தமிழகத்தின் கண்ணூராக மாறிக் கொண்டிருக்கிறதா கோவை மாநகரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

- ஆர். மணி

சனிக் கிழமை ஜூன் 16ம் தேதி கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. சனிக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதிர்ஷ்ட வசமாக எவரும் காயப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கார் டிரைவர் ஆனந்தன் நடை பயிற்சிக்காக சென்று விட்டு அப்போதுதான் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப் படைகளை கோவை மாநகர போலீஸ் அமைத்திருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு ஹித்துத்வா அமைப்புகள்தான் காரணம் என்று நேரடியாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ் சாட்டுகிறது. ''எங்களுடைய கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் தாக்குவதில் ஹிந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதிலும் ஈடுபட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு டில்லியில் எங்களுடைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கினர். ஆகவே நாடு முழவதிலும் எங்களுடைய தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் எங்களது கட்சி அலுவலகங்களை ஹிந்துத்துவா அமைப்புகள் தாக்குவதன் ஒரு பகுதியாகவே இதை நாங்கள் பார்க்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான எங்களுடைய போராட்டம் இதன் மூலமாக வெல்லாம் குறைந்து போகாது. நாங்கள் இன்னும் வேகத்துடன் எங்களது போராட்டத்தை தொடருவோம்''என்று தன்னுடைய அறிக்கையில் கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலை தமிழகத்தில் பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் கண்டித்திருக்கின்றன.

Will Kovai become another Kannur?

தமிழ் நாட்டில் கோவை மாவட்டத்தில்தான் பாஜக அதிக செல்வாக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் பிப்ரவரி 14, 1998 ல் கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு ஹிந்துத்துவா மற்றும் பாஜக வின் செல்வாக்கு கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நன்றாகவே விரிவடைந்துள்ளது. 1999 ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வின் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது பாஜக மற்றும் ஹிந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு நன்றாகவே உரம் பாய்ச்சியிருக்கிறது என்று சொல்லலாம். கன்னியாகுமரியில் பாஜக ஓரளவுக்கு வலிமை பெற்ற அமைப்பாக இருந்தாலும் கோவையில் பாஜக வின் சக்தி என்பது வித்தியாசமானதாகவே பார்க்கப்படுகிறது.

''தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்த மாவட்டம் கோவை மாவட்டம். ஆகவே இங்கு பாஜக வின் வளர்ச்சி என்பது அக் கட்சியை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் இதனது தாக்கம் படிப்படியாக கிராமப் புறங்களுக்கும் விரிந்து பரவும். அதுவும் பாஜக வின் அகில இந்திய தலைவர் அமீத் ஷா போன்ற கள அரசியலின் நாடித் துடிப்பை அறிந்தவர்களுக்கு, ஓரளவுக்கு பாஜக ஒரு மாநிலத்தில் செல்வாக்கு பெற்று விட்டாலே அதனை மேலே எப்படி கொண்டு செல்ல முடியும் என்பது நன்கு அறிந்த கலையாகும்''என்கிறார் டில்லியில் பாஜக தலைவர்களுக்கு நன்கு பரிச்சயமான மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

கிட்டத்தட்ட ஓராண்டாகவே கோவையில் பாஜகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மோதல் நாளோர் மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஹிந்து முன்னணி பிரமுகர் சி. சசிகுமார் கடந்தாண்டு கொல்லப்பட்டதிலிருந்து இவ்விரண்டு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுப்பெற்றது. அதுவும் கொல்லப்பட்ட சசிகுமாரின் உடல் 14 கிலோ மீட்டர்கள் ஊர்வலமாக சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது பலரது புருவங்களையும் உயர்த்தியது. காரணம் இது போன்ற படு கொலைகளில், அதாவது அரசியல் படுகொலைகளில் இறந்தவரின் இறுதி ஊர்வலங்கள் மிகவும் சொற்பமான தூரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

''இந்த விஷயத்தில் காவல் துறை சசிகுமாரின் சடலத்தை 14 கிலோ மீட்டர்கள் எடுத்துச் செல்ல அனுமதித்தது தவறான முன்னுதாரணமாக அமைந்து விட்டது. மெள்ள மெள்ள காவல்துறை காவிக் கட்சிக்கு ஆதரவாக கோவையில் செயற்படத் தொடங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது'' என்கிறார் பெயர் கூற விரும்பாத, ஓய்வு பெற்ற, கோவை நிலவரங்களை நன்றாக அறிந்த போலீஸ் ஐஜி ஒருவர். ''உளவுத் துறை சென்னையிலிருந்து கோவை போலிஸூக்கு இந்த கொந்தளிப்பான நிலை பற்றி. சசிகுமாரின் மரணத்திற்கு சில வாரங்கள் முன்பே எச்சரித்தும் போலீஸ் கோட்டை விட்டது என்பது வருந்ததக்கது. மிக அபாயகரமான பின் விளைவுகளுக்கு இது அச்சாரம் போட்டு விட்டது''என்று மேலும் கூறுகிறார் ஓய்வு பெற்ற அந்த அதிகாரி.

