின் கரைகளை உயர்த்த வேலை வாங்கினான். இராசராச சோழனும், இராசேந்திரச் சோழனும் படையெடுத்து, புலிக்கொடியை ஆட்சிக் கொடியாக்கினர்.
  மாமன்னன் சங்கிலி, போர்த்துகீசியரோடு போர் தொடுத்தபோது, தஞ்சை இரகுநாத நாயக்க மன்னன் வருணகுலத்தான் தலைமையில் படைகளை சங்கிலிக்குத் தோள் கொடுக்க அனுப்பினான்.

  இன்று அதே தஞ்சைத் தரணியில் ஈழத்தமிழர் படுகொலையை, அழியாத சாட்சியமாக உலகத்திற்குக் காட்டவும், சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்கு தாய்த்தமிழகத்து இளம் தலைமுறையினர் வஞ்சினம் பூணவும் குறிக்கோளாகக் கொண்டு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அண்ணன் பழ.நெடுமாறன், முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பி உள்ளார்.

  மாவீரர் மண்டபத்தில் முதல் மாவீரன் சங்கர் முதல் மாவீர மகன் பாலச்சந்திரன் வரை, கண்ணையும், கருத்தையும் ஈர்க்கும் சித்திரங்களைக் காணலாம். பலியான முதல் பெண் போராளி மாலதி முதல் அங்கயற்கண்ணி வரை, கரும்புலி மாவீரர்களை, தியாகதீபம் திலீபன் முதல் கரும்புலி மாவீரன் கேப்டன் மில்லர் வரை, பேசும் சித்திரங்களாகப் பார்க்கலாம். இந்திய அமளிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் மூளக் காரணமான, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர், சயனைடு குப்பி கடித்து உயிர் துறந்த அவலத்தை, நம் போற்றுதலுக்குரிய வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் வீர மைந்தன் சார்லஸ் ஆண்டனியின் வீரப்புன்னகையை, ஓவியமாகப் பார்க்கலாம்.

  அடுத்து, முத்தமிழ் மண்டபத்திற்குள் நுழைவோம். இங்கு, அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள், இலக்கிய வித்தகர்கள், இசைவாணர்கள், கலை உலகில் கருவூலமான வெள்ளித்திரை நட்சத்திரங்கள், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்க்களத்தில் அடக்குமுறைக்குப் பலியானவர்கள் தீக்குளித்து மாண்ட தியாகிகள் அனைவரது புகைப்படத்தையும் இங்கு காணலாம்.

  தமிழர்கள் மட்டுமல்ல; உலகெங்கும் இருந்து இந்த நாட்டில் காலெடுத்து வைப்பவர்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய அருங்காட்சியகம்தான் முள்ளிவாய்க்கால் முற்றம். முன்னர், நான்மாடக்கூடல் மதுரைக்கு அருகில் அழகர் கோவில் பக்கத்தில், குன்றக்கடவுள் முருகனுக்கு பழமுதிர் சோலை ஆலயம் எழுப்பினார் மதுரை பழனியப்பனார். அவரது அருமைந்தர் பழ.நெடுமாறன், வரலாற்றில் அழியாத முள்ளிவாய்க்கால் முற்றத்தை உருவாக்கி உள்ளார்.

  நவம்பர் 8 ஆம தேதி மாலையில் நடைபெறும் தமிழர்களின் மான உணர்ச்சியின் வெளிப்பாடான திறப்பு விழாவிற்கு, நாலாத் திசைகளில் இருந்தும் தமிழர்களே திரண்டு வாரீர்.

  நம் வாழ்வில் முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு நிகழ்வில் பங்கேற்பது தலையாய கடமை என்ற வீர உணர்வுடன், அனைவரும் தஞ்சையில் சங்கமிப்போம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  MDMK chief Vaiko has invited all to the unveiling of Mullivaikal mutram

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more