Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் vs தங்கத்தமிழ்ச் செல்வன்.. தேனி மாவட்டத்தில் எப்படி இருக்கிறது தேர்தல் களம்? முழு ரவுண்ட்-அப்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி, 22 பேரூராட்சிகள் உள்ளன. தேனி மாவட்டத்தை மீண்டும் அதிமுக கோட்டையாக மாற்ற முயலும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்த உற்சாகத்தில் தேனி மாவட்ட நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றும் முனைப்பில் அக்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

 4 சட்டசபை தொகுதிகள்

4 சட்டசபை தொகுதிகள்

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தேனி மாவட்டம் அடிப்படையில் அதிமுகவின் கோட்டையாகும். போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கம்பம் தவிர்த்து பிற சட்டசபை தொகுதிகளில் அதிக முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக செயல்பட்டுள்ளனர்.

2 முதல்வர்கள் போட்டி

2 முதல்வர்கள் போட்டி

துவக்ககால அரசியலில் எம்.பி.யாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பிளவுப்பட்டபோது முதல் முதலாக 1989 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் தேர்வு செய்த தொகுதி போடி. அங்கு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரான முதல் பெண் என்ற பெயரை பெற்றார். அதன்பிறகு தான் அவர் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து முதல் அமைச்சர் பதவியை பிடித்தார். அதன்பிறகு 2002 இடைத்தேர்தல், 2006 சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா தவிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தான். இவர் போடி, பெரியகுளம் சட்டசபை தொகுதிகளில் மாறி மாறி போட்டியிட்டு வாகை சூடி முதல்வர் பதவியை பிடித்தார். தற்போது இவர் போடி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

 தனி செல்வாக்கு

தனி செல்வாக்கு

இதனால் தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு தனி செல்வாக்கு உண்டு. இதை நிரூபிக்கும் வகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடைய, தேனியில் மட்டும் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அதேநேரத்தில் மாவட்டத்தில் திமுக., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களுக்கும் வாக்குவங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி முதல் பாராளுமன்ற தேர்தல் வரை தேனி மாவட்ட அரசியல் நகர்வுகளை அனைவரும் கவனிப்பர். ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி இருக்கும்.

 6 நகராட்சிகள்

6 நகராட்சிகள்

தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் இந்நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் மாநகராட்சி இல்லை. தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, கம்பம், சின்னமனூர், கூடலுார் என 6 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளின் அனைத்து தலைவர் பதவிகளும் பெண்கள்(பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 6 நகராட்சிகளில் மொத்தம் 177 வார்டுகள் உள்ளன. இதில் சின்னமனூர், கூடூர் நகராட்சிகளில் தலா ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 175 வார்டுகளில் 99 பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

பெரியகுளம்

பெரியகுளம்

பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இது ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தஊர். இங்கு 19,332 ஆண்கள், 21,224 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 40560 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இந்த நகராட்சியில் 1996ல் ஓ.பன்னீர்செல்வம் தலைவராக இருந்தார். அதன்பிறகு அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலில் ஏற்றம் கண்டு முதல்வர் பதவி வரை பிடித்தார். அதன்பின் 2001ல் திமுக வசம் சென்ற நகராட்சியை 2006, 2011ல் அதிமுக கைப்பற்றியது. 2011ல் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நகராட்சி தலைவராக இருந்தார். இந்த நகராட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. நகராட்சி 24வது வார்டில் பன்னீர் செல்வத்தின் இன்னொரு சகோதரர் சண்முகசுந்தரம் களம் இறங்கியுள்ளார். நகராட்சியை அதிமுக கைப்பற்றும் நிலையில் சண்முக சுந்தரமும் வெற்றி பெற்றால் அவருக்கு நகராட்சி துணை தலைவர் பதவி கிடைப்பது உறுதி.

அதேநேரத்தில் பெரியகுளம் நகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் திமுகவும் திட்டங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் ஆட்சிக்கு திமுக வந்திருப்பது அந்த கட்சியினருக்கு ஊக்கத்தை அளிக்கிறது. இந்த நகராட்சி தேனி வடக்கு மாவட்டத்துக்குள் வருகிறது. இங்கு முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் தான் திமுக வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அதிமுகவில் இருந்து அமமுக சென்று தற்போது தங்க தமிழ் செல்வன் திமுகவில் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது.

போடி

போடி

போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 33,820 ஆண்கள், 35,511 பெண்கள், 6 இதரர் என மொத்தம் 69,337 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக உள்ள சட்டசபை தொகுதி போடியாகும். இதனால் இந்த நகராட்சி தேர்தலும் உற்றுநோக்கப்படுகிறது. இந்த நகராட்சி தலைவராக காங்கிரஸ் 11, திமுக 3, சுயேச்சைகள் 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக தலைவர் பதவிக்கு வந்தது இல்லை. இதனால் தற்போதைய தேர்தலில் அதிமுக தலைவர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க திமுக, காங்கிரஸ் கட்சிகளும் வரிந்து கட்டி நிற்கின்றன. சட்டசபை தொகுதி அதிமுகவிடம் இருந்தாலும் போடி நகராட்சியில் நாங்கள் தான் ராஜா என திமுக, காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். குறிப்பாக நகராட்சியை கைப்பற்ற திமுகவினர் வியூகங்கள் வகுத்து பம்பரமாக சுற்றி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 தேனி அல்லிநகரம்

தேனி அல்லிநகரம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 42031 ஆண்கள், 43646 பெண்கள், 77 இதரர் என மொத்தம் 85754 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள். மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 1996ல் சுயேச்சை, 2001ல் அதிமுக, 2006ல் காங்கிரஸ், 2011ல் அதிமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்தனர். இதில் 2006ல் தலைவராக இருந்த காங்கிரஸ் முனியாண்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் பதவியை இழந்தார். இதையடுத்து பொறுப்பு தலைவராக அப்போதைய திமுக நகராட்சி துணை தலைவர் இலகேஸ்வரன் 8 மாதம் செயல்பட்டார். அதன்பின் இந்நாள் வரை தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக சார்பில் நிரந்தர தலைவர் இருந்தது இல்லை.