தற்போது விவரம் அறிந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் நிலவும் ஒரே கவலை, கேரளாவின் கண்ணூர் போல கோவை மாவட்டம் மாறி விடக் கூடாது என்பதுதான். வட கேரளாவின் முக்கியமான மாவட்டம் கண்ணூர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த மாவட்டத்திலிருந்துதான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். கடந்த 2000 ம் ஆண்டிலிருந்து இன்று வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக வுக்கும் இடையிலான அரசியல் மோதலில் பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த 31 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30 பேரும் கொல்லப் பட்டிருக்கின்றனர். 2016 ல் பினராயி விஜயன் அரசு அமைந்த பிறகு இந்தப் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இதில் பாஜக வுக்குத் தான் சேதாரம் அதிகம். ஒரு கட்டத்தில் இந்தப் படுகொலைகளை தடுத்த நிறுத்த, வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற பாஜக ஒரு பெரிய குழுவுடன் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட்டது. இந்த தூதுக் குழுவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரே இடம் பெற்றது நிலைமை எந்தளவுக்கு பாஜகவுக்கு கண்ணூரில் நிலவுகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்தளவுக்கு கோவையில் நிலைமை சீரழியவில்லை. ஆனால் அந்த நிலைமைக்கு விவகாரம் போகாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல்வாதிகளும், உளவுத் துறையினரும்.

''மத்தியில் மோடி அரசு வந்த பிறகு பாஜக தன்னுடைய செல்வாக்கை நிருபிக்க எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் வெறும் 2 சத விகித வாக்குகளை கொண்டுள்ள பாஜக தமிழ் நாட்டின் ஒவ்வோர் அரசியல் நிகழ்வுகளிலும் முன்னணியில் நின்று போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறது.

வையில் கூட மோடி அரசு வருவதற்கு முன்பு அரசியல் செய்த பாஜக வுக்கும், தற்போது அவர்கள் செய்து வரும் அரசியலுக்கும் பெருத்த வேறுபாடு காணப்படுகிறது. குறிப்பாக காவல் துறையில் பாஜக வின் செல்வாக்கு, தலையீடு போன்றவை மிக அளவில் அதிகரித்திருக்கின்றன. ஆனால் கண்ணூர் அளவுக்கு நிலைமை போகாததும், கண்ணூர் அளவுக்கு பொதுவான அரசியல் களம் இன்னமும் சூடாகாமல் இருப்பதும் தற்போதைக்கு நாம் மகிழ்ச்சி கொள்ளக் கூடிய செய்திகள் தான். ஆனால் இப்படியே நிலைமை இருந்து விடாது என்பதை மனதில் வைத்து ஆட்சியாளர்கள் தகுந்த முன்னெச்சரிகை நடவடிக்கைகளை இப்போதே எடுப்பது தான், எதிர்காலத்தில் தமிழக அரசுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அத்தகைய நடவடிக்கை எதுவும் அரசு தரப்பிலிருந்து தற்போது வரையில் இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை''என்கிறார் கோவை உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர்.

கோவையில் சிறுபான்மை இன மக்கள் அதிகம் வசிப்பதும் நிலைமையை மேலும் மோசடைய செய்து கொண்டிருக்கிறது. கன்னுரில் இல்லாத ஒரு தனித்துவ மான யதார்த்தம் கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பது. ஒரு சிறு பொறி நெருப்பு கூட பெருங் கலவரங்களுக்கு, அதாவது பன்முகத் தன்மை கொண்ட கலவரங்களுக்கு வழி வகுக்கலாம். இப்போதே எடப்பாடி பழனிசாமி அரசு விழித்துக் கொள்ளுவது தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் மிகவும் நல்லது. ஆனால் 24 மணி நேரமும் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுவதிலேயே கவனமாக இருந்து வரும் தற்போதய தமிழக முதலமைச்சருக்கு இதற்கெல்லாம் ஏது நேரம் இருக்கப் போகிறது!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Coimbatore is becoming like Kerala 's Kannur fastly and people are much worried over the clashes there.
Please Wait while comments are loading...