சிப்பெட்டை டெல்லிக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேல்முருகன் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 48 ஆண்டுகளாக சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சிப்பெட்டை டெல்லிக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 48 ஆண்டுகளாக இயங்கி வரும் மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சிப்பெட்டை டெல்லிக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நடைபெறும் ஊழியர்களின் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையான ஆதரவைத் தருகிறது.

Velmurugan

1968-ல் சென்னையில் தொடங்கப்பட்ட சிப்பெட் கல்வி நிறுவனத்தில் பிளாஸ்டிக் தொழில் நுட்பம் சார்ந்த கல்வி வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள நிறுவனத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, அகமதாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், போபால், புவனேஸ்வர் உட்பட 24 இடங்களில் கிளை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி மையத்தின் அனுமதியோடும், அந்தந்த மாநிலங்களில் அரசுப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படியும் பொறியியல் பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களை சோதனை செய்யும் மையமாகவும், உற்பத்தி நிலையமாகவும் திகழ்கிறது சிப்பெட். மத்திய அரசை எதிர்பார்க்காமல் ரூ.375 கோடி இருப்பையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இப்படியான ஒரு சிறப்புமிக்க நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 1999-ம் ஆண்டும் இந்த நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தமிழக அரசு கடுமையாக எதிர்த்ததால் இம்முடிவு அப்போது கைவிடப்பட்டது.

கடந்த 2007-ம் ஆண்டில் இந்த நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக கூறி தனியாருக்கு பங்குகளை விற்பனை செய்யும் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. தற்போது மீண்டும் சிப்பெட்டை டெல்லிக்கு மாற்ற தற்போதைய மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. இம்முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகத்தை இழைக்கும் இந்திய மத்திய அரசு இப்போது மாணவர்களின் கல்வியிலும் கை வைப்பதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராடும் சிப்பெட் ஊழியர்கள்- மாணவர்கள் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது.

இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TVK leader Velmurugan condemned Central government to shift CIPET from Chennai to Delhi.
Please Wait while comments are loading...