ஈராக்கில் இந்தியர்கள் மீட்பில் மத்திய அரசு மும்முரம்.. ஆப்கானில் சிக்கிய தமிழக பாதிரியார் கதி என்ன?
சென்னை: ஈராக்கில் சிக்கிய செவிலியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்டு வருவதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம்குமாரின் கதி என்ன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
ஈராக்கில் இந்தியர்கள் 39 பேர் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 46 செவிலியர்கள் சிக்கினர். மேலும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தத்தளித்தனர்.
ஆளும் ஈராக் அரசு இவர்களை மீட்கும் நடவடிக்கையில் உதவ முடியாமல் கையை விரித்தது. இதனால் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முன்னாள் அதிபர் சதாம் உசேனின் பாத் கட்சியினர் மற்றும் சன்னி முஸ்லிம் குழுக்கள் உதவியை நாடியது மத்திய அரசு. இந்த முயற்சியும் வெற்றிகரமாக கை கொடுக்க நாள்தோறும் இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆப்கானில் தமிழக பாதிரியார் கடத்தல்
ஆனால் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம்குமார் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை.

யார் பாதிரியார் பிரேம்குமார்?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாரியன்வயல் கிராமத்தை சேர்ந்த அந்தோணி, மரியதங்கத்தின் மூத்த மகன் அலெக்சிஸ் பிரேம்குமார்(வயது47). இயேசு சபையில் குருத்துவ பட்டம் பெற்று கொடைக்கானல் மலை கிராமங்களில் ஈழத் தமிழ் அகதிகளிடையே சேவை செய்துள்ளார்.

ஆப்கானில் பணி..
ஆப்கானிஸ்தானில் 2011ஆம் ஆண்டு முதல் அகதிகளாக இடம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்காக கல்விப் பணியாற்றி வந்தார் பிரேம்குமார். மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே கிராமம் ஒன்றில் இருந்து ஆயுததாரிகளால் ஜூன் 2ந் தேதி அவர் கடத்திச் செல்லப்பட்டார்.

கைது நடவடிக்கை..
அவர் கடத்தப்பட்டது தொடர்பாக சிலரையும் கைது செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்தது. அவரது இருப்பிடம் தெரிந்துவிட்டது என்றது மத்திய அரசு.

என்ன கதி?
ஆனால் ஈராக் விவகாரம் பெரிதான பின்னர் பாதிரியார் பிரேம்குமார் விவகாரமே மறந்து போன ஒன்றாகிவிட்டது. தற்போது அவர் எந்த நிலையில் இருக்கிறார்? அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இது அவரது குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈராக்கைப் போல துரித கதியில்..
ஈராக் விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட மத்திய அரசு ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியாரையும் மீட்க முனைப்பு காட்ட வேண்டும் என்பது பிரேம்குமாரின் குடும்பத்தினர் மட்டுமல்ல... தமிழகத்தின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.