எஸ்டேட்டைக் கைகழுவினால் போதும்!- பயணத்துக்குத் தயாராகும் நந்தி சாமியார் (எ) அதிபன் போஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி வனப்பகுதி- கொழுக்குமலையின் மறுபக்கம்- வீடியோ

  தேனி: முழுநேர நந்தி சாமியாராக வலம் வரும் முடிவில் இருக்கும் அதிபன் போஸுக்கு கொழுக்குமலை எஸ்டேட்டை நிர்வகிப்பது பெரும் கொடுமையாக உள்ளதால் அதை கைகழுவினால் போதும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

  இவ்வளவு நாள் கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது மனது மாறிவிட்டது. வாழ்க்கையில் என்னென்னமோ நடந்துவிட்டது. தலைவர்களைப் பார்ப்பதற்கே மனதுக்கு வேதனையாக இருக்கிறது' - திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை அருகில் வைத்துக் கொண்டு, வேதனையோடு இந்த வார்த்தைகளைக் கூறியவர் சிவகாசி தொழிலதிபர் சுபாஷ் சந்திரபோஸ்.

  திருமண நிகழ்ச்சி ஒன்றில்தான், தன்னுடைய குமுறலை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார். இவரது மகன்தான் அதிபன் போஸ். அமெரிக்காவில் ஆசிரமங்களைத் திறந்து அதிபன் செயல்படுவதும் முழுக்க ஆத்திகராகவே தான் மாறிவிட்டதைத்தான் அந்த மேடையில் குறிப்பிட்டிருந்தார் போஸ்.

   ஜெர்மன் இயந்திரங்கள்

  ஜெர்மன் இயந்திரங்கள்

  அய்யன் பட்டாசுகளை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. தொழில் வளர்ச்சி என்றால் என்னவென்றே அறியாத சிவகாசியை, சிறந்த தொழில்நகரமாக மாற்றிய பெருமை அய்ய நாடாரைச் சேரும். 1922-ம் ஆண்டு காலகட்டத்திலேயே கொல்கத்தா சென்று தீப்பெட்டித் தொழிலைக் கற்றுக் கொண்டு, ஊர் திரும்பியவர். அந்தக் காலத்திலேயே ஜெர்மன் இயந்திரங்களை வைத்துக் கொண்டு தொழில் நடத்தியவர். பட்டாசு, நூல், அச்சகம், கல்வி நிறுவனம் என அய்யன் கால் பதிக்காத துறைகளே இல்லை. அவரது வழிவந்த சுபாஷ் சந்திரபோஸ், தொடக்ககாலங்களில் பெரியாரிய கருத்துக்களை சுமந்து கொண்டு வலம் வந்தவர். பின்னர், காலஓட்டத்தில் சாய்பாபாவுக்கு சிவகாசியில் கோவில் கட்டிய பெருமை இந்தக் குடும்பத்துக்கு வந்து சேர்ந்தது.

   ஆன்மிக பயணம்

  ஆன்மிக பயணம்

  இதேவழியிலேயே, ஆன்மிக பயணத்தைத் தேர்வு செய்தார் அதிபன் போஸ். அய்ய ஜமீன் என்று அழைக்கப்பட்ட இந்தக் குடும்பத்தின் சொத்தாக கொழுக்கு மலை எஸ்டேட் இருக்கிறது. கனிமொழியுடனான மணவாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு, சில காலம் அமைதியாக இருந்தார். அதன்பிறகு, திடீரென கலிபோர்னியாவுக்குப் பயணப்பட்டார். இதைப் பற்றிக் கேட்டபோது, ' எனக்கு ஞானம் கொடுத்தவர்கள், அமெரிக்கா போகச் சொன்னார்கள். உன் எதிர்காலத்துக்கு ஏற்ற பெண் அங்கு இருக்கிறாள் என்றார்கள். அதனை ஏற்று அமெரிக்கா சென்றேன். நான்கு குழந்தைகளும் பிறந்துவிட்டன. என்னுடைய ஞான வாழ்க்கைக்குப் பக்கபலமாக அந்தப் பெண் இருக்கிறார்' என சிலாகித்தார் அதிபன் போஸ்.

