குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்த கதையா இருக்கே - தி. வேல்முருகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்... என திரைப்பாடலுக்கு வாயசைத்தவர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர். அவரது கட்சியின் இன்றைய ஆட்சியாளர்கள், ஒரு தவறை அல்ல, தவறுக்கு மேல் தவறை அதுவும் தெரிந்தே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தி. வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கை:

Velmurugan blasts ADMK MLAs

'வெந்த புண்ணிலே வேல்!', 'குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்ததாம்!' - போன்ற சொலவடைகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு!

இதற்குத் தலைமை தாங்கும் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழகத்தின் முதல்வரா இல்லை மத்திய அரசின் முகவரா என்ற சந்தேகமே மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நீட் எனும் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு, காவிரி பாசனப் பகுதியில் குறுவை சாகுபடி ஆகிய பிரச்சனைகளின் பேரில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவை வெளியிட மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்தது. உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.

நாடு முழுவதற்கும் பொதுவான நீட் தேர்வு என்று சொல்லிவிட்டு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட விதத்தில் வினாத்தாள் இருந்தது. இந்த அநீதிக்குத்தான் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை. ஆனால் இந்த அநீதியையே அங்கீகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இதைப் பற்றிய கருத்தைக் கேட்டால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இன்னும் படிக்கவில்லை என்கிறார் அமைச்சர் எம்.சி.சம்பத். அதாவது மாட்டிறைச்சி பிரச்சனையில் "அந்த உத்தரவை இன்னும் படிக்கவில்லை" என்று முதல்வர் எடப்பாடி சொன்னாரே அதேபோல்! அதோடு "நீட்-விலக்கு மசோதா ஏற்கனவே ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று யாருக்குமே தெரியாததை வேறு சொல்கிறார் சம்பத்.

சமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் நேர் எதிரான நீட்டை தடுக்காமல் இருந்துவிட்டு, இவ்விதம் சௌக்களித்த பேச்சைப் பேசுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலல்லாமல் வேறென்ன? இது, குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியும் பறித்த கதையும்தான்.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஜூன் 12ந் தேதியில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. அதனால் காவிரி பாசனப் பகுதி குறுவை, சம்பா, தாளடி என எந்த சாகுபடிக்கும் வழியின்றி பாலையாய்க் காட்சியளிக்கிறது.

இதை மறைக்கவே இன்று அமைச்சரவைக் கூட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர். குறுவை சாகுபடி சிறப்பு நிதியுதவியாக ரூ.56.92 கோடியை அறிவித்து இந்தக் கூட்டத்தைக் கூட்டுகிறார்.

கூடவே "ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கு திட்டம்" என ஒன்றைச் சொல்கிறார் அமைச்சர் தங்கமணி.

அறிவித்தும் அறிவிக்கப்படாமலும் மின்வெட்டு அமலில் உள்ளது. மின்துறையே கடனிலும் ஊழலிலும் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கி என்ன என்பதுதான் கேள்வி. இதனாலெல்லாம் காவிரிப் பாசனப் பகுதி விவசாயப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

காவிரி பிரச்சனையில் நாற்பதாண்டு கால போராட்டத்திற்குப் பின் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி கைக்கெட்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை வாய்க்கெட்டாதபடி செய்தார் பிரதமர் மோடி. காவிரி மேலாண்மை வாரியத்தையே காலி பண்ண ஒற்றைத் தீர்ப்பாயம் என்பதாக ஒன்றை அமைக்க மசோதா தாக்கல் செய்கிறார்.போராடி இதைத் தடுக்காமல், மோடியின் பிடிக்குள் அடங்கிய பிள்ளையார் ஆகிப் போனார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

இப்படி தமிழகத்தின் உரிமை, நலன்களைக் காவு கொடுத்துவிட்டு குறுவை சாகுபடிக்கு சிறப்பு நிதியுதவி, அமைச்சரவைக் கூட்டம் என்பதெல்லாம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல்! குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்த கதை.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அதிமுக ஆட்சியாளர்கள் இந்தத் தவறுகளை தெரிந்தே செய்கின்றனர் என்பதைத்தான்.

இந்த அரசைத் தாங்கிப் பிடிக்கும் எம்எல்ஏக்கள் கூவத்தூரில் கோடிகளால் குளிப்பாட்டப்பட்டனர் என்கிற கதை வேறு உலா வருகிறது. இதற்கெல்லாம் பணமில்லாமல் முடியுமா?

இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் தெரிந்தே தவறு செய்தால் அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆனால் இதனால் மக்கள் பணமே கொள்ளையடிக்கப்பட்டு, அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளான கல்வி, மற்றும் வேலைவாய்ப்பின்றி அவர்கள் வீழ்த்தப்படுகின்றனர் என்பதுதான் வரலாற்றுத் துயரம், துரோகம்.

மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TVK leader Velmurugan has blasted ADMK Amma MLAs and their leadership on the cash scandal
Please Wait while comments are loading...