அரசியல் தலையீடு இல்லை.. உண்மை குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்- 3 மணி நேர விசாரணைக்கு பின் ரவீந்திரநாத்
தேனி : சிறுத்தை இறப்பு வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. வன விலங்குகள் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளரை விசாரிப்பது வழக்கம். அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு ஆஜர் ஆனேன். உரிய விசாரணை நடத்தி உன்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
தேனி எம்.பி ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை இறந்தது தொடர்பான வழக்கில் நேற்று அவர் வனத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், வனத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். மீண்டும் விசாரணைக்கு எப்போதும் அழைத்தாலும் ஆஜராக தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை உயிரிழப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் ஓபிஎஸ் மகனும் அதிமுக எம்.பியுமான ரவீந்திரநாத்தின் தோட்டம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த சோலார் வேலியில் சிக்கி சிறுத்தைப் புலி ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தது. இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த தோட்டத்தில் ஆடுகளுக்குத் தற்காலிகக் கிடை அமைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ரவீந்திரநாத்
இதனைத் தொடர்ந்து நில உரிமையாளரை விட்டுவிட்டு கிடை அமைத்தவரைக் கைது செய்வதா எனக் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் தோடர்பாக தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஓ.பி.ரவிந்திரநாத்தையும் கைது செய்யக்கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

நேரில் ஆஜரான எம்.பி
இதைத் தொடர்ந்து எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேனி வனத்துறை சம்மன் அனுப்பியது. ரவீந்திரநாத் எம்.பி சார்பில் அவரது வழக்கறிஞர்கள் நேரில் வந்து தேனி வனத்துறையினரிடம் விளக்கக் கடிதம் அளித்தனர். ஆனால், ரவீந்திரநாத் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை தேனி வன சரகர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி உள்ளிட்ட வனத்துறையினர் முன் ரவீந்திரநாத் ஆஜரானார்.

3 மணி நேரம் - வீடியோவாக பதிவு
சுமார் 3 நேரம் விசாரணை நடத்தப்பட்டு எம்.பி ரவீந்திரநாத்தின் விளக்கம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் தனக்கு எதுவும் தெரியாது எனவும், தோட்டத்தை மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோர் தான் நிர்வகித்து வந்ததாகவும் கூறியதாக தெரிகிறது. அதேசமயம், ராஜவேல், தங்கவேல் ஆகியோர் நாங்கள் ஊழியர்கள்தான் மேலாளர்கள் இல்லை என ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் முரணாக உள்ளதால் சிறுத்தை பலி விவகாரம் சூடு பிடித்துள்ளது.

அரசியல் தலையீடு இல்லை
இந்நிலையில், விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரநாத், "வனத்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். தேவைப்படும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். சிறுத்தை இறப்பில் உள்ள சந்தேகத்தை வனத்துறை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை. வனவிலங்குகள் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரை அழைத்து விசாரிப்பது வழக்கம் தான். அதனடிப்படையில் தான் என்னை அழைத்து விசாரி்த்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