   பணம் , வாழ்க்கை

  பணம் , வாழ்க்கை

  அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது, தன்னை நந்தி சாமியாராக வெளிக்காட்டிக் கொண்டார். தன்னுடைய சித்தர் அனுபவங்களையெல்லாம் பாட்டாகவே பாடி சி.டி ஒன்றையும் வெளியிட்டார். ' பணம், வாழ்க்கை, சுகம் என்று வந்தபிறகு சிறு வயதுக் கனவுகளை எல்லாம் அடியோடு மறந்துவிட்டேன். சிறு வயதுக் கனவுகளை அடைவதற்கு சித்தர் வாழ்க்கை முறை பெரிதும் உதவியாக இருந்தது. ஞானத்தைத் தேடி மலைகளில் அலைந்தேன். சித்தர்களின் உதவியால், நந்தி சாமியாராக அவதாரம் எடுத்தேன்' என அதிபன் போஸ் பேசப் பேச, ' பெரியார் கொள்கைளை சுமந்தவரின் மகனா இவர்?' என ஆச்சரியப்பட்டனர் சொந்த சமூகத்து மக்கள். தொடக்ககாலத்தில் அதிபன் போஸின் ஆன்மிகப் பயணத்துக்கு கொழுக்கு மலை எஸ்டேட், பெரிதும் உதவியாக இருக்கிறது.

   ஆங்கிலேயர் காலத்து தேயிலைகள்

  ஆங்கிலேயர் காலத்து தேயிலைகள்

  கொழுக்கு மலை எஸ்டேட் இணையத்தளத்தின் ஹோம் பேஜ்ஜில் சொல்வதுபோல, மேஜிக்கல் சன் ரைஸ், உலகின் மிகச் சுத்தமான தேநீர், ஆங்கிலேயேர் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலைச் செடிகள், இயற்கை எழில்சூழ்ந்த வனப்பகுதி என மனதுக்கு இதமான சூழலை அனுபவித்து வந்தார் அதிபன். ' வறுமையால் வாடுபவர்களின் கஷ்டத்தைப் போக்க வேண்டும். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். சாமியார் நிலையில் என்னைப் பார்த்த என் குடும்பத்தார் பதறிப் போய்விட்டார்கள். ' காவி உடையையும் ஜடா முடியையும் கழட்டு' என வேண்டிக் கொண்டதால், இயல்பு நிலைக்குத் திரும்பினேன். தங்கை திருமணத்துக்காக வந்தபோதுதான், இதெல்லாம் நடந்தது' என தன்னை சந்திக்க வருபவர்களிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

   நிர்வாக பொறுப்பு

  நிர்வாக பொறுப்பு

  கொழுக்கு மலை டீ எஸ்டேட்டின் நிர்வாகப் பொறுப்புக்கு பலர் வந்து சென்றாலும், அதன் கண்ட்ரோல் முழுக்க அதிபன் போஸின் குடும்பத்தாரிடமே இருக்கிறது. கொழுக்கு மலை எஸ்டேட்டுக்குச் செல்லும் முக்கிய நபர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருகிறார் நந்தி சாமியார். அந்தநேரத்தில் நடக்கும் விவாதங்களின்போது, தன்னுடைய ஆன்மிகப் பணியைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அரசியல் கட்சிப் பிரமுகராக இருந்தாலும் பெரும் செல்வந்தராக இருந்தாலும் அனைவரையும் ஒரே தட்டில் வைத்துத்தான் பழகுகிறார். அமெரிக்காவில் தன்னுடைய சீடர்களுடன் அவ்வப்போது இணைய வெளியின் உதவியோடு விவாதிக்கிறார். அடுத்தகட்ட ஆன்மிகப் பயணங்கள் குறித்தெல்லாம் தீவிரமாக ஆலோசிக்கிறார். ' எஸ்டேட்டை நிர்வகிப்பதை மிகுந்த சுமையாகப் பார்க்கிறார் அதிபன். முன்பெல்லாம் ஆர்வமாக எஸ்டேட்டை வலம் வந்து கொண்டிருப்பார். இப்போதெல்லாம், கணக்கு வழக்குகளைக் கையாள்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. ' நல்ல விலைக்கு யாராவது கேட்டால் சொல்லுங்கள்' என அவரே கூறியிருக்கிறார். இப்போதுள்ள நிலையில், 600 கோடி ரூபாயைத் தாண்டும் அந்த எஸ்டேட்டை வாங்குவதற்கு யாரும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

