For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபாநாயகர் பதவி கொடுப்பதா? நாராயணசாமி வீட்டை முற்றுகையிட்ட வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 5 மாநில சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் இன்னும் புதிய ஆட்சி பொறுப்பு ஏற்காமல் உள்ளது.

Vaithilingam announced as the Speaker of Puducherry

பலத்த சர்ச்சைக்கு பின்னர் புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் துணை முதல்வர் பதவிக்கு அடி போடுகிறார் என்று ஒரு தரப்பிலும் , மற்றொரு தரப்பில் அவர் முக்கிய அமைச்சர் பொறுப்புக்கு முயற்சித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். வைத்திலிங்கம் விலகி கொண்டதால் நாராயண சாமி, நமச்சிவாயம் இடையே போட்டி உருவானது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

முதல்வர் பதவி போட்டியில் இருந்து விலகிய வைத்திலிங்கம் தனக்கு 2ம் நிலை அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டார்.

அதே பதவியை நமச்சிவாயமும் கேட்டார். இதனால் யாருக்கு 2ம் நிலை அமைச்சர் பதவி வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுதவிர பலரும் அமைச்சர் பதவி கேட்டார்கள். ஆனால் புதுவையில் முதல்வர் உள்பட 6 பேர் தான் அமைச்சர்களாக இருக்க முடியும். அதிகம் பேர் பதவி கேட்டதால் அமைச்சர் பதவி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டது.

இதனால் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், வைத்திலிங்கம், கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களிடம் வற்புறுத்தி வந்தனர்.

அதிகம் பேர் அமைச்சர் பதவி கேட்பதால் வைத்திலிங்கத்திற்கு சபாநாயகர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் அதை அவர் ஏற்க மறுத்து வந்தார். மேலிட தலைவர்கள் வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக இருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், ''காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். பொறுப்பு ஏற்கும் புதிய அரசு புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

என்று கூறினார்.

இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த புதுவை தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து பிரச்சனை பற்றி கூறினார்கள்.

வைத்திலிங்கமும் சோனியாவை தனியாக சந்தித்து தனக்கு அமைச்சர் பதவி தான் வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஆனால் அவரது கோரிக்கையை மேலிட தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வைத்திலிங்கத்துக்கு சபாநாயகர் பதவி வழங்குவது என்று முடிவு எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து யார்-யார் அமைச்சர்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது. நமச்சிவாயத்துக்கு 2ம் நிலை அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 5 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

1. நாராயணசாமி (முதல்வர்)

2. நமச்சிவாயம்

3. கந்தசாமி

4. மல்லாடி கிருஷ்ணா ராவ்

5. ஷாஜகான்

6. கமலக்கண்ணன்

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள வைத்திலிங்கம் நான் சபாநாயகர் பதவியை ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இப்போது அவர் அந்த பதவியை ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்வி எழுந்தது.

நீண்ட இழுபறிக்கு பிறகு அமைச்சர்கள் பட்டியல் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை மறுதினம் திங்கட்கிழமை பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

இதனிடையே புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி வீடு முன் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் கூடி போராட்டம் நடத்தினர். வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் சபாநாயகர் பதவி கொடுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆர்பாட்டக்காரர்களை விரட்டவே சில நிமிடங்கள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றம் உருவானது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், கட்சிக்கு கட்டுப்பட்டு காங்கிரஸ் தொண்டர்கள் நடக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனதுஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். அமைச்சரவை பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி அமையும் முன்பே போராட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் கோஷ்டி தலைவர்களால் இனி வரப்போகும் நாட்களில் என்னென்ன காட்சிகள் அரங்கேறுமோ?

English summary
Sources in Puducherry said that Vaithilingam, who had served as chief minister twice annouced as a Speaker in Puducherry assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X