2015 Vs 2023! வெள்ள நிவாரண நிதி ரூ 6 ஆயிரத்தை தமிழக அரசு வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்?
சென்னை: வெள்ள நிவாரண நிதியை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் தமிழக அரசு ரொக்கமாக கொடுப்பது ஏன் தெரியுமா?
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் 5 அடிக்கு மேல் தேங்கியது. பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேஙகியது.

இதனால் கார், இரு சக்கர வாகனங்கள், தட்டு முட்டு சாமான்கள், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கூலர்கள் , டிவி, பர்னிச்சர்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கிவிட்டன.
இதை பழுது பார்ப்பதற்கு நிறைய தொகை செலவாகும். அதற்கு பதிலாக புதிய பொருளை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு மக்களுக்கு வருமானமும் இல்லை. ஒன்றா இரண்டா வாங்கிக் கொள்ள, கிட்டதட்ட புதிதாக குடி பெயரும் அளவுக்கு சேதாரங்களை மக்கள் சந்தித்து விட்டார்கள். இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்களுக்கு இன்சூரன்ஸ் கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. அதில் ரூ 6 ஆயிரம் நிவாரணத்தை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. மழை சேதத்திற்கான ஆதாரங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது அப்போதைய அதிமுக அரசு வெள்ள நிவாரணமாக ரூ 5000 வழங்கியது. இதை அந்தந்த பயனாளியின் வங்கிக் கணக்கில் வழங்கியது. அது போல் இந்த 2023 பெருவெள்ளத்தில் வங்கிக் கணக்கில் நிவாரணத்தை வழங்காமல் ரொக்கமாக வழங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கனமழைக்கு பிறகு சென்னை, புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை. ரேஷன் அட்டைதாரர்களில் பலர் வங்கிக் கணக்கை பராமரிக்கவில்லை. பலருக்கு வங்கிக் கணக்கு இல்லை. எனவே தான் நிவாரணத் தொகை ரூ 6 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் சென்னையில் வசித்து பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ 6 ஆயிரத்தை வழங்க அரசு பரிசீலனை செய்கிறது. ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ 6 ஆயிரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
அதற்கான ஆதாரங்களுடன் அவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து விரிவான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வங்கிக் கணக்கை பராமரிக்காமல் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தால், நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்படும் நிலையில் அதன் ஒரு பகுதி வங்கிக்கு சென்றுவிடும்.
வங்கிக் கடன்களை செலுத்தாமல் விட்டிருந்தாலும் நிவாரணத் தொகைகளை போட்டவுடனேயே வங்கிகள் எடுத்துக் கொள்ளும். இதனால் அந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேராது. இதனால் ரூ 6 ஆயிரத்தை கையில் கொடுத்துவிடுவது சிறந்த வழி என பொதுமக்களும் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications