• search

12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா?

By Bbc Tamil
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  உலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

  பிரக்ஞானந்தா
  RameshBabu/BBC
  பிரக்ஞானந்தா

  கோடி பேர் புழங்கும் சென்னையில் இருந்து சென்று, இத்தாலி நாட்டில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாயகமாக இருக்கும் ஊர்டிஜெய் எனும் சிறு ஊரில் நடந்த நான்காவது க்ரெடின் ஓபன் 2018 தொடரில், இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

  க்ரெடின் ஓப்பனில் 16 வயது இரான் வீரர் கொலாமி ஆர்யனை அபாரமாக வென்ற பின்னர் எட்டாவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் மோரொனி லூகாவை வென்றார். இதன் மூலம் ஒன்பதாவது சுற்றில் 2482 ரேட்டிங் மேல் வைத்துள்ள வீரரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மூன்றாவது முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து தகுதி பெற்றார்.

  நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான முகத்தோற்றமும் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சிறுவன் பிரக்ஞானந்தா.

  கடந்த சனிக்கிழமை உலகிலேயே இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார். பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டர் ஆனது உலகிலேயே இருவர்தான். ஒருவர் பிரக்ஞானந்தா, மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கே கர்ஜாகின்.

  கடந்த 2002-ம் ஆண்டு தனது 12 வருடம் ஏழு மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று உலகின் மிகக் குறைந்த வயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார் செர்கே கர்ஜாகின். அவரது சாதனையை உடைக்க பிரக்ஞானந்தாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எனினும் முந்தைய தொடரில் கிடைத்த தோல்வியை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் இத்தாலி க்ரெடின் ஓபன் 2018 தொடரை எதிர்கொண்டதன் மூலம் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தையும் இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை வைத்திருந்த பரிமார்ஜன் நெகியின் சாதனையையையும் தகர்த்துள்ளார்.

  சென்னை சிறுவனின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை ரமேஷ்பாபு.

  நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரமேஷ்பாபு தமிழக அரசின் கூட்டுறவு வங்கியில் 23 வயதில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சென்னையிலுள்ள கொரட்டூரில் கூட்டுறவு வங்கி கிளையொன்றின் மேலாளராக பணிபுரிகிறார்.

  ரமேஷ்பாபு - நாகலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகள். இவர்களது பெண் வைஷாலியும் செஸ் போட்டியில் அசத்திக்கொண்டிருக்கிறார்.

  பிரக்ஞானந்தா
  RameshBabu/BBC
  பிரக்ஞானந்தா

  பிரக்ஞானந்தா செஸ் மேதையானதன் பின்னணி

  செஸ் விளையாட்டுக்கும் ரமேஷ்பாபுவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் எனும் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு.

  '' எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால் செஸ் விளையாட்டு போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். குடும்ப சூழ்நிலை பொருளாதார சூழ்நிலை எல்லாம் கருத்தில் கொண்டு எனது மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் நான்கு வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் போர்டில் நிறைய நேரத்தை செலவிட்டார் பிரக்ஞானந்தா.

  தன் வயது சிறுவர்களுடன் நேரத்தை செலவிடாமல் 64 கட்டங்களின் மேல் என் மகன் கொண்டிருந்த காதல் எனது எண்ணத்தை மாற்றியது'' என்கிறார் ரமேஷ் பாபு.

  வைஷாலிக்கும் பிரக்ஞானந்தாவுக்கும் சுமார் நான்கு வயது வித்தியாசம் இருக்கிறது. பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டின் அடிப்படையை தனது அக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார், சென்னை புறநகரான பாடியில் ஒரு சிறிய வீட்டில் மிடில் கிளாஸ் வாழ்க்கை நடத்தும் ரமேஷ் பாபு.

  '' போலியோவால் பாதிக்கப்பட்டதால் என்னால் பெரிய பயணங்கள் செல்ல முடியாது. எனது மனைவி நாகலட்சுமிதான் அயல்நாடுகளுக்கு எனது பிள்ளைகளை அழைத்துச் செல்வார். செஸ் விளையாட்டில் இருவரும் உள்ளூரில் நன்றாக விளையாடியதால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அங்கேயும் வெற்றியை குவித்து இந்திய அரசின் உதவி மற்றும் செஸ் அகாடமியின் ஏற்பாடுகளில் ஆசிய அளவிலான செஸ் டோர்னமெண்ட் விளையாட்டில் பங்கேற்றனர்.

  எனது மகன் தனது திறமையிலேயே நிதி உதவியோடு அயல்நாடுகளில் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றாலும் மகனுடன் உடன் செல்லும் எனது மனைவியின் பயண செலவுகள் உள்ளிட்டவற்றை நான் பார்த்துக்கொண்டேன். தொடக்க காலகட்டங்களில் பொருளாதார ரீதியாக சிரமமாக இருந்தாலும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் கடன் பெற்று சமாளித்தோம். பிள்ளையின் கனவுகளுக்கு அவை ஓர் தடையாக இருக்கக்கூடாது என எண்ணினேன்'' என விவரிக்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை.

  பிரக்ஞானந்தா
  RameshBabu/BBC
  பிரக்ஞானந்தா

  சென்னை புறநகரில் நான்கு அறை கொண்ட ரமேஷ் பாபுவின் வீட்டில் அதிகம் இருக்கும் பொருள் கோப்பைகளே. பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்ற கோப்பைகள். இதில் 2015 டிசம்பர் சென்னை வெள்ளத்தில் சில கோப்பைகளை பறிகொடுத்துவிட்டதாக ரமேஷ்பாபு தந்தை கூறுகிறார்.

  எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2013 மற்றும் 2015 வருடங்களில் பிரக்ஞானந்தா சாம்பியன் டைட்டில் வென்றிருந்தார்.

  இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே பிரக்ஞானந்தா இந்திய நாளிதழ்களில் விளையாட்டுப் பக்கங்களில் பெரிய அளவில் இடம்பிடித்துவிட்டார். ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியவர் கடந்த 2016-ம் ஆண்டு உலகின் யங் இன்டர்னேஷனல் மாஸ்டர் (ஐ எம்) எனும் சிறப்பைப் பெற்றார்.

  ஹங்கேரியைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை ஜூடிட் போல்கரின் 27 ஆண்டுகால சாதனையான உலகின் யங் ஐஎம் எனும் சாதனையை உடைத்த பின்னர், தற்போதைய முன்னணி செஸ் வீரர் செர்கே கர்ஜாக்கினின் உலகின் யங் கிராண்ட் மாஸ்டர் சாதனையை நெருங்கி வரலாற்று சாதனை படைக்கத் தவறிவிட்டாலும் தொடர் முயற்சியால் இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறார் இந்தச் சென்னை பையன்.

  யங் இன்டர்நெஷனல் மாஸ்டர் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார்?

  பிரக்ஞானந்தாவுக்கு செஸ் போட்டியின் நுணுக்கங்களை கற்றுத்தந்தவர் இந்திய செஸ் அணியின் பயிற்சியாளரும் கிராண்ட்மாஸ்டருமான ஆர்.பி ரமேஷ்.

  ''யங் இன்டர்நெஷனல் மாஸ்டர் பட்டம் வென்றதற்கு பிறகு மூன்று தொடர்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தகுதியை அடைய வேண்டும் என்பது பிரக்ஞானந்தாவின் இலக்காக இருந்தது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் எனில் சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட ரேட்டிங் மற்றும் மூன்று வெவ்வேறு தொடர்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான தகுதியை அடைந்து சான்றிதழ் பெற வேண்டும்.''

  ''கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் நடந்த உலக ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்து சான்றிதழ் வென்றார். இரண்டாவதாக ஏப்ரல் 2018-ல் ஹெர்க்லியோன் பிஷர் நினைவு கிராண்ட்மாஸ்டர் நார்ம் டோர்னமென்ட்டில் இறுதி ரவுண்ட் ராபின் போட்டியில் வென்றதன் மூலம் இரண்டாவது முறையாக கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை பூர்த்தி செய்தார். மூன்றாவது முறையாக கிரெடின் ஓப்பனில் கிராண்ட் மாஸ்டருக்கான விதிகளை பூர்த்தி செய்துள்ளார்.

  பிரக்ஞானந்தா
  RameshBabu/BBC
  பிரக்ஞானந்தா

  மேலும் FIDE ரேட்டிங்கும் 2500க்கு மேல் வைத்துள்ளார். இதனால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் சாத்தியமாகியுள்ளது'' என்கிறார் பயிற்சியாளர் ரமேஷ்.

  பிரக்ஞானந்தாவின் பிரதான யுக்தி குறித்து கேட்டபோது ''கிரிக்கெட்டை போலவே செஸ் ஆட்டத்தில் ஓபனிங் , மிடில், இறுதிப் பகுதி முக்கியமானவை. பிரக்ஞானந்தாவின் யுத்தியை பொறுத்தவரையில் நடு மற்றும் இறுதிப் பகுதியில் அவர் வலுவானவர். தொடக்கத்தில் சமாளித்துவிட்டால் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் அவர் அசத்தலாக விளையாடுவார். அதுதான் இத்தொடர்களில் நடந்துள்ளது'' எனக் கூறுகிறார் ரமேஷ்.

  https://twitter.com/vishy64theking/status/1010715361459691520

  கிராண்ட் மாஸ்டர் பட்டத்தால் என்ன கிடைக்கும்?

  '' செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது முனைவர் பட்டம் பெறுவது போன்றது. மிகவும் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எளிதில் சாத்தியமல்ல. கடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனுடன் விளையாடிய செர்கே கர்ஜாக்கின் தான் உலகின் யங் கிராண்ட் மாஸ்டர்.

  கார்ல்சனும் 13 வருடம் 4 மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் ஆனவராவர். ஆகவே தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு செஸ் உலக அரங்கில் பெருமை தேடித்தரும் வீரராக உருவாக பிரக்ஞானந்தாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது''.

  ''செஸ் தொடர்களை பொறுத்தவரையில் திறந்த வகை, மூடிய வகை என இரு பிரிவு டோர்னமெண்ட் உண்டு. ஓபன் செஸ் டோர்னமென்ட்டில் உலக செஸ் கூட்டமைப்பில் இருக்கும் வீரர்களில் யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விளையாடலாம். ஆனால் குளோஸ்டு டோர்னமென்ட் எனச் சொல்லப்படும் தொடர்களில் குறிப்பிட்ட ரேட்டிங் பெற்ற சில வீரர்களை மட்டுமே அழைத்து போட்டி போடச் செய்வார்கள்.

  கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதால் பிரக்ஞானந்தாவுடன் விளையாடுவதற்கு உலகின் பல வீரர்களும் போட்டி போடுவார்கள். இதனால் உலகின் முன்னணி வீரராக உருவாக பிரக்ஞானந்தாவுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையக்கூடும்'' என விவரித்தார் ரமேஷ்.

  பிரக்ஞானந்தா
  Praggnanandhaa R./ Facebook
  பிரக்ஞானந்தா

  பிரஞ்ஞானந்தா மற்றும் வைஷாலி இருவரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது அவர்களது தாய் நாகலட்சுமி. '' உடல் உபாதைகளையும் தாங்கி உணவு, வெப்ப நிலை வேறுபாடுகளை பொறுத்துக் கொண்டு தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளுக்கு செஸ் டோர்னமென்ட்டுக்கு தனது பிள்ளைகளை அழைத்துச் சென்றுவருகிறார்'' எனக் குறிப்பிடுகிறார் பிரஞ்ஞானந்தாவின் தந்தை.

  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்பதாவது சுற்றில் நெதர்லாந்தைச் சேந்த 28 வயது ப்ருய்ஜர்ஸ் ரொலாண்டையும் வீழ்த்தியுள்ளார் பிரஞ்ஞானந்தா. இத்தாலியில் இதே க்ரெடின் ஓப்பனில் இரண்டாவது முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துவிட்டார் பிரஞ்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி. மூன்றாவது முறையாக தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

  இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகியிருக்கும் பிரக்ஞானந்தா, செஸ் களத்தில் அக்காவை வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சிறு வயதில் விளையாடத் துவங்கினார். ''இப்போது அவரது குறிக்கோள் உலகின் செஸ் சாம்பியன்ஷிப். அது மிகப்பெரிய இலக்கு'' என்கிறார் ரமேஷ் பாபு.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  உலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X