இதனால் திமுக தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தேனி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் தனது மனைவி ரேணுபிரியாவுடன் களம் இறங்கியுள்ளார். நகராட்சி தலைவர் பதவிக்காக ரேணுபிரியா தான் வகித்து வந்த வடப்புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளார். இங்கு அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் அமைதியாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. தேனி நகர் வியாபாரிகள் மத்தியில் இயல்பாய் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என அதிமுகவும் மும்முரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

கம்பம், சின்னமனூர்

கம்பம், சின்னமனூர்

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 31,106 ஆண்கள், 33,121 பெண்கள், 5 இதரர் என 64232 வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம் ஓட்டுகள் கணிசமாக உள்ளது. இதேபோல் சின்னமனூர் நகராட்சி 27 வார்டுகளில் 18986 ஆண்கள், 20,041 பெண்கள், 3 இதரர் என மொத்தம் 39,030 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இந்த 2 நகராட்சிகளும் 2011ல் அதிமுக வசம் சென்றன. மீண்டும் நகராட்சிகளை தக்க வைக்க அதிமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் கம்பம் எம்எல்ஏவாக திமுகவின் ராமகிருஷ்ணன் உள்ளார். இது திமுகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

கூடலூர்

கூடலூர்

கூடலூர் பேரூராட்சி 2004ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சி தலைவராக இருந்த திமுக பாண்டியன் முதல் நகராட்சி தலைவரானார். அதன்பின் 2006ல் காங்கிரஸ், 2011ல் அதிமுக நகராட்சியை கைபற்றியது.
தற்போது இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. 18,267 ஆண்கள், 19,450 பெண்கள், 3 இதரர் என மொத்தம் 37,720 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நகராட்சி ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்டுள்ளது. இதனால் திமுக எம்எல்ஏ மகாராஜன் நகராட்சியை கைப்பற்ற ஆர்வம் காட்டுகிறார். அதிமுகவும் நகராட்சியை தக்க வைக்கும் நோக்கில் வேட்பாளர்களை களமிறக்கி செயல்பட்டு வருகிறது.

பேரூராட்சிகள்

பேரூராட்சிகள்

இதுதவிர மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. ஆண்டிபட்டி, போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, அனுமந்தம்பட்டி, ைஹவேவிஸ், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, குச்சனூர், மார்க்கையன்கோட்டை, மேலசொக்கநாதபுரம், ஓடைப்பட்டி, பழனிசெட்டிபட்டி, பண்ணைபுரம், புதுப்பட்டி, தாமரைக்குளம், தென்கரை, தேவாரம், உத்தமபாளையம், வடுகப்பட்டி, வீரபாண்டி ஆகியவை பேரூராட்சிகளாக உள்ளன. மொத்தம் 336 வார்டுகள் உள்ளன. இதில் குச்சனூரில் ஒன்று, வடுகபட்டியில் 4 என மொத்தம் 5 வார்டுகளுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 331 வார்டுகளில் 1960 பேர் போட்டியில் உள்ளனர்.

இதில் 2011 தேர்தலில் அதிமுக 15 பேரூராட்சி, திமுக 4 பேரூராட்சி, காங்கிரஸ் 2 பேரூராட்சிகளை கைப்பற்றியது. சுயேச்சை ஒரு பேரூராட்சியை பிடித்தார். இந்த முறை அதிக பேரூராட்சிகளை பிடிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் தங்க தமிழ்செல்வன், ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் பன்னீர்செல்வமும் வேட்பாளர்களை நேரிடையாக ஆலோசனை நடத்தினார். நகராட்சி பேரூராட்சிகளில் மேற்கொள்ள் வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறினார். நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றுவதில் பன்னீர் செல்வம் அதிக ஆர்வம் காட்டுகிறார். இவருக்கு உதவியாக அதிமுக எம்.பியான அவரது மகன் ரவீந்திரநாத், அவரது ஆதரவாளர்கள் உதவி வருகின்றனர்.

பிற கட்சிகள்

பிற கட்சிகள்

மாவட்டத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தவிர்த்து பாஜக, மக்கள் நீதிமய்யம், அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியினர் தனித்து போட்டியிடுகின்றனர். சுயேச்சைகளும் பணபலம், ஜாதிபலத்துடன் களம் இறங்கியுள்ளனர். இதனால் சில வார்டுகளை அவர்கள் கைப்பற்றலாம். பல வார்டுகளில் ஓட்டுகளை பிரிக்கும்பட்சத்தில் அது அதிமுக, திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு வேட்டு வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 பிரதான போட்டி யாருக்கு

பிரதான போட்டி யாருக்கு

பிற கட்சிகள் போட்டியிட்டாலும் நகராட்சி, பேரூராட்சிகளில் பிரதான போட்டி என்பதும் அதிமுக, திமுக இடையே தான் உள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் அதிமுக, திமுக சமபலத்துடன் உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து வெற்றி மாறுபடும்.
அத்துடன் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போதிய அளவு மற்றும் வெற்றி வாய்ப்புள்ள வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அக்கட்சி பிரமுகர்கள் சிலர் தனித்து களம் காண்கின்றனர். இதில் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+