For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம்: ராமேஸ்வரம் கட்காரி பேச்சு

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப் படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம், தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம் எனலாம். இத்திட்டம் நிறைவேறினால் இலங்கையைச் சுற்ற வேண்டிய அவசியம் இல்லாமல், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறைவதுடன், 30 மணி நேர பயணமும் குறையும்.

Won't touch Ram Sethu, will find viable alternative: Nitin Gadkari

ஆனால் இந்த திட்டப்பணிகளால் ராமேசுவரத்துக்கும், மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என கருத்து எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நிதின்கட்காரி உறுதி...

இதற்கிடையே மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசின் தரைவழி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ‘சேது சமுத்திர திட்டம் ராமர் சேது பாலத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மாற்றுவழியில் நிறைவேற்றப்படும்' என நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

நேரில் ஆய்வு...

இந்நிலையில், நேற்று கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் ராமேஸ்வரம் வந்த நிதின் கட்காரி, அதில் இருந்தபடியே இந்திய- இலங்கை கடல் எல்லை, தனுஷ்கோடி பகுதி, ராமர் பாலம், சேது சமுத்திர திட்ட வழித்தடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது அவருடன் மத்திய கனரக தொழில்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கடலோர காவல்படை கமாண்டர்கள், சேது சமுத்திர திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

வரவேற்பு...

அதன் பின்னர் உச்சிப்புளி கடலோர காவல்படை விமான நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ராமர் பால பாதுகாப்பு இயக்கத் தலைவர் குப்புராமு மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் வரவேற்றனர்.

சமய உணர்வுகளை புண் படுத்தாத வகையில்...

அதனைத் தொடர்ந்து கார் மூலம் மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை நிலையத்துக்கு வந்த நிதின் கட்காரி, அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட இந்த திட்டத்தை, இன்றைய மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்போடு மக்களின் சமய உணர்வுகளை புண்படுத்தாத வகையில் செயல்படுத்த முன்வந்துள்ளது.

பரிசீலனை...

இந்த திட்டத்தை நிறைவேற்றும்போது, ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் செலவு உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 4, 5 யோசனைகள் பரிசீலனையில் உள்ளன.

திட்டத்தின் நோக்கம்...

இந்தியா 3 ஆயிரத்து 554 கடல் மைல் தூரத்துக்கு கடற்கரையை கொண்டு பல்வேறு நாடுகளோடு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இந்திய கடல் வாணிபம் கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையேயும் நெடுங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் கிழக்கு, மேற்கு கரைகளை இணைத்து கப்பல் போக்குவரத்து பாதை அமையப்படாத நிலையே இருந்து வருகிறது.

கடல்வழிப் பாதையை குறைக்கும்...

இந்த நிலையில் மேற்கு கரையோரங்களில் இருந்தும், மேற்கத்திய நாடுகளில் இருந்தும் கிழக்கு கரையோர துறைமுகங்களுக்கு வரவேண்டிய கப்பல்கள் இலங்கையை சுற்றி நீண்ட பாதையை கடக்க வேண்டியுள்ளது. கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையேயான கடல்வழி பாதையை குறைக்கும் நோக்கத்தோடும், இந்த பாதை இந்திய கடல் எல்லைக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் கடந்த காலங்களில் ஏராளமான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

கடல் சார் வாணிபம் வளரும்...

சுதந்திர காலத்துக்கு முன்னரே 1860-ல் தொடங்கி 1922-ம் ஆண்டு வரையில் சுமார் 9 திட்டங்கள் உருவாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் ராமேசுவரம் தீவை ஒட்டி மன்னார் வளைகுடாவையும், பாக் ஜலசந்தியையும் இணைக்கும் வகையில் கடல் வழியில் கப்பல் போக்குவரத்துக்கு உகந்ததாக ஒரு வாய்க்கால் அமைப்பது என்பது தான்.

விரைவான கடல்வழிப் போக்குவரத்து...

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்திய கடற்கரை முழுவதும் இந்திய எல்லைக்கு உட்பட்டு கப்பல் போக்குவரத்து பாதை அமையும். முக்கியமாக கிழக்கு, மேற்கு கரைகளுக்கு இடையே விரைவான கடல்வழி போக்குவரத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். மேலும் விரைவான மற்றும் கூடுதலான கப்பல் போக்குவரத்தின் மூலம் அபரிமிதமான கடல்சார் வணிகம் வளர்ச்சியடையும்.

பல்வேறுபயன்பாடுகள்...

தொடக்கத்தில் தற்போது இருக்கும் ரயில் பாதையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி பாம்பன் வழியையும் முறைப்படுத்தி 30,000 டன் எடையை சுமந்து செல்லும் கப்பல்களுக்கு வழி அமைக்கப்படும்.

மாற்றங்கள்...

காலப்போக்கில் இதே பாதையில் பெரிய கப்பல்களும் செல்லும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடம், சுமார் 3,000 கப்பல்கள், ஏராளமான சிறிய கப்பல்கள், ராணுவ கப்பல்கள் மற்றும் கப்பல் இழுவைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு உதவிடும்.

பாம்பன் வழியில்...

இந்த திட்டம் நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார மேம்பாட்டுக்கு உதவக்கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான பாம்பன் வழியில் அமைக்கக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை இந்த அரசு முனைந்து செயல்படுத்தும்.

வேலைவாய்ப்பு...

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழகத்தின் தென்மாவட்டங்களும், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டமும் பெருமளவில் பொருளாதார நன்மைகளை அடைவதோடு ஏராளமான வேலை வாய்ப்பையும் பெறும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Union Surface Transport and Shipping Minister Nitin Gadkari on Tuesday said there was no question of demolishing the Ram Sethu while implementing the Sethusamudram Shipping Channel Project and asserted it would be done without harming the environment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X