   ஈகோ சுற்றுலா

  ஈகோ சுற்றுலா

  எஸ்டேட்டைக் கை கழுவும் முடிவுக்கும் ஒரு காரணம் சொல்கின்றனர், முதுவார் பகுதியைச் சேர்ந்த பழங்குடிகள். " தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் வி.ஐ.பிக்கள் மட்டுமல்லாமல், சென்னையில் இருந்து வரக் கூடிய வி.ஐ.பிக்களின் கொண்டாட்டத்துக்கு குரங்கணியைப் பயன்படுத்துகின்றனர். நள்ளிரவில் காட்டுக்குள் சென்று பெரும் சத்தத்தோடு பாடுகின்றனர். குடி, அழகிகள் என ஒருமாதிரியான உலகத்தை அரங்கேற்றுகின்றனர். இதனை எந்த வன அதிகாரியும் தட்டிக் கேட்பதில்லை. அடர்ந்த மரங்கள் இல்லாமல், புல்வெளிப்பரப்பு நீண்டிருப்பதால், இப்படியொரு சூழலில் அமர்ந்து கும்மாளம் அடிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். இதனால் எஸ்டேட் நிர்வாகத்துக்கும் சிரமம் ஏற்படுகிறது. குரங்கணியைப் பொறுத்தவரையில் வனவிலங்குகளின் தொல்லை பெரிய அளவில் இல்லை. மனிதர்களின் இகோ டூரிஸம்தான்(ECO TOURSISM) அவர்களை அச்சப்படுத்துகிறது. வனத்துக்குள் வருகிறவர்கள், உள்ளூர் பழங்குடிகளின் துணையோடு சென்றால் எந்தப் பிரச்னையும் இல்லை. தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பதற்கு எஸ்டேட் பணியாளர்கள்தான் திரண்டு வந்தனர். அவர்கள் வரவில்லையென்றால், உயிரிழப்பு இன்னும் அதிகரித்திருக்கும். இதற்காகவே, அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் கொழுக்கு மலை எஸ்டேட் நிர்வாகத்தைப் பாராட்டுகின்றனர்" என்கின்றனர்.

   கொடுமையாக உள்ள கொழுக்குமலை எஸ்டேட் நிர்வாகம்

  கொடுமையாக உள்ள கொழுக்குமலை எஸ்டேட் நிர்வாகம்

  எஸ்டேட்டைக் கைகழுவிவிட்டு முழுநேர நந்தி சாமியாராக வலம் வரும் முடிவில் இருக்கிறார் அதிபன் போஸ். இதுகுறித்து தன்னுடைய நண்பர்களிடம் பேசிய போஸ், ' தென்னாட்டுக்குப் பெருமை சேர்க்கும் திருவண்ணாமலையில் 20 ஆண்டுகளாக நான்கு சித்தர்கள் மௌனவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மக்களின் நன்மைக்காக அவர்கள் மௌனவிரதம் இருக்கின்றனர். எனக்காக அவர்கள் மௌனத்தைக் கலைத்துப் பேசினார்கள். எனக்கு ஞானம் வழங்கினார்கள். அந்தவகையில்தான் நந்தியாகப் பிறந்தேன்' என மனம் திறந்து பேசினார். இப்படிப்பட்ட எண்ண ஓட்டத்தில் இருக்கும் அதிபன் போஸுக்கு, கொழுக்கு மலை எஸ்டேட்டை நிர்வகிப்பது கொடுமையானதாகவே இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Athiban Bose wants to become Nandhi Samiyar, thats why he faces big challenge in administrating Kozhukkumalai Estate.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற