உதவி பேராசிரியையை கத்தியால் குத்தி 6 பவுன் சங்கிலி கொள்ளை- வாலிபர் கைது
ராணிப்பேட்டை: ராணிபேட்டையில் கல்லூரி பேராசிரியை ஒருவர் நகைக்காக கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை, சிப்காட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் வசிப்பவர் குணசேகர். இவர் எல்.ஐ.சியில் பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி புவனேஸ்வரி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
நேற்று மாலை புவனேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு அந்நிய வாலிபர் அங்கு வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்ற புவனேஸ்வரியை தன்னிடம் இருந்த கத்தியால் குத்திவிட்டு அவருடைய 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார் அவ்வாலிபர்.
இதனால் அதிர்ச்சியும், காயமும் அடைந்த புவனேஸ்வரி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தப்பி ஓடிய வாலிபரை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் கீழ் விசாரத்தை சேர்ந்த நாகூர்மீரான் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்தில் காயமடைந்த பேராசிரியை புவனேஸ